Senthil Balaji Hospitalised: செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு! உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! அவசர சிகிச்சை!
Jul 21, 2024, 05:08 PM IST
Senthil Balaji Hospitalised: புழல் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவால் ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
செந்தில் பாலாஜி மீதான வழக்குகள்
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில்தான் சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
ஓராண்டாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை
கைதான சில நாட்களில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறையில் இருந்தபடியே இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
நடந்தது என்ன?
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் அதில் இடம் பெறவில்லை. 2016 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மோசடி வழக்குப்பதிவு
தொடர்ந்து முறைகேட்டு புகாரின்படி, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சம்மனும் அனுப்பியது. ஆனால், உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்ந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் செந்தில்பாலாஜி. அதே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை எனக் கோரிக்கை வைத்தது. 2022 ஆம் ஆண்டு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜியும் உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். இந்த வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.