World Pharmacists Day:சுகாதார ஆலோசனைகள் வழங்குவது முதல் பொது சுகாதாரத்தை பேனி காப்பது வரை!மருந்தாளுநர்கள் தினம் பின்னணி
Sep 25, 2024, 06:00 AM IST
World Pharmacists Day 2024: சுகாதார ஆலோசனைகள் வழங்குவது முதல் பொது சுகாதாரத்தை பேனி காப்பது வரை மருத்துவமுறை மேம்படுத்துபவர்களாக மருந்தாளுநர்கள் இருக்கிறார்கள். உலக மருந்தாளுநர்கள் தினம் வரலாறு, முக்கியத்துவம், இந்த ஆண்டுக்கான கருபொருள் பற்றி தெரிந்து கொள்வோம்.
உலக மருந்தாளுநர்கள் தினம்: சுகாதார பாதுகாப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மருந்தின் அளவு மற்றும் பயன்பாட்டுக்கான வழிகாட்டுதல்கள் முதல் நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது வரை, மருந்தாளுநர்கள் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அனைவருக்கும் பாதுகாப்பான மருந்து அணுகலை உறுதி செய்பவர்களாக பார்மசிஸ்ட் என்று அழைக்கப்படும் மருந்தாளுநர்கள் இருக்கிறார்கள். மருத்துவ கவனிப்பு தேவைப்படுபவர்களுக்கு மருந்துகள் வழங்கப்படுவதை உறுதிசெய்வது சரியான அளவில் மருந்துகளை எப்படி எடுத்துக்கொள்வது என்று அவர்களுக்குத் தெரிவிப்பதையும், மருத்துவர்களின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை நோயாளிகளுக்கு தெளிவாக எடுத்துக்கூறும் நபர்களாகவும் மருந்தாளுநர்கள் இருக்கிறார்கள்.
மருத்துவ நிபுணர்களான இவர்களை கெளரவிப்பதற்காக உலக மருந்தாளுநர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சுகாதாரத் துறை மற்றும் ஒட்டுமொத்த மருத்துவ முறையை மேம்படுத்துவதில், மருந்தாளுநர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர்.
உலக மருந்தாளுநர்கள் தினம்
2009ஆம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் உலக மருந்தாளுநர்கள் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 25ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக மருந்தாளுநர்கள் தினம் வரலாறு
2009ஆம் ஆண்டில், துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் நடந்த உலக மருந்தியல் மற்றும் மருந்து அறிவியல் காங்கிரஸில், சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பு (FIP) கவுன்சிலால் உலக மருந்தாளுநர்கள் தினம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
1912 ஆம் ஆண்டு இதே நாளில், சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு (FIP) கவுன்சில் நிறுவப்பட்டது. அப்போதில் இருந்து, உலக மருந்தாளுநர்கள் தினம் செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது. எஃப்ஐபி, உலக மருந்தாளுநர்கள் தின பிரச்சாரம் என்பது மருந்தகங்கள் சமூகங்களுக்கு அளிக்கும் ஆதரவையும், அதன் சாதனையையும் கொண்டாடுவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. அதேபோல் மருந்தகங்களின் மதிப்பையும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பங்களிப்பு அளிக்கும் திறனையும் அறிய உதவுகிறது.
உலக மருந்தாளுநர்கள் தினம் முக்கியத்துவம்
இந்த நாளில், ஒவ்வொருவருக்கும் முறையான சுகாதார வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் மருந்தாளுநர்களின் முக்கிய பங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
உலகளாவிய ஆரோக்கியத்துக்கான அவர்களின் பங்களிப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் மதிப்பு இந்த சிறப்பு நாளில் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. மருத்துவ கவனிப்பு தேவைப்படுபவர்களுக்கும், சுகாதாரத்திலும், நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்வதிலும் மருந்தாளுநர்களின் முயற்சியை அங்கீகரிப்பது, அவர்கள் நமக்காக என்ன செய்கிறார்களோ அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும்தான் இந்த நாளைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழியாக இருக்கிறது.
உடல்நலம் மற்றும் பொது சுகாதாரத்தில் மருந்தாளுநர்களின் முக்கிய பங்கு
அத்தியாவசிய மருந்துகளுக்கான அணுகலை உறுதி செய்வதன் மூலமும் அவற்றின் உகந்த பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும் மருத்துவப் பாதுகாப்பு அமைப்புகளில் மருந்தாளுநர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்
சுகாதார ஆலோசனைகளை வழங்குதல், சுகாதார பரிசோதனைகளை நடத்துதல், நோயாளிகளுக்கு கல்வி கற்பித்தல், பொது சுகாதார பிரச்சாரங்களில் பங்கேற்பது மற்றும் புதிய மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நோயாளி பராமரிப்பு மற்றும் பொது சுகாதாரத்துக்கு அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றனர்.
மருந்தாளுநர்கள் மருந்துக் கண்காணிப்பில் முன்னணியில் உள்ளனர். நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிக்கின்றனர் மற்றும் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்கான கொள்கை மாற்றங்களை பரிந்துரைக்கின்றனர்.
கோவிட்-19 தொற்றுநோய் போன்ற உலகளாவிய சுகாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதில் மருந்தாளுநர்களின் முக்கிய பங்கு பற்றி பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
உலக மருந்தாளுநர்கள் தினம் 2024 கருப்பொருள்
உலக மருந்தாளுநர் தினம் 2024 ஆண்டுக்கான கருப்பொருளாக "மருந்தியலாளர்கள்: உலகளாவிய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்" என்பதாகும். உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அதன் பங்களிப்பைக் கொண்டாடுவதற்கும், உலகளாவிய சுகாதார விளைவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான திறனை வலியுறுத்துவதற்கும் தொழிலுக்கான ஒரு தளமாக இது செயல்படுகிறது.
டாபிக்ஸ்