தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ’ஈபிஎஸை வீழ்த்துவாரா செல்வ கணபதி!’ சேலம் நாடாளுமன்றத் தொகுதி கள நிலவரம்!

HT MP Story: ’ஈபிஎஸை வீழ்த்துவாரா செல்வ கணபதி!’ சேலம் நாடாளுமன்றத் தொகுதி கள நிலவரம்!

Kathiravan V HT Tamil
Apr 14, 2024 07:15 AM IST

”இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளனர்”

சேலம் நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்!
சேலம் நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்!

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சேலம் நாடாளுமன்றத் தொகுதி!

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கும் சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக சேலம் நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. 

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர், சேலம் -1 , சேலம் -2, ஏற்காடு, ஓமலூர், வீரபாண்டி, பனைமரத்துப்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. 

அதிக முறை வென்ற காங்கிரஸ் கட்சி!

இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளனர். 

சுயேச்சையாக வென்ற வாழப்பாடியார்!

1998ஆம் ஆண்டு தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட வாழப்பாடி ராம மூர்த்தி எம்.பியாக வெற்றி பெற்றார். கே.ராஜாராம், ரங்கராஜன் குமார மங்கலம், டி.எம்.செல்வகணபதி, கே.வி.தங்கபாலு, செம்மலை உள்ளிட்டோர் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் வென்ற முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். 

அமோக வெற்றி பெற்ற திமுக!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் 606,302 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். 

அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் 4,59,376 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யத்தின் பிரபு மணிகண்டன் 58,662 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளர் எஸ்.கே.செல்வம் 52,332 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் ராசா 33,890 வாக்குகளையும் பெற்றனர்.

தற்போது யார்?

தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் டி.எம்.செல்வ கணபதி வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அதிமுக சார்பில் பி.விக்னேஷ், பாஜக கூட்டணி சார்பில் பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ் குமார் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர். 

களம் யாருக்கு?

ஊழல் வழக்கு தண்டனை, தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்ட சிக்கல்களுக்கு பிறகு சேலத்தில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார் டி.எம்.செல்வ கணபதி, திமுக அரசின் கூட்டணி பலம், தனது சமுதயா அடையாளம், மக்கள் உடனான பரிட்சயம், மோடி அரசின் மீதான அதிருப்தி, திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்டவை அவருக்கு பலம் சேர்க்கலாம். 

ஈபிஎஸ்சின் தேர்தல் வியூகம், அதிமுகவின் கட்டமைப்பு பலம் ஆகியவை அதிமுக வேட்பாளருக்கு பலம் சேர்க்கும். 

பாமகவின் கட்டமைப்பு பலம், மோடி அரசு மீதான ஆதரவு வாக்குகள் உள்ளிட்டவை பாமக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக இருக்கும். முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களில் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு வலு சேர்க்கும்.  

WhatsApp channel