Mushroom - Soya Chunks Biriyani : பிரியாணி பிரியர்களுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதம் மஸ்ரூம் – சோயா பிரியாணி!
Sep 14, 2024, 03:50 PM IST
Mushroom - Soya Chunks Biriyani : பிரியாணி பிரியர்களுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதம் மஸ்ரூம் – சோயா பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
மஸ்ரூம் – அரை கிலோ
சோயா சங்கஸ் – ஒரு கப்
பாஸ்மதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 1 (நீளமாக வெட்டவேண்டும்)
தக்காளி – 2 (அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
இஞ்சி – பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மல்லித்தழை – கால் கப் (பொடியாக நறுக்கியது)
புதினா இலை – (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப்பால் – அரை கப்
தண்ணீர் – ஒரு கப்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்
சோம்புத் தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
முழு கரம் மசாலா
பிரியாணி இலை – 1
பட்டை – 1
கிராம்பு – 4
ஏலக்காய் – 1
ஸ்டார் சோம்பு – 1
செய்முறை
காளானை சமையலறை துண்டை வைத்து துடைத்து அழுக்கை நீக்க வேண்டும். காளானை தண்ணீர் ஊற்றி கழுவக்கூடாது. அதை சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவேண்டும்.
இரண்டு கப் பாஸ்மதி அரிசியைக் கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும். சோயா சங்சையும் சூடான தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும்.
அடிக்கனமான ஆழமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கி, பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு என முழு கரம் மசாலாக்களை தாளிக்கவேண்டும்.
பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவேண்டும். அது பொன்னிறமானவுடன், பச்சை மிளகாய், மல்லித்தழை மற்றும் புதினா தழை ஆகியவற்றை தூவி நன்றாக வதக்கவேண்டும்.
வெங்காயம் மொறு மொறுவென்று ஆனவுடன் அதில் தக்காளி மசியல் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவேண்டும். அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பச்சை வாசம் போனவுடன் நறுக்கிய காளான் மற்றும் பிழிந்த சோயா சங்க்ஸ் ஆகியவற்றை சேர்க்கவேண்டும். அனைத்தையும் வதக்கவேண்டும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், தயிர் சேர்த்து வதக்கிவிட்டு, தேங்காய்ப்பால் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவேண்டும். அனைத்தையும் சேர்த்து கிரேவி பதத்துக்கு வதக்கிக்கொள்ளவேண்டும்.
அடுத்து அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிவைக்கவேண்டும். அனைத்தையும் கலந்துவிட்டு, மூடிவிடவேண்டும். உப்பு சரிபார்த்து அரிசி வேகும் வரை காத்திருக்கவேண்டும். நீங்கள் இவையனைத்தையும் குக்கரில் வைத்தால் அதை மூடி விசில்கள் விட்டு காத்திருக்கவேண்டும்.
சாதம் வெந்தவுடன், அதில் மல்லித்தழைகளை தூவவேண்டும். இதில் முந்திரி பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்தும் அலங்கரிக்கலாம். இது உங்கள் விருப்பம். தேவைப்பட்டால் சேர்க்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். இரண்டும் உங்கள் விருப்பம்தான். இதற்கு வெங்காயம், தக்காளி, வெள்ளரி ரைத்தாக்கள் அல்லது ஏதேனும் கிரவிகள் இருந்தால் போதும். சூப்பர் சுவையில் அசத்தும்.
காளானை மட்டும் சேர்த்து காளான் பிரியாணியாகவும், சோயாவை மட்டும் சேர்த்து சோயா பிரியாணியாகவும் செய்துகொள்ளலாம்.
இதற்கு காளிஃபிளவர் 65, பன்னீர் 65, சிக்கன் 65 அல்லது வறுவல் மிகவும் ஏற்றது. இந்த பிரியாணியை கட்டாயம் உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத்தூண்டும்.
டாபிக்ஸ்