வெண்டைக்காய் காரக்குழம்பை இப்படி செஞ்சுடுங்க! 4 நாள் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட ஒவ்வொரு நாளும் வேறுவேறு சுவை தரும்!
Oct 15, 2024, 04:26 PM IST
வெண்டைக்காய் காரக்குழம்பை இப்படி செய்து பாருங்கள். நான்கு நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட ஒவ்வொரு நாளும் வேறுவேறு சுவை தரும். சூப்பரான இந்த குழம்பை அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்.
வெண்டைக்காய் காரக்குழம்பை செய்வதற்கு முன்னர் வெண்டைக்காயின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். வெண்டைக்காயில் கொழுப்பு அறவே கிடையாது. இதில் பெக்டின் என்ற உட்பொருள் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மைகொண்டது. இந்த கெட்ட கொழுப்பு இதய நோயை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் அதிகம் வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு இதய நோய் ஏற்படாமல் காக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் சர்க்கரையை மெதுவாக ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. இதனால் செரிமானம் மெதுவாக நடக்கிறது. எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்வதில்லை. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனைத்தருகிறது.
மற்ற காய்கறிகளைவிட வெண்டைக்காயில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடல் செல்களில் ஆக்ஸிடேட்டில் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது. இதில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான செரிமான மண்டலத்தைக் கொடுக்கின்றன. இது குடல் புற்றுநோயைத் தடுக்கிறது. வெண்டைக்காயில், அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, பொதுவான தொற்றுக்களை தடுக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில், தினமும் உட்கொள்ளவேண்டிய வைட்டமின் சி சத்தில் 40 சதவீதம் உள்ளது.
வெண்டைக்காயில், அதிகளவில் வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது ரத்தத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் அனீமியாவைத் தடுக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் 33 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக உள்ளது. இதில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள், உங்களுக்கு நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதனால் நீங்கள் அதிக கலோரிகள் உட்கொள்வது தடுக்கப்படுகிறது.
வெண்டைக்காயில், அதிகளவில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலம் முழுவதையும் சுத்தம் செய்யக்கூடிய தன்மை கொண்டது. குறிப்பாக குடலை சுத்தம் செய்யக்கூடியது. இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. மேலும் குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் என்பது கரு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. வெண்டைக்காயில் அதிகளவில் ஃபோலேட்கள் உள்ளது. இதனால் இது குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சி சீராகவும், முறையாகவும் நடப்பதை உறுதி செய்கிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த வெண்டைக்காயில் காரக்குழம்பு எப்படி செய்வது என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 100
குண்டு மிளகாய் – 4
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 10 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தாளிப்பு வடகம் – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
தக்காளி – 1 (அரைத்தது)
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
புளிக்கரைசல் – ஒரு கப்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் கொஞ்சம் மட்டும் சேர்த்து குண்டு மிளகாய் மற்றும் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். வெண்டைக்காயை குழம்பு வைக்கும் முன் எப்போதும் வதக்கிக்கொள்ளவேண்டும்.
அப்போதுதான் அதன் வழவழப்புத்தன்மை குழம்பில் இருக்காது. வதக்கிய வெண்டைக்காய்களை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
அதே கடாயில் எஞ்சிய எண்ணெயை ஊற்றி அதில் கடுகு சேர்த்து பொரிந்தவுடன், பூண்டு, சின்னவெங்காயம், கறிவேப்பிலை, தாளிப்பு வடகம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்த அரைத்த தக்காளி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.
புளிக்கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு சுண்டியபின் இறக்கினால், சூப்பர் சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார், இதை சூடான சாதத்தில் சேர்த்து நல்லெண்ணெயுடன் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். இட்லி தோசைக்கும் இதை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
இந்த வெண்டைக்காய் காரக்குழம்பின் சிறப்பே இதை செய்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு, ஒவ்வொரு நாளும் வெளியில் எடுத்து சூடாக்கி சாப்பிட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையில் அசத்தும். இதுபோல் 4 நாட்கள் வரை சாப்பிடலாம். கெடாமல் வித்யாசமான சுவையைத் தரும்.
டாபிக்ஸ்