Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!
May 20, 2024, 03:28 PM IST
Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதற்கான காரணங்களும் இங்கு அலசப்பட்டுள்ளது.
மாஸ்டர் செக்அப் கேம்ப்
மாஸ்டர் சுகாதார பரிசோதனையில் கலந்துகொண்ட 13 சதவீத பேருக்கு ரத்தக்கொதிப்பும்,16 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோயும் முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளது. (மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் அவர்களின் ரத்தக்கொதிப்பும், சர்க்கரை நோயும் ஏன் முன்கூட்டியே கண்டறியப்படவில்லை?)
ஸ்டான்லி மருத்துவமனை மாஸ்டர் பரிசோதனை ஆய்வில் ரூ.1,000 செலுத்திய 11,780 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. (6,198 பேர் பெண்கள்) ஆய்வில் கலந்துகொண்ட பெரும்பாலோர், வடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அடித்தட்டு மக்களே.
அடித்தட்டு மக்கள் மத்தியிலும் அதிக உடல் எடை, ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய் பாதிப்பு அதிகம் இருக்க காரணம் என்ன?
வடசென்னையில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள் காரணமா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
மே 16 அன்று Southern Regional Load Despatch Centre செய்த முதல்கட்ட ஆய்வில், வடசென்னை பகுதியில் உள்ள மின்கடத்திகளை சுற்றியுள்ள இன்சுலேன் அமைப்புகள் மீது ஆலைகளிலிருந்து வெளியாகும் Fly ash படிந்து பாதிப்பை ஏற்படுத்தியதால், மாசுப்பாடு காரணமாக 130 நிமிடங்களுக்கு, மின்தடங்கல் ஏற்பட்டது. அங்குள்ள மின்உற்பத்தி நிலையங்கள் 450 மெகாவாட் மின்இழப்பை சந்தித்துள்ளன.
TNEB தலைமை அலுவலகத்திற்கும் ஒரு மணி நேரம் மின்தடங்கல் ஏற்பட்டுள்ளது. (Overloading of 230 KV transmission lines resulted in tripping)
வடசென்னையில் அமோனியா வாயுக்கசிவும் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது. ஸ்டான்லி ஆய்வில் 2,948 பேருக்கு ரத்தக்கொதிப்பு கண்டறியப்பட்டதில், 388 பேருக்கு முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், 3,245 பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதில், 545 பேருக்கு முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
மிகவும் கவலை அளிக்கும் செய்தி, ஏற்கனவே கண்டறியப்பட்ட ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களில் மிகச் சிலருக்கு மட்டுமே அவை கட்டுப்பாட்டில் (Under Control) இருந்துள்ளது.
சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருந்துகளின் தரம் (குறைந்த தரம்) அதற்கு காரணமாக இருக்கலாம். அதுகுறித்து வெளிப்படையான ஆய்வு நடத்தப்பட வேண்டும். மருந்துகளின் தரம் உறுதிபடுத்தப்பட வேண்டும்.
என்னென்ன பாதிப்புகள் கண்டுபிடிப்பு?
ஆய்வில் கலந்துகொண்ட 70 சதவீதம் பேருக்கு உடல் எடை அதிகரித்தும், (BMI-23 க்கு மேல்), 600 பேருக்கு மேல் கொழுப்பு அளவு (Cholesterol) அதிகரித்தும் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
23 பேர்-நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு,
145 பேர்-இரதய நோய் பாதிப்பிற்கான வாய்ப்பு,
78 பேர் (பெரும்பாலோர்-பெண்கள்)-பித்தப்பையில் கல்,
205 பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி (Fibroids in breast)
பாதிப்பு இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பின் அளவு நாள் ஒன்றுக்கு 5 கிராமிற்கு கீழாகவும், புலால் தவிர்த்த காய்கறி மற்றும் பழங்களின் அளவு உணவில் அதிகம் இருப்பதை உறுதிசெய்தால், ரத்தக்கொதிப்பின் அளவை கட்டுக்குள் வைக்க ஏதுவாக இருக்கும்.
உடற்பயிற்சியும் சர்க்கரைநோய், ரத்தக்கொதிப்பை கட்டுக்குள் வைக்க உதவும்.
தமிழக சுகாதாரத்துறை அல்லது அரசு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முன்வருமா?
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்