HT Tour Special: கோல்கொண்டா கோட்டை முதல் பிர்லா கோயில் வரை.. ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் ஓர்பார்வை!
Dec 11, 2024, 08:20 AM IST
தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
இந்திய மாநிலங்களில் தெலங்கானா மாநிலத்திற்கு என்று தனி கலாச்சார சிறப்பு உண்டு. குறிப்பாக ஹைதராபாத் நகரம் இந்திய வரலாற்று பக்கங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளது. அங்குள்ள தனித்துவமான கட்டிடங்கள் இன்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. அந்தவகையில் ஹைதராபாத்தில் உள்ள சில முக்கிய சுற்றுலா தலங்களின் வரலாறு மற்றும் அதன் கலைநயம் பற்றி தெரிந்துகொள்வோம்.
கோல்கொண்டா கோட்டை
இந்த கோட்டையின் பிரம்மாண்டமான வடிவமைப்பு பயணிகளை ஈர்க்கிறது. இது மூன்று சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4.8 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த கோட்டைக்கு சென்றால் நிற்காமல் இயங்கிக்கொண்டிருக்கும் ஹைதராபாத் நகரத்தை உச்சியில் இருந்து அமைதியாக ரசிக்கலாம். கோல்கொண்டா கோட்டையில் காணப்படும் ஒரு அற்புதமான அதிசயம் என்னவென்றால், வளைவுப் பாதைக்கு அருகில் ஒரு இடத்தில் தங்கியிருக்கும் ஒரு நபர் கைதட்டினால், அது ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முகடு அமைப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி கேட்க முடியும். பண்டைய இந்தியாவின் வைர தலைநகராகவும் இருந்தது இந்த கோட்டை.
சார்மினார்
'சார்மினார்' ஹைதராபாத்தில் அமைந்துள்ள தனித்துவமான நினைவுச் சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 1591 ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது. இந்த மைல்கல் ஹைதராபாத்தின் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அதிகாரப்பூர்வ "நினைவுச் சின்னங்களில்" இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் நான்கு கோபுரங்களை கொண்டதால் சார்மினார் என பெயரிடப்பட்டது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த தளத்தில் இயங்கி வருகிறது.
ஹுசைன் சாகர் ஏரி
செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஏரி ஹைதராபாத்தின் அழகான பகுதிகளில் ஒன்று. இது 5.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இதன் மைய கட்டிடத்தின் கலைஞர் நவாப் கான் பகதூர் மிர்சா அக்பர் பைக் ஆவார். 1992-ல் ஏரியின் நடுவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை இந்த இடத்துக்கு அடையாளமாக இருக்கிறது. இது பிரபலமான சுற்றுலா தலமாக இருப்பதனால் சுற்றிப்பார்க்க அடிக்கடி மக்கள் வந்து செல்கின்றனர்.
ஃபலாக்னுமா அரண்மனை
ஃபலாக்-நுமா என்பது உருது மொழியில் "வானத்தைப் போல" அல்லது "வானத்தின் பிரதிபலிப்பு" என்பதைக் குறிக்கிறது. இப்போது சொகுசு விடுதியாக இருக்கும் இந்த அரண்மனை அதன் பிரம்மாண்டமான வடிவமைப்புக்காக பெயர்பெற்றது. இந்த அரண்மனையில் தங்க அதிக பணம் செலவாகும் என்றாலும் இது சிறந்த அனுபவமாக இருக்கும்.
சலார் ஜுங் மியூசியம்
எல்லா ஊரிலும் மியூசியங்கள் இருக்கின்றன. ஆனால் உலகிலேயே அதிக ஐரோப்பிய கலை மற்றும் தொன்மையான பொருட்களை கொண்டிருக்கும் இந்த அருங்காட்சியகம் தனித்துவமானது. பாரம்பரிய துணிகள், ஓவியங்கள், சிற்பங்கள் என பல பொருட்களை இங்கு காணலாம்.
ராமோஜி ஃபிலிம் சிட்டி
சுற்றுலா பயணிகள், கலைநயம் கொண்டவர்களின் மனம் கவர்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. சினிமாவில் ஆர்வம் உள்ள எவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் ராமோஜி ஃபிலிம் சிட்டி. உலகில் உள்ள மிகப் பெரிய ஸ்டூடியோக்களில் இதுவும் ஒன்று. அதிக பரப்பளவுள்ள ஸ்டூடியோ என கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறது.
நேரு வனவிலங்கு பூங்கா
நீங்கள் விலங்குகள் மீது ஆர்வம் உடையவராக இருந்தால் நிச்சயம் குடும்பமாக இங்கு சென்றுவரலாம். ஹைதராபாத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட பூங்காக்களில் இது தனிச்சிறப்பு வாய்ந்தது.
பூரணி ஹவேலி
இது நிஜாமின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. இந்த கட்டிடம் 18-ம் நூற்றாண்டின் ஐரோப்பிய வடிவமைப்பின் உருவமாகும். சிக்கந்தர் ஜா இங்கு சிறிது காலம் வாழ்ந்து பின்னர் கில்வத் மஹாலுக்கு குடிபெயர்ந்தார். இதன் காரணமாக, இந்த கட்டிடங்கள் பூரணி ஹவேலி என்று அழைக்கப்படுகின்றன.
பிர்லா கோயில்
2000 டன்கள் கலப்படமில்லாத ராஜஸ்தான் வெள்ளை பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த கோயில். 1976-ல் ராமகிருஷ்ணா மிஷனின் சுவாமி ரங்கநாதனந்தாவால் திறக்கப்பட்டது. இந்த கோயில் பிர்லா அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பார்வைக்கு அழகானது மட்டுமல்லாமல், மலை மீது அமைந்திருப்பதனால் ஹைதராபாத்தின் அழகிய காட்சியையும் வழங்குகிறது.
டாபிக்ஸ்