Natarajan Cricket Ground: நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கும் டிகே - சிறப்பு விருந்தினராக யோகி பாபு
Jun 10, 2023, 11:58 PM IST
சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் கட்டியிருக்கும் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா குறித்து யார்க்கர் மன்னன் நடராஜன் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக நெட் பவுலராக சென்று ஒரே தொடரில் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடி ஜொலித்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான தங்கராசு நடராஜன்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் தனது யார்க்கர் பந்து வீச்சால் கவனத்தை ஈர்த்த நடராஜன், ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியால ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர் சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய பவுலராக இருந்து வருகிறார்.
சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்தபோதிலும், காயம் காரணமாக வாய்ப்பை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். காயத்திலிருந்து மீண்ட பிறகு தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று தனது பாணியில் யார்க்கர் பந்துகளை வீசி மீண்டும் கவனம் பெற்றார்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் தனது சொந்த ஊரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து தனது ஊரில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டியுள்ளார் நடராஜன். சொந்த ஊரில் மைதானம் அமைப்பது தனது கனவு என்று பல்வேறு பேட்டிகளில் கூறி வந்த நடராஜன், தற்போது அதை நிஜமாக்கியுள்ளார்.
நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது திறப்பு விழாவுக்கு தயாராகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக், நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை ஜூன் 23ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் நிர்வாகிகள் பழனி, சிஎஸ்கே நிர்வாகி விஸ்வநாதன், நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் மைதான திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
டாபிக்ஸ்