மழைக்காலத்தில் ஆவி பிடித்தலின் அவசியம் என்ன? அதை எப்படி செய்யவேண்டும் – மருத்துவர் விளக்கம்!
Oct 29, 2024, 06:00 AM IST
மழைக்காலம் துவங்கிவிட்டது. மழைக்காலத்தில் நாம் செய்யக் கூடியவைகள் மற்றும் கூடாதவைகள், சாப்பிடக் கூடியவைகள் மற்றும் கூடாதவைகளாக திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறுவது என்ன?
குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாதது எது?
மழைக் காலங்களில் குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட், கேக், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், ஐஸ் வாட்டர், பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் எதையும் வாங்கித் தரக்கூடாது. மீறி உட்கொண்டால் அவர்களுககு சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சைனஸ் பிரச்னைகள், டான்சில், மலக்கட்டு, பசியின்மை, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட வாய்ப்பாக அமையும்.
எதைச் சாப்பிடலாம்?
நம் பாரம்பரிய திண்பண்டங்களான கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, பாசிப்பருறு உருண்டை, ரவா உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, நிலக்கடலை உருண்டை, பொரிகடலை, பட்டாணி, உப்பு கடலை, அரிசி முறுக்கு, அதிரசம், வாழைப்பழம், பப்பாளி, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் பயறு வகைகளான தட்டைபயறு, பாசிப்பயறு, பட்டாணி, மொச்சை, நரிப்பயறு, சோயா போன்ற திண்பண்டங்களை உண்பதால் நிறைந்த சத்துக்கள் கிடைப்பதுடன் உடல் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.
எதை தவிர்க்க வேண்டும்?
மழைங்களில் சளி, இருமல், மூச்சுத் திணறல், மூக்கடைப்பு இருக்கும்போது வாழைப்பழம், கொய்யாப்பழம், வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம், தர்பூசணி, இனிப்பு வகைகள் மற்றும் கீரைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காரணம் இவைகள் குளிர்ச்சியை அதிகரிக்கச் செய்து கபத்தை அதாவது சளியை அதிகரிக்கும். எனவே இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள் மழை மற்றும் பனிக்காலங்களில் கீரை மற்றும் மீன் வகைகள், ராட்டு வகைகளை தவிர்ப்பது நல்லது.
குளிர்ந்த நீரில் குளிக்கலாமா?
ஏதாவது நோய் பாதிப்பு இருப்பவர்கள், சளி, இருமல், காய்ச்சவ், மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி, இருப்பவர்கள், 60 வயதைக் கடந்தவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்த்து,சூடான தண்ணீரில் குளிப்பது நல்லது. குழந்தைகளை சூடான நீரில் குளிக்கவைப்பது தான் நல்லது. தசைகளின் தளர்ச்சியை நீக்கி உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும்.
ஆவி பிடித்தல்
மழைக்காலங்களில் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை முகத்திற்கு ஆவி பிடிப்பது கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும். ஆவி பிடித்தல் மூலம் வாய், மூக்கு, தொண்டை, கண்கள் மற்றும் செவிகளில் உள்ள வைரஸ் மற்றும் தொற்று கிரிமிகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும். தொற்றுக்களை அழிக்கும் ஆற்றல் மிக்க மூலிகை மருந்துகள் மூலம் ஆவிபிடிக்கும் மருத்துவ முறைகள் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆவி பிடித்தல் எவ்வாறு செய்வது?
சளி, இருமல், தொண்டை கரகரப்பு, சைனஸ் பிரச்னை, தலைபாரம் மற்றும் மூக்கடைப்பு இருப்பவர்கள் நொச்சி இலை, வேப்ப இலை, துளசி இலை, ஓமவள்ளி இலை வகைக்கு 5 இலை எடுத்து, ஏலம் 2, கிராம்பு 2, பச்சை கற்பூரம் 2 கி, ஓமம் 2 கிராம் இவைகளை எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, 2 லிட்டர் தண்ணீரில் போட்டு மூடி, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வைத்து, மூடியை எடுத்து ஆவி பிடிக்க மேற்கண்ட பிரச்னைகள் தீரும்.
யார் ஆவி பிடிக்கக்கூடாது?
ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் ஆவிபிடிப்பதை தவிர்த்து, ஓமம், கிராம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம் ஒரே அளவு எடுத்து வெற்றிலைச் சாறு, ஓமவள்ளி இலைச் சாறு, ஆடாதோடை இலைச் சாறு விட்டு நன்றாக அரைத்து பின் நிழலில் நன்கு உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவு எடுத்து காடா துணியில் முடிந்து மூக்கில் முகர மூச்சுத்திணறல் சரியாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை பயன்படுத்தலாம்.
துரித உணவுகள் சாப்பிடலாமா?
மழைக்காலங்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தரமற்ற பொருட்களைக் கொண்டு, சுகாதாரமற்ற இடங்களில், சுகாதாரமற்ற மனிதர்களால் தயாரிக்கப்பட்ட எந்த உணவு மற்றும் திண்பண்டங்களையும், துரித உணவுகளையும் வாங்கி சாப்பிடக்கூடாது. மழைக் காலங்களில் இவைகளால் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு ரசாயனக் கலவைகள் நிறத்திற்காகவும் மனத்திற்காகவும், சுவைக்காகவும் மக்களை கவரும் வண்ணம் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதை நாம் தொடர்ந்து சாப்பிடும்போது, நிச்சயமாக உடல் பாதிப்பு ஏற்படும், உயிர் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
தினசரி மலம் கழிக்க வேண்டும்
தினசரி காலை, மாலை இரண்டு வேளை கண்டிப்பாக மலம் கழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு ஏற்பட்டு உடல் பாதிக்கப்படும்.
மழைக்காலங்களில் கீரை, பழங்கள் சாப்பிடலாமா?
சாப்பிடலாம். ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தக்கூடாது. தேவைக்கேற்ப தினசரி வாங்கி பயன்படுத்தும்போது, உரிய சத்துக்கள் கிடைக்கும். பதப்படுத்தி பயன்படுத்தும்போது பயனளிக்காது. இவைகளை நன்றாக சுத்தம் செய்து கழுவி பயன்படுத்தும்போது செரிமான பிரச்னை, உணவு ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே எந்த ஒரு காய், கீரை, பழங்கள் வாங்கினாலும் கண்டிப்பாக சூடான நீரில் நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து, பின்னர் பயன்படுத்தினால் உணவு நஞ்சு ஆவதை தடுக்க முடியும்.
மழைக்காலங்களில் ஐஸ் மீன் சாப்பிடலாமா?
மழைக்காலங்களில் நாட்டு கோழிக்கறி, வெள்ளாட்டுகறி எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளை கண்டிப்பாக பதப்படுத்தி வைத்து சாப்பிடக்கூடாது. குழந்தைகளுக்கு மழைக்காலங்களில் கண்டிப்பாக முட்டை, ஐஸ்மீன் சாப்பிட கொடுக்கக்கூடாது. இதனால் செரிமான கோளாறு, வாந்தி வயிற்று போக்கு போன்றவை ஏற்படும்.
டாபிக்ஸ்