TOP 10 NEWS: ’தவெக தலைவர் விஜயை சீண்டிய முதல்வர் முதல் வானிலை எச்சரிக்கை வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: தவெக தலைவர் விஜயை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுகவினர் மீதான தாக்குதலுக்கு ஈபிஎஸ் கண்டனம், தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, திமுகவுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
தமிழ்நாட்டில் நடைபெற்ற இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.புதிய கட்சி தொடங்குபவர்கள் குறித்து விமர்சனம்
புதிய கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என்று பேசுகின்றனர். திமுக ஆட்சிக்கு வருவது சில ஊடகங்களுக்கு பிடிக்கவில்லை. மூன்று ஆண்டு கால திமுக ஆட்சி செய்திருக்க கூடிய சாதனைகளை திமுகவுக்கு எதிராக கட்சி தொடங்குபவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். தேவை இல்லாமல் சிலருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
2.திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு
சென்னை திருவொற்றியூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட பள்ளியில் மீண்டும் மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 10 நாட்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3.காவலர்களை தாக்கியவர்கள் கைது
சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பள்ளப்பட்டி காவல் உதவி ஆய்வாளர்சரவண வேலன் மீது தாக்குதல் நடத்தியதாக பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
4.பயணியை தாக்கிய நடத்துநர் சஸ்பெண்ட்
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி - நெல்லை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் மூட்டை முடிச்சுகளுடன் ஏறிய பயணியை நடத்துநர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடத்துநர் சஸ்பெண்ட்.
5.ராகுல் காந்திக்கு வானதி கேள்வி
வயநாட்டில் சகோதரி பிரியங்காவின் வெற்றிக்காக தனது தந்தை ராஜீவ் காந்தி கொலையை வைத்து ராகுல் காந்தி அனுதாபம் தேடுகிறார். நளினியை சந்தித்த பிரியங்கா காந்தி, ராஜீவ் காந்தியோடு கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி.
6. அதிமுக கிளை செயலாளர் வெட்டிக் கொலை
சிவகங்கை மாவட்டம் நட்டாகுடி கிராமத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
7. தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் வளர்ச்சி, கட்டமைப்பு என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்க வகை செய்யும் தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டம் கடந்த அக்டோபர் 18&ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத் தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியும், பல்வேறு உழவர் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்த பிறகும், தனியார் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
8. சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் நவம்பர் 3ஆம் தேதியான நேற்று சிறப்பு பேருந்துகள் மூலம் 79 ஆயிரத்து 626 பேர் முன்பதிவு செய்து பயணித்து உள்ளனர் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தகவல்.
9. 17 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
10. எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.