முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணி சாப்பிட வேண்டுமா? இனி ஓட்டல் செல்ல வேண்டாம்! வீட்டிலே செய்வது எப்படி?
Nov 25, 2024, 02:33 PM IST
முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணியை செய்வது எப்படி?
பிரியாணி செய்வதற்கு முன் இந்த குறிப்புகளை பின்பற்றவேண்டும். இந்த பிரியாணியை விறகு அடுப்பில் செய்வதே மிகச் சிறந்தது. (அதிலும் புளியமர விறகு) ருசியும் அபாரமாக இருக்கும். எனவே குக்கரில் செய்யாமல் திறந்த பாத்திரத்தில் செய்து தம் போட்டு இறக்கி வைப்பது சிறந்தது. சீரக சம்பா அரிசியில் மட்டுமே செய்யவேண்டும். அரிசியை விட மட்டன் கூடுதலாக இருக்க வேண்டும். அப்போதுதான் பிரியாணிக்கு கூடுதல் சுவை கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
கறிக் கடையில் கிடா விருந்துக்கு கொடுப்பது போல கறி எனக் கேட்டு ஒன்றரை கிலோ கறியை எலும்புடன் வெட்டி வாங்கிக்கொள்ளுங்கள். கொழுப்பு 200 கிராம் தனியாக வாங்கவேண்டும்.
சீரக சம்பா அரிசி – ஒரு கிலோ
சன்னமாக நறுக்கிய பழுத்த தக்காளி – 350 கிராம்
பச்சடிக்கு நறுக்குவதுபோல நறுக்கிய வெங்காயம் – அரை கிலோ
பச்சை மிளகாய் – 10
பூண்டு – 150 கிராம்
இஞ்சி – 100 கிராம்
கொத்தமல்லி – ஒரு கட்டு
புதினா- ஒரு கட்டு
புளிக்காத கெட்டித்தயிர் – 200 கிராம்
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
டால்டா – 100 கிராம்
நெய் – 100 கிராம்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தனி மிளகாய் தூள் – 2 ஸ்பூன் (உங்கள் கார அளவுக்கு ஏற்ப)
தாளிக்க தேவையான பொருட்கள்
பட்டை – 1
கிராம்பு – 8
சோம்பு – ஒரு டேபிள் ஸ்ழுன்
மராத்தி மொக்கு – 1
ஏலக்காய் – 8
அன்னாசிப்பூ – 1
பிரியாணி இலை – 2
செய்முறை
அரிசியை நன்றாக கழுவி 35 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை விழுதாக அரைக்காமல் அம்மி அல்லது உரலில் இட்டு இடித்த வெற்றிலை பதத்தில் இடித்து வைப்பது மிகவும் முக்கியம்.
அடிக்கனமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து டால்டா, நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து மசாலா பொருட்களை போட்டு வாசனை வரும் வரை வதக்கவேண்டும். பின்னர் அதில் இடித்து வைத்த இஞ்சி-பூண்டு கலவை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதன்பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இதிலேயே பாதி புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் இதில் கழுவி வைத்த மட்டன் மற்றும் கொழுப்பு சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் வதக்கவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் தலா ஒரு ஸ்பூன் மற்றும் தயிர் சேர்த்து பத்து நிமிடம் வதக்கவேண்டும். பின்னர் பாதி உப்பு போடவேண்டும்.
இதில் ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் விட்டு மூடி போட்டு 40 நிமிடங்கள் வேகவிடவேண்டும். குக்கராக இருந்தால் சற்று நீர் அதிகம் விட்டு மட்டன் தன்மைக்கு ஏற்ப 7 முதல் 8 விசில்கள் விட்டு வேக வைக்கவேண்டும். அவ்வப்போது முடியை திறந்து தேவைக்கு நீர் சேர்க்கவேண்டும். மட்டன் நன்றாக வெந்ததும் இதில் தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும், அதில் அரிசியை சேர்த்து மீதம் உள்ள உப்பு போட்டு அரிசியை அதிக வெப்பத்தில் 5 நிமிடம் வைத்து கொதிக்கவிட்டு பின்னர் மிதமான வெப்பத்தில் 5 நிமிடம் வேக விடவேண்டும். இப்போது உப்பு, காரம் சரிபார்க்கவேண்டும். ஏதாவது குறைந்தால் சரி செய்யவேண்டும். இதில் மீதம் உள்ள புதினா, கொத்தமல்லி மேலே தூவவேண்டும்.
பின்னர் நெருப்பை சிம்மில் வைத்துவிட்டு மேலே ஒரு மூடி போட்டு அதன் மேல் ஏதேனும் வெயிட் வைக்கவேண்டும். இதேபோல் 15 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவேண்டும். இதை குக்கரில் செய்பவர்கள் மிதமான வெப்பத்தில் ஒரு விசில் வரும் வரை அல்லது பத்து நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்து சமைக்கவேண்டும்.
இப்போது 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பின்னர் தம்மை ஓபன் செய்து பிரியாணியின் மீது பரவலாக நெய் ஊற்றி ஒரு கரண்டியால் பக்கவாட்டில் இருந்து கலக்கி விடவேண்டும். ருசியான காரசாரமான பாரம்பரிய முனியாண்டி விலாஸ் பிரியாணி ரெடி. தயிர் பச்சடி, க்ரேவி அல்லது தால்சாவுடன் பரிமாறவேண்டும்.
பின் குறிப்புகள்
எப்போதும் அரிசியை விட கறி இதற்கு அதிகமாக வேண்டும் மற்றும் கொழுப்பு கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
டால்டா வேண்டாமெனில் நீங்கள் நெய் சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த பிரியாணி சிறிது குழைவாக இருந்தால் தான் ருசியாக இருக்கும். அதிகமாக குழைந்துவிடவும் கூடாது. லேசான குழைவே பிரியாணிக்கு தனித்த ருசியைக் கொடுக்கும். இந்த பிரியாணி சற்று காரமாக இருப்பதே இதன் தனிச் சிறப்பு.
நன்றி - வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
டாபிக்ஸ்