Minister Raghupathi: பொன்முடி பவர்ஃபுல் துறையில் இருந்து மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்!
Oct 02, 2024, 01:17 PM IST
ஆளுநருடான மோதல் போக்கை கைவிட்டுக்கு, இணக்கமாக செயல்பட தமிழக அரசு விரும்பியதன் காரணமாகவே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
தமிழக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, நாசர், கொறடாவாக இருந்த கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய நான்கு பேர் சமீபத்தில் அமைச்சரைவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், க.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சூழலில், கட்சியிலும், அமைச்சரவையிலும் பெரிய துறை என ஆதிக்கம் செலுத்திவந்த பொன்முடியின் துறை மாற்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஆளுநருடான மோதல் போக்கை கைவிட்டுக்கு, இணக்கமாக செயல்பட தமிழக அரசு விரும்பியதன் காரணமாகவே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பொன்முடி துறை மாற்றத்திற்கு ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் என்பது காரணம் அல்ல என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சர் பொன்முடியின் உயர்கல்வித் துறை மாற்றம் செய்யப்பட்டதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் என்பதால் அல்ல. உயர்கல்வித் துறை பின்தங்கிய சமூகத்தினருக்கும் சென்றடைந்த வேண்டும் என்பதற்காக மாற்றி வழங்கப்பட்டுள்ளது. நானும் சட்டப்பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கவில்லை. அன்றைய நாளில் எனக்கு வேறு பணிகள் இருந்தன. அதனால் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதுகுறித்து அப்போதே பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளரிடத்தில் சொல்லிவிட்டேன்.
மனோதங்கராஜ் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்ததால் தான் பதவி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மை இல்லை. புதுக்கோட்டை மாவட்ட சிறையில் சிறைவாசிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கு அங்கிருந்த குடிநீர்த் குழாயில் ஏற்பட்ட பழுதுதான் காரணம். அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் நேரில் ஆய்வு செய்யலாம். ஒட்டுமொத்த அத்தனை திமுகவினரும் எதிர்பார்த்த பல வகைகளில் முதல்வரிடம் வலியுறுத்தியபடியே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
200 தொகுதிகளில் வெற்றி உறுதி
வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருடைய பணிகள் முதல்வர் நிர்ணயித்துள்ள 200 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்யும். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது செல்போனை வீசினார்களா? கைதவறி விழுந்ததா? என்பதில் அவர்களே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. உள்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை." என அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி, “அமைச்சரவை மாற்றம் தற்போது அடிக்கடி நடப்பதில்லை.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஆட்சியில், எந்த அமைச்சர் பதவியில் இருக்கிறார், யார் இல்லை என்பதை செய்தியைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அமைச்சர்கள் அச்சத்துடன் இருந்தனர். ஆனால், திமுக ஆட்சியில் அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படும் சூழலை முதல்வர் உருவாக்கியுள்ளார்.” என்றார்.