Tamil Top 10 News: நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு முதல் விமான கட்டணம் இருமடங்கு வசூல் வரை - மாலை டாப் 10 நியூஸ் இதோ..!
Nov 05, 2024, 07:42 PM IST
சர்ச்சை பேச்சு தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு, புதிய தலைமைச் செயலகம் வழக்கு, விமான கட்டணம் இருமடங்காக வசூல் உள்பட இன்றைய மாலை நேரத்திற்கான டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், அரசியல் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு
தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம்
ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிராமண சமுகம் ஒடுக்கப்படுகிறது' என்ற பெயரில் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. ஊடகத்தின் கவனத்தை ஈர்க்க திராவிட இயக்கத் தலைவர்களைக் குறிப்பாகத் தந்தை பெரியார், டாக்டர் கலைஞர் உள்ளிட்டவர்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார்கள். ‘பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்’ என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு: அதிமுக மனு தள்ளுபடி
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை, உயர் நீதிமன்றம் கலைத்ததற்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், 2018ம் ஆண்டு வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீதிமன்றம், அந்த ஆணையத்தால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக அதைக் கலைத்து உத்தரவிட்டது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் தொடங்கியது
மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரு வகையாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கின. மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரு வகையாக நடக்கின்றன. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் இப்போட்டிகள் வரும் 11ம் தேதி வரை நடக்க உள்ளன.
விவசாயிகள் ஆசையை நிறைவேற்றிய உரிமையாளர்
தனது ஏஜென்சியில் உரம் வாங்கும் 100 விவசாயிகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் அழைத்து சென்ற பிருந்தா ஏஜென்சி உரிமையாளார். ஸ்பிக் உர நிறுவனத்திடம் உரம் வாங்கி சுமார் 21 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த ஏஜென்சி விற்று வருகிறது.
கருணாநிதி சிலை திறப்பு
திருவெண்ணெய்நல்லூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், ஆஸ்ரமம், பதினெட்டாம்படி, அக்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் சிறப்பு பூஜை
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அவரது சொந்த ஊரான துளசேந்திரப்புரத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
வருத்தம் தெரிவித்தார் கஸ்தூரி
"அனைவரின் நலன் கருதி நவம்பர் 3-ம் தேதி தெலுங்கு மக்களை குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன். அன்றைய என்னுடைய உரையில் இடம் பெற்ற முக்கியமான கருத்துகளை இந்த சர்ச்சை தேவையில்லாமல் திசை திருப்பி இருக்கிறது” என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
விமான கட்டணம் இருமடங்கு வசூல்
சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடிவிட்டு ஏராளமானோர் விமானங்களில் சென்னை திரும்பியதால், விமான பயணக் கட்டணம் இருமடங்காக வசூலிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்ததால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ரயில், பேருந்து, விமானங்களில் சொந்த ஊருக்கு சென்றனர்.
டாபிக்ஸ்