Kallakurichi: கள்ளச் சாராய மரணம்! 10 லட்சம் நிவாரணம்! விசாரணை ஆணையம் மூலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
Kallakurichi liquor death: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க நடைபெறாமல் இருக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மீண்டும் இன்று அவர்களுடன் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களும் கள்ளக்குறிச்சிக்குச் சென்றுள்ளார்.