சாம்ராஜ்ஜியங்களைக் கட்டி ஆண்ட சரித்திர நாயகன்.. ஊடகத்துறையில் புரட்சிகளை செய்த முன்னோடி ராமோஜி ராவ் பிறந்தநாள் இன்று!
பத்திரிகை, தொலைக்காட்சி, மின்னணு ஊடகம், சினிமா தயாரிப்பு நிறுவனம், ஃபிலிம் சிட்டி, சிட்பண்ட், மசாலா கம்பெனி என சுமார் 20க்கும் மேற்பட்ட தொழில்களில் கொடிகட்டி பறந்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ராமோஜி ராவ் அவர்களின் பிறந்தநாள் இன்று..

1936 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடி கிராமத்தில் பிறந்தவர் ராமோஜி ராவ். செருகூரி வெங்கடசுப்பா ராவ் மற்றும் சுப்பம்மா ஆகியோர் இவரின் பெற்றோர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர்.
பத்திரிகைத் துறையில் வேலை
விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தன் தொடக்க வேலையை விவசாயத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளார். விவசாயத்தில் மக்கள் படும் இன்னல்களுக்கு அறிவியல் பூர்வமாக தீர்வு காண நினைத்த அவர், அன்னமாதா எனும் பத்திரிகை மூலம் எண்ணற்ற விவசாய உக்திகளை வெளியிட்டு வந்தார். இவற்றை சோதனை அடிப்படையில் செய்து பார்த்த பலருக்கும் கை கொடுத்த நிலையில், பல விவசாயிகளும் ராமோஜி ராவால் பொருளாதார ரீதியாக முன்னேறினர்.
ஈநாடு பத்திரிகை மூலம் புரட்சி
பத்திரிகை துறை எப்போர்பட்ட மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதை கண்கூடாக பார்த்த அவர், தன் தீவிர முயற்சியால் 1974ம் ஆண்டு ஈநாடு எனும் தினசரி தெலுங்கு நாளிதவை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு மேலும் நெருக்கமானார். அதுமட்டுமின்றி, இவர் தனது நாளிதழ் மூலம் தெலுங்கு மொழியை வளர்க்க நிபுணர் குழுவையும் ஏற்படுத்தினார்.