ADMK Boycotts Vikravandi By-Election: ’துணி துவைக்க கூட திமுக ரெடி!’ தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் பேட்டி!
Jun 15, 2024, 06:03 PM IST
ADMK Boycotts Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் சர்வசாதாரணமாக புழங்கும், அண்டா, குண்டா, செம்பு, தங்க செயின், கொலுசு உள்ளிட்டவற்றை தருவார்கள். வீட்டில் துணி துவைத்து, பாத்திரம் கூட திமுகவினர் கழுவி தருவார்கள். ஒரு தொகுதி தேர்தலை புறக்கணிப்பதால் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.
வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்து உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விடியா திமுக அரசு அராஜகத்தின், அட்டூழியத்தின் அடையாளமாக உள்ளது. பண பலம், படைபலத்தை கொண்டு ஜனநாயகத்தை குழித் தோண்டி புதைக்கும் செயலை திமுக அரசு செய்து வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை கொன்று, மக்களை ஆடு, மாடுகளை போல் பட்டியில் அடைத்து திமுக சதி செய்தது.
திருமங்கலம் ஃபார்முலா மூலம் சாம, தான, பேத, தண்டத்தை பயன்படுத்தி போலி வெற்றியை பெற எல்லா முயற்சியையும் திமுகவினர் செய்வார்கள்.
2009ஆம் ஆண்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 5 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலை புறக்கணித்தார்கள். திமுக ஆட்சியில் இருக்கும் வரை தேர்தல் சுதந்திரமாக இருக்காது என்பதால் அம்மா அவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள். எனவே இன்றைக்கு கழக பொதுச்செயலாளர் தலைமையில், விவாதித்ததன் அடிப்படையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம்.
தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தோம் ஆனால் ஒரு நடவடிக்கையை கூட எடுக்கவில்லை. சென்னை மாநகராட்சி தேர்தலில் கூட உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு திமுக ஆளானது. குறுக்கு வழியில் வெற்றி பெற திமுக முயலும் என்பதால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம் என கூறினார்.
கேள்வி:- இனி நடக்கும் எந்த இடைத் தேர்தலிலும் அதிமுக போட்டியிடாதா?
இப்போது வரை விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகத்தான் முடிவு செய்து உள்ளோம்.
கேள்வி:- இடைத்தேர்தல் புறக்கனிப்பு கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தாதா?
2009இல் அதிமுக இதே போல் இடைத்தேர்தலை புறக்கணித்தது, ஆனால் 2011இல் அதிமுக ஆட்சியை பிடித்தது.
கேள்வி:- இந்த முடிவால் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை இழப்பு ஏற்படாதா?
மக்கள் நம்பிக்கையை பெற்ற இயக்கம்தான் அதிமுக, இதனால்தான் ஒரு கோடி ஓட்டுகளை நாங்கள் பெற்று உள்ளோம். இந்த இடைத்தேர்தலில் பணம் சர்வசாதாரணமாக புழங்கும், அண்டா, குண்டா, செம்பு, தங்க செயின், கொலுசு உள்ளிட்டவற்றை தருவார்கள். வீட்டில் துணி துவைத்து, பாத்திரம் கூட திமுகவினர் கழுவி தருவார்கள். ஒரு தொகுதி தேர்தலை புறக்கணிப்பதால் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.
கேள்வி:- அதிமுகவுக்கு தோல்வி பயமா?
எதிர்க்கட்சிகள் ஆயிரம் விமர்சனம் செய்தலும், நிதர்சனத்தை பார்க்க வேண்டும். ஜனநாயக ரீதியாக தேர்தல் நடக்கும் என்பதை யாராவது மனசாட்சி தொட்டு சொல்ல முடியுமா?
கேள்வி:- பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறீர்களா?
எதார்த்த நிலையை உணர்ந்து முடிவு எடுத்து உள்ளோம். பாஜக, நாம் தமிழர் கட்சியை பெரிய கட்சியாக நாங்கள் கருதவில்லை.