Election Results 2024:’நாளை ரிசல்ட்! உஷாரய்யா உஷாரு’ ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை! தொண்டர்களுக்கு கூறும் அறிவுரை இதுதான்!
Jun 03, 2024, 09:18 AM IST
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தொடங்கி கடந்த ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் முகவர்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள அறிவுரை:-
“ஜூன் 4 - ஆற்ற வேண்டிய கடமைகள்! என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
- வாக்கு எண்ணிக்கை முகாமிற்கு முதலில் செல்லும் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் நம்முடைய கழக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இருக்க வேண்டும்.
- தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிக கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தபால் வாக்குகள் இரண்டு வகைப்படும். 1. ETPBS, 2. சாதாரண தபால் வாக்கு.
- அதற்குரிய வழிமுறைகளை உங்களுக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி செல்லாத வாக்குகளை செல்லத்தக்கதாகவும், செல்லத்தக்க வாக்குகளை செல்லாததாகவும் அறிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
- எப்படி EVM வாக்குகள் முக்கியமோ, தபால் வாக்குகளும் மிக முக்கியமானவை. எனவே, அந்த எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
- வாக்கு எண்ணிக்கை முதலில் தபால் வாக்குகளில் மட்டும்தான் துவங்க வேண்டும். முதல் அரை மணி நேரம் கழித்துத்தான் EVM வாக்கு இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும்.
- தபால் வாக்குகள் எண்ணிக்கையை என்ன காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல் துரிதமாக எண்ணி அதனுடைய முடிவுகளைத் தருவதை உறுதிசெய்ய வேண்டும்.
- EVM இயந்திரங்களை எண்ணுவதற்கு முன்பாக அந்த EVM இயந்திரங்களில் இருக்கும் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- இயந்திரங்களின் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்த பிறகு, இயந்திரத்தின் எண்கள் சரியாக இருக்கிறதா என்பதை படிவம் 17C-இல் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்து அதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- 17C படிவத்தில் உள்ள பதிவான வாக்குகள் EVM இயந்திரத்திலும் ஒத்துப்போகிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிறகு, வாக்குப் பதிவு துவங்கிய நேரம் மற்றும் முடிவுற்ற நேரத்தை EVM இயந்திரத்தில் பார்த்து, சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
- இவற்றில் ஏதாவது ஒன்றில் சீல்கள் கிழிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இயந்திர எண் ஒத்துப்போகவில்லை என்றாலோ, பதிவான வாக்குகள் ஒத்துப்போகவில்லை என்றாலோ, வாக்குப் பதிவு நேரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலோ, வாக்கு எண்ணிக்கைக்கு அந்த இயந்திரத்தை அனுமதிக்காமல் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
- வாக்கு எண்ணிக்கை முகவர்கள் குறிப்பாக RO Table-க்கு செல்லும் வாக்கு எண்ணிக்கை முகவர் இதுகுறித்த கையேடுகளையும், சட்டங்களையும் அறிந்தவராக இருத்தல் நலம்.
- வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து VVPAT இயந்திரங்களை எடுத்து அதில் உள்ள காகித வாக்குகளை எண்ணி, EVM இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- படிவம் 17C-இல் நிரப்பப்படும் வாக்குகள் சரியாக படிவம் 20-இல் எழுதப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- படிவம் 20-இல் எழுதப்பட்ட வாக்குகள் மொத்த வாக்குகளாக எண்ணப்படும்போது அல்லது கூட்டப்படும்போது அந்த எண்ணிக்கையில் ஏதும் தவறில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு, படிவம் 20-இல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் பெறப்பட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து வெளியே வர வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிவுரை:-
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 4.6.2024 அன்று, கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே, தேர்தல் நடத்தும் அலுவலரால் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையுடன் (Identity Card) வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்றுவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் காலதாமதமாக செல்லக்கூடாது.
வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேஜைகளுக்கேற்றார்போல் வாக்கு எண்ணும் முகவர்களை நாம் நியமித்திருக்கிறோம். அந்த முகவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற நாற்காலிகளில் முதலில் சென்று அமர்ந்துவிட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே சென்றவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிற வரை எக்காரணம் கொண்டும் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வெளியே வரக் கூடாது. மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும் என கூறி உள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கொடுத்த அறிவுரை:-
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பாக, நமது முகவர்கள், கன்ட்ரோல் யூனிட்டில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணும், வாக்குப் பதிவின்போது அந்த எந்திரத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்த எண்ணும் ஒன்றுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள முத்திரை, நமது கண்முன்னே தான் திறக்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு எந்திரத்திலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை, வாக்குப் பதிவு தினத்தன்று வழங்கப்பட்ட 17C படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையோடு ஒத்துப்போகிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
படிவம் 17C மற்றும் படிவம் 20 இரண்டிலும், வாக்குகள் எண்ணிக்கை ஒத்துப் போவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், படிவம் 20 குறிப்பிடப்படும் வாக்குகள் கூட்டப்படும்போது, எண்ணிக்கையில் ஏதும் தவறில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக, படிவம் 20ல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்படும் வரை, வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகாமில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு எந்திரத்தின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும்போதும், முகவர்கள் அந்த எண்ணிக்கையைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மொத்த வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும், 5 வாக்குப் பதிவு மையங்களைத் தேர்ந்தெடுத்து, VVPAT எனப்படும் ஒப்புகைச் சீட்டுடன், பதிவான வாக்குகளைச் சரிபார்க்கும் பணி நடைபெறும். அதில் ஏதேனும் தவறாக இருந்தால், தலைமை முகவர் வழியாக, மைய தேர்தல் அதிகாரியிடம் முறையிடலாம். வாக்குப்பதிவு எந்திரத்தையும், விவிபேட் எந்திரத்தையும் சரிபார்த்து, எண்ணிக்கையில் குளறுபடி இருப்பது நிரூபிக்கப்பட்டால், குறிப்பிட்ட எந்திரத்தின் வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்படும் எனவே அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும் என கூறி உள்ளார்.