APJ Abdul Kalam: 'அக்னி சிறகே எழுந்து வா’: இந்தியாவின் கனவு நாயகன் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள்!
APJ Abdul Kalam: இந்தியாவின் கனவு நாயகன் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அக்னி சிறகாய் நம்மிடம் தன்னம்பிக்கையே வளர்த்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
APJ Abdul Kalam: இந்தியாவின் ஏவுகணை மனிதர் என அழைக்கப்படும், ஏபிஜே அப்துல் கலாமின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாற்பதாண்டுகளாக விஞ்ஞானியாக இருந்து இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிசெய்த ஏபிஜே அப்துல்கலாம், 1998ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொக்ரான் 2 அணுகுண்டு சோதனையின்போதும் மூளையாக செயல்பட்டவர்.
இந்தியா 2020ஆம் ஆண்டுக்குள் வல்லரசு ஆகவேண்டும் என்ற தன் கனவை விதைத்தவர். மக்கள் ஜனாதிபதியாக இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி தன்னம்பிக்கை மிக்க உரைகளை நிகழ்த்தியவர். அத்தகைய பெருமைமிகு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
யார் இந்த ஏபிஜே அப்துல் கலாம்?:
ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், 1931ஆம் ஆண்டு, ராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் மரைக்காயர் மற்றும் ஆஷியம்மா தம்பதிக்கு கடைசி மகனாகப் பிறந்தவர். ஏபிஜே அப்துல்கலாமின் தந்தை, அவ்வூரில் இருந்த மசூதியின் இமாம் ஆகவும், அவரது தாய் இல்லத்தரசியாகவும் இருந்தவர். மேலும், அவரது தந்தை தனுஷ்கோடிக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே படகு போக்குவரத்தினை நடத்திக்கொண்டிருந்தார். அப்துல் கலாம் பிறந்தபோது, குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. அதனால், சிறுவயதில் குடும்பத்தின் வருவாயைக் கூட்ட, ஏபிஜே அப்துல்கலாம் செய்தித்தாள்களை விற்றார்.
பள்ளியில் சராசரி மாணவராக இருந்தாலும், திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டம்பெற்றார். அதன்பின், மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலாஜியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் ஆக 1960ஆம் ஆண்டு பட்டம்பெற்றார்.
பாதுகாப்பு பணி முதல் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகர் வரை:
பின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் விஞ்ஞானியாக சேர்ந்தார்.
அதன்பின், விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயிடம் பணிசெய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி நன்கு அதைக் கற்றுக்கொண்டார். அதன்பின், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனமான எஸ்.எல்.வி-3-யின் திட்ட இயக்குநராக இஸ்ரோவில் பணிசெய்தார். அதன்பின், பி.எஸ்.எல்.வி என்னும் செயற்கைக்கோள் ஏவுதல் வாகன உருவாக்கத்திலும் முக்கியப் பணி செய்தார்.
அதன்பின், புராஜெக்ட் டெவில், பிராஜெக்ட் வேலியன்ட் ஆகிய பிராஜெக்ட்களில், இந்திரா காந்தியின் கீழ் ரகசியமாகப் பணியாற்றினார். அதன்பின், ஆர் வெங்கட்ராமன், ஜனாதிபதியாக இருந்தபோது, இண்டக்ரெட்டட் கைடட் மிஸல் டெவலப்மென்ட் புரோகிராமின் தலைமை செயல்படுத்தியாகப் பணிபுரிந்தார். அதன்பின் கலாம் 1992 முதல் 1999 டிசம்பர் வரை, பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்தார். அப்போதுதான் பொக்ரான் 2 சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"கலாம்-ராஜு ஸ்டென்ட்":
விமானவியல் விஞ்ஞானியான டாக்டர் கலாம், இதயநோய் நிபுணர் பி.சோம ராஜுவுடன் இணைந்து உள்நாட்டிலேயே கரோனரி ஸ்டெண்டுகளை உருவாக்கினார். 1994ஆம் ஆண்டில் இது சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கரோனரி ஸ்டென்ட்களின் விலையை பாதிக்குக்கீழ் வெகுவாக குறைத்தது. அதன் அடிப்படையில், கரோனரி இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றும் ஸ்டென்ட்டின் பல மேம்படுத்தப்பட்ட மாதிரிகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.
குடியரசுத்தலைவராக ஏபிஜே அப்துல்கலாம்:
11ஆவது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அப்துல் கலாமை முன்னிறுத்தியது. அவருக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சியும் தேசியவாத கட்சியும் செயல்பட்டன. இந்த குடியரசுத்தலைவர் தேர்தலில், அவரது எதிர்த்துப் போரிட்ட லட்சுமி சாகலை விட, 1,07,366 வாக்குகள் பெற்று, ஜூலை 25, 2002 முதல் ஜூலை 25, 2007 வரை குடியரசுத் தலைவராகப் பணிபுரிந்தார். அப்போது பள்ளி மாணவர்களையும் கல்லூரி மாணவர்களையும் ‘கனவு காணுங்கள்’; ‘ தூங்கச் சொல்வதல்ல கனவு, ஒருவரை தூங்கவிடாமல் செய்வது’ என்று ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார். இதனால் ‘மக்களின் ஜனாதிபதி’ எனப்புகழப்பட்டார். குடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிந்தபின்னரும், பள்ளி மற்றும் கல்லூரி மேடைகளிலும் மாணவர்களையும் உற்சாகப்படுத்தத் தவறவில்லை.
மேலும் ஏபிஜே அப்துல் கலாம், தான் எழுதிய அக்னி சிறகுகள், இந்தியா 2020, இலக்கு 3 பில்லியன், பற்றவைக்கப்பட்ட மனங்கள் ஆகியப் புத்தகங்களுக்காகவும் வெகுவாகப் பாராட்டப்பட்டார்.
இறுதியாக மேகாலயாவின் ஷில்லாங்கில் 2015ஆம் ஆண்டு, ஜூலை 27ஆம் தேதி ஐஐஎம் மேடையில் பேச சென்றபோது அப்துல் கலாம் சரிந்தார். அதன்பின், மருத்துவமனையில் இரவு 7:45 மணிக்கு அவரது உயிர் மாரடைப்பால் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின், அவரது உடல் ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பல முக்கியத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் அனைத்துக்கட்சியினராலும் மாணவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கனவுநாயகன் அப்துல்கலாமை நினைவுகூர்வது காலத்தின் கட்டாயம்!
டாபிக்ஸ்