Top 10 News: இளம் பெண் மீது சரமாரி தாக்குதல்.. தமிழ்நாட்டுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. ரமணியின் குடும்பத்துக்கு நிதியுதவி!
Nov 21, 2024, 01:16 PM IST
இளம் பெண் மீது சரமாரி தாக்குதல், தமிழ்நாட்டுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட், ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி என இன்றைய முக்கிய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
ஒத்தக்கடை அருகே காதலிக்க வற்புறுத்தி பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளார், தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு,ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி என இன்றைய முக்கிய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25-ம் தேதி முதல் நடைபெறும்
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவம்பர் .25-ம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு 25-ம் தேதி சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. அன்னை மருத்துவ கல்லூரி, எம்.ஜி.ஆர். மருத்துவ கல்லூரிக்கு தலா 50 இடங்களில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இளம் பெண் மீது சரமாரி தாக்குதல்
ஒத்தக்கடை அருகே காதலிக்க வற்புறுத்தி பெண் மீது இளைஞர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளார். பலத்த காயமடைந்த பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் ஜெராக்ஸ் கடையில் பணியாற்றிய பெண்ணை இளைஞர் சித்திக் ராஜா தாக்கியுள்ளார். பெண் மீது தாக்குதல் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒசூர் அருகே லாரி மோதி குழந்தை உள்பட 2 பேர் பலி
ஒசூர் அருகே பி.செட்டிப்பள்ளி பகுதியில் கார் மீது டிப்பர் லாரி மோதியதில் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் நடந்த விபத்தில் 18 மாத குழந்தை, பெண் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
பட்டுக்கோட்டை அருகே நேற்று கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு அமைச்சர் கோவி. செழியன் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த ரமணியை நேற்று காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கும்பக்கரை அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,145க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.101க்கு விற்கப்படுகிறது.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது புயலாக வலுப்பெற்றால் ஃபெங்கல் என பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல் விடுத்த வழக்கு
கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி. ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க அனுமதி அளித்த நிலையில், ரேஸ் கோர்ஸ் போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ஊசி போட்ட பெண் உயிரிழந்தார்
கொடைக்கானலில் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் உயிரிழந்தார். பெண் உயிரிழப்பு குறித்து சுகாதாரத் துறை, காவல் துறை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட நிலையில் பிரியதர்ஷினி பலியானார்.
டாபிக்ஸ்