Top 10 News : நலம் விசாரித்தார் முதல்வர்.. நகராமல் நின்றுபோன தாழ்வு மண்டலம்.. எம்.பி.,யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!
Nov 28, 2024, 01:45 PM IST
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின், எம்.பி.,யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நகராமல் அப்படியே நிற்கிறது, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., இ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல்நிலைக் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
மீண்டும் நகராமல் நின்றுபோன தாழ்வு மண்டலம்!
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நகராமல் அப்படியே நிற்கிறது. கடந்த சில மணி நேரங்களாக 2 கி.மீ வேகத்தில் நகர்ந்துவந்த நிலையில், தற்போது நகராமல் நின்றுபோய் உள்ளது. மெதுவாக நின்று நின்று அது நகர்வதால், இன்று இரவுதான் புயல் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலையே புயல் உருவாகும் என நேற்று கணிக்கப்பட்டது.
பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
புதுக்கோட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பணி நிமித்தமாக பைக்கில் சென்ற மண்டையூர் காவல் நிலைய பெண் காவலர் விமலா விபத்தில் உயிரிழந்தார்.
180 கிராம் தங்கம் திருச்சியில் பறிமுதல்
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.13.69 லட்சம் மதிப்புள்ள 180 கிராம் தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவக் கண்காணிப்பில் இருந்த தெய்வானை, 11 நாட்களுக்குப் பின் வெளியே வந்தது
திருச்செந்தூரில் பாகன் உட்பட 2 பேரை தாக்கிய கோயில் யானை தெய்வானை, 11 நாட்கள் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளது. அதிகாலையிலேயே யானையை குளிப்பாட்டி நவதானிய உணவுகள் வழங்கப்பட்டது. தற்போது தெய்வானை உண்டு மகிழ்ந்து வருவதாக கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
எம்.பி.,யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, எம்.பி.,யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி. கேரளாவின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து, இந்திய அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்திவாறு பதவியேற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு
அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள், 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் ரூ.1000 வழக்கப்படும். மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 9ம் தேதிக்குள், மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி?
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக நான்கு தரப்பினரிடமிருந்து கையூட்டாக பெறப்பட்ட ரூ.11.70 லட்சம் பணத்துடன் கையூட்டு தடுப்புப் பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஜஹாங்கீர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவரை திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.28) சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.56,720க்கும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,090க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.106 கோடி சொத்துகள் பறிமுதல்
ஆன்லைன் விளையாட்டு, பணம் இரட்டிப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்ட நிறுவனங்களின் ரூ.106 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதலீட்டுக்கு இரு மடங்கு லாபம் வழங்குவதாக ஆசை காட்டி ஏமாற்றிய முகமூடி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்