உலக மாணவர் தினம்.. விதை அப்துல் கலாம் உடையது.. மாணவர் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் பொன்மொழிகள்
Oct 15, 2024, 08:43 AM IST
உலக மாணவர் தினம்.. விதை அப்துல் கலாம் உடையது.. மாணவர் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் பொன்மொழிகள் குறித்துப் பார்ப்போம்.
இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவரான அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. விண்வெளி விஞ்ஞானியாக தனது பணியைத் தொடங்கியது முதல் ஆசிரியராக தனது மாணவர்களுக்கு செய்த அர்ப்பணிப்பு வரை, கலாம் பல கீரிடங்களை தன் தலையில் சுமந்திருந்தார்.
அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு, அக்டோபர் 15ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் படகு உரிமையாளரான ஜெயினுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலிருந்தே விமானம், ராக்கெட், விண்வெளி ஆகியவற்றைப் பற்றி படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
அனைத்து சவால்களையும் தாண்டி, கலாம் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்ஐடி) ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்து முடித்தார் மற்றும் ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத் துறையில் பிரகாசமான வல்லுநராக மாறினார். அவரது வாழ்க்கை கதை கோடிக்கணக்கானவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
அப்துல் கலாமுக்கு மாணவர்கள் மீது இருந்த நம்பிக்கை:
டாக்டர் அப்துல் கலாமுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுகளான பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தியாவின் குடியரசுத் தலைவரான பிறகும், அப்துல் கலாம் பள்ளி குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் பழகுவதை விரும்பினார். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு ஆசைப்பட்டார்.
மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் என்றும், அவர்களால் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் உறுதியாக நம்பினார். அப்துல் கலாம் ஜூலை 27, 2015அன்று ஐஐஎம்-ஷில்லாங்கில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தும்போது மாரடைப்பால் சரிந்து விழுந்து இறந்தார்.
அப்துல் கலாமின் பொன்மொழிகள்:
அப்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவர்கள் தினமாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிரபலமான பொன்மொழிகள் குறித்துப் பார்ப்போம்.
- "நீங்கள் சூரியனைப்போல பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப்போல எரியுங்கள்."
- "உச்சிக்கு ஏறுவதற்கு வலிமை தேவை. அது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்காக இருந்தாலும் சரி அல்லது உங்கள் தொழில் வாழ்க்கையின் உச்சிக்கு செல்வதாக இருந்தாலும் சரி"
- "ஒரு பெரிய இலக்கு என்பது பல சிறிய இலக்குகள் சேர்ந்தது தான். எனவே, அதை எட்டிப்பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்’’
- "உறுதிப்பாடு என்பது நமது அனைத்து ஏமாற்றங்கள் மற்றும் தடைகள் மூலம் நமக்குக் கிடைக்கும் சக்தி. இது வெற்றிக்கு அடிப்படையான நமது மன உறுதியை உருவாக்க உதவுகிறது"
- "வாழ்க்கையில் வெற்றி பெறவும், முடிவுகளை அடையவும், நீங்கள் மூன்று வலிமையான சக்திகளைப் புரிந்துகொண்டு தேர்ச்சி பெற வேண்டும் - ஆசை, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு’’
- “மகத்தான கனவு காண்பவர்களின் மகத்தான கனவுகள் எப்போதும் நடந்துவிடுகின்றன.”
- "தனித்துவமாக செயல்படும் நீங்கள் உங்களுக்கு விதிக்கப்பட்ட இடத்தை அடையும் வரை ஒருபோதும் சண்டையிடுவதை நிறுத்தாதீர்கள். வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்திருங்கள், தொடர்ந்து அறிவைப் பெறுங்கள், கடினமாக உழையுங்கள், மகத்தான வாழ்க்கையை உணர விடாமுயற்சியுடன் இருங்கள்."
- '’நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு’’.
- '’நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்’’
- ‘’நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’’ என அப்துல் கலாம் கூறியிருக்கிறார்.
டாபிக்ஸ்