Modi vs MK Stalin: ’ஒடிசா மக்களை தமிழ்நாட்டுக்கு எதிராக தூண்டிவிடுவதா!’ பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Modi Vs Mk Stalin: ’ஒடிசா மக்களை தமிழ்நாட்டுக்கு எதிராக தூண்டிவிடுவதா!’ பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Modi vs MK Stalin: ’ஒடிசா மக்களை தமிழ்நாட்டுக்கு எதிராக தூண்டிவிடுவதா!’ பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Kathiravan V HT Tamil
May 21, 2024 10:25 PM IST

ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? என மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

’ஒடிசா மக்களை தமிழ்நாட்டுக்கு எதிராக தூண்டிவிடுவதா!’ பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
’ஒடிசா மக்களை தமிழ்நாட்டுக்கு எதிராக தூண்டிவிடுவதா!’ பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தூண்டிவிடுவது நாட்டுக்கு நல்லதல்ல

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை - கோட்பாடுகள் - செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் - மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல!

தமிழ் மக்களை இழித்தும் பழித்தும் பேசுகிறார்

முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார். மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று எனது கண்டனத்தை அப்போதே தெரிவித்து இருந்தேன். சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணர்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன். ஆனாலும் தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ளவில்லை.

பொக்கிஷ அறைகளின் சாவிகள் தமிழ்நாட்டிலா?

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

ஒடிசா மக்களை தமிழ்நாட்டுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்

ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது?

ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?

தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா?

தமிழர்கள் மீது மோடிக்கு காழ்ப்பு ஏன்?

தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்!

வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். 

அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு 

ஒடிசாவை ஆள வேண்டியது மண்ணின் மைந்தன் தானே தவிர தமிழ் பாபு அல்ல என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், ஒடிசாவின் பெருமை, மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஆளும் பிஜூ ஜனதாதளம் அரசு அவமதிப்பதாக குற்றம்சாட்டிய அமித்ஷா “பாஜகவுக்கு வாக்களித்தால், ஒடிசா மண்ணை சேர்ந்த ஆற்றல் மிக்க, கடின உழைப்பாளி ஒருவரை முதலமைச்சராக ஆக்குவோம் என கூறினார்.

ஒடியா மக்களின் பெருமையை நசுக்குகிறார்

ஒடிசாவில் அதிகாரிகள் ஆட்சியை நவீன் பட்நாயக் கட்டாயப்படுத்துவதாக கூறீய அமித்ஷா, ஒடியா மக்களின் பெருமை மற்றும் கண்ணியத்தைத் தாக்குகிறார். அவர் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பெருமையை நசுக்குகிறார் என குற்றம்சாட்டினார்.

’ஒடிசாவை ஆள்வது தமிழ் பாபு அல்ல’

விரைவான வளர்ச்சி மற்றும் அவர்களின் வளமான கலாச்சாரத்தைப் பாதுகாப்பதை உறுதிசெய்ய மாநிலத்தில் பாஜக ஆட்சியைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், “மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், மண்ணின் மைந்தன், உத்கல பூமியை ஆள்வான்; தமிழ் பாபு அல்ல” என்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உதவியாளரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனை மறைமுகமாக சாடினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.