Kallakurichi: 2 ஆண்டுகளில் 60 மரணங்கள்! இனியும் முதல்வராக தொடர வேண்டுமா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
Jun 20, 2024, 04:18 PM IST
Kallakurichi Liquor Deaths: கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச் சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட்
கள்ளசாராயம் அருந்தி 35 பேர் உயிரிழந்து இருக்க கூடிய நிலையில் இனியும் முதலமைச்சராக தொடர வேண்டுமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ள இடுகையில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண ஓலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 116 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றிரவு 16 ஆக இருந்த நிலையில், தற்போது 38 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
விசாரணை அதிகாரி நியமனம்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு தலைமையில், விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.