TAMIL REMAKE MOVIE: ரஜினி கலக்கல் காமெடி..பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய ரீமேக் படம் பற்றி தெரியுமா?
Tamil Remake Movie: ரிஜினி கலக்கல் காமெடியுடன் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய அமிதாப் ரீமேக் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியது. இந்த படத்துக்காக ரஜினி சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளிய படம் வேலைக்காரன். மாஸ் ஹீரோவாக உருவெடுத்த பின்னர் ரஜினி நடிப்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படமாக வேலைக்காரன் அமைந்திருந்தது.
அமிதாப் பச்சன் படத்தின் ரீமேக்
கிராமத்து பின்னணியில் தொடங்கி நகரத்தில் முடியும் விதமாக பக்கா கமர்ஷியல் படமாக இருக்கும் வேலைக்காரன், இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த சூப்பர் ஹிட் ரீமேக் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
1982இல் அமிதாப் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான நமக் ஹலால் என்ற படத்தின் ரீமேக்காக, ஒரிஜினல் பதிப்பு சுவாரஸ்யம் குறையாக தமிழில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் உருவாக்கியிருப்பார்.
இந்தியில் அமிதாப் பச்சனுடன், சசி கபூர், ஸ்மிதா பாடீல், பிரவீன் பாபி, வஹிதா ரஹ்மான், ஓம் பிரகாஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
தமிழில் ரஜினிக்கு ஜோடியாக அமலா, சரத்பாபு, பல்லவி, கே.ஆர். விஜயா, வி.கே. ராமசாமி, நாசர் என பலர் நடித்திருப்பார்கள். ரஜினிக்காகவே எழுதிய கதை போல் அமிதாப் படம் இருந்ததால் அதை அப்படியே ரீமேக் செய்திருப்பதோடு, ரஜினி ரசிகர்களை கவரும் விதமாக சில மாற்றங்களையும் செய்திருப்பார்கள்
காமெடி காட்சியை தமிழில் தூக்கலாக வைத்திருப்பார்கள். செந்திலும் அவர் செய்யும் காமெடி காட்சிகள், ரகுபதி என்ற கேரக்டரில் தோன்று ரஜினி தன்னை அறிமுகம் செய்யும்போது ரகுபதி சன் ஆஃப் கஜபதி, சன்ஆஃப் வளையாபதி என கூறுவதும், நாசரிடம் ஐ கான் டாக் இங்கிலீஷ், லாஃப் இங்கிலீஷ் என பேசுவதும் என காமெடியில் அதகளம் செய்திருப்பார். அதேபோல் முதல் முறையாக அமலாவுடன் ஜோடி சேர்ந்த நடித்த ரஜினி, காதல் காட்சியிலும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இளையராஜா இசை நினைவில் நீங்காத பாடல்கள்
இந்த படத்தின் மற்றொரு ப்ளஸ் பாயிண்டாக இளையராஜாவின் இசை அமைந்திருந்தது. படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக தோட்டத்திலே பாத்திகட்டி, வேலை இல்லாதவன் டா பாடல் துள்ளலாக ஆட வைத்தது. அம்மா செண்டிமென்ட் பாடலாக பெத்து எடுத்தவ தான் பாடல் இருந்தது. வா வா வா கண்ணா வா என்ற டூயட் பாடலும் அதை காட்சிப்படுத்திய விதமும் ரசிக்கும் விதமாக இருந்தது.
நஷ்டத்தை ஈடுகட்டிய ரஜினி
இந்த படத்துக்கு முன்னர் தனது குருநாதர் பாலசந்தர் தயாரிப்பில் ஸ்ரீராகவேந்திரா என்ற படத்தில் நடித்தார் ரஜினி. அவரது 100வது படமான இது நஷ்டத்தை சந்தித்த நிலையில், அதை ஈடு செய்யும் விதமாக பாலசந்தர் தயாரிப்பில் பக்கா பேமிலி எண்டர்டெயினர் படமாக வேலைக்காரன் படத்தில் நடித்தார். . கமிர்ஷியல் படத்துக்கான இலக்கணம் அனைத்தும் இடம்பெற்றிருந்த வேலைக்காரன் 1987ஆம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டானதுடன், அந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படமாகவும் அமைந்தது. படம் நல்ல வசூலை பெற்ற போதிலும் ரஜினி சம்பளம் எதுவும் பெறாமல் நடித்து கொடுத்தார். ரஜினி ரசிகர்களையும் கடந்து அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்திய படமாக இருந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்