தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Coconut Milk Ladies Finger Gravy : தேங்காய்ப்பால் சேர்த்து வித்யாசமான முறையில் வெண்டைக்காய் கிரேவி இப்டி செஞ்சு பாருங்க

Coconut Milk Ladies Finger Gravy : தேங்காய்ப்பால் சேர்த்து வித்யாசமான முறையில் வெண்டைக்காய் கிரேவி இப்டி செஞ்சு பாருங்க

Priyadarshini R HT Tamil

May 13, 2024, 05:55 AM IST

google News
Coconut Milk Ladies Finger Gravy : தேங்காய்ப்பால் சேர்த்து வித்யாசமான முறையில் வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Coconut Milk Ladies Finger Gravy : தேங்காய்ப்பால் சேர்த்து வித்யாசமான முறையில் வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Coconut Milk Ladies Finger Gravy : தேங்காய்ப்பால் சேர்த்து வித்யாசமான முறையில் வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

விருந்தோம்பல் வலைதள பதிவர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன் ஹெச்.டி தமிழுக்கு அளித்த பேட்டியில் தேங்காய்ப்பால் வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று விளக்கியுள்ளார்.

பொதுவாக வெண்டைக்காயை நாம் வாங்கியவுடனோ அல்லது பறித்தவுடனோ ஃபிரஷ்ஷாகவே செய்துவிடவேண்டும். ஏனெனில், அதை ஃபிரிட்ஜில் வைத்தால், அதன் சுவை நன்றாக இருக்காது. அதன் வழவழப்புத்தன்மையும் வெண்டைக்காயை சமைக்கும்போது வேகவிடாமல் செய்துவிடும் என்று முத்துலட்சுமி மாதவக்கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த தேங்காய்ப்பால் வெண்டைக்காய் கிரேவியையும் இதுபோன்ற ஃபிரஷ் வெண்டைக்காய் வைத்து செய்ய வேண்டும் என்று அப்போதுதான் அது சுவை நிறைந்ததாக இருக்கும் என்று அவர் கூறினார்.

அதேபோல் இளம் வெண்டைக்காய்களை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளவேண்டும். வெண்டைக்காயின் அடிப்புறம் உடைத்துப்பார்த்தால் படாரென்று உடையவேண்டும். இல்லாவிட்டால் அது முற்றல் வெண்டைக்காய் என்று அர்த்தம்.

அதை வாங்கக்கூடாது என்றும் அவர் கூடுதல் டிப்ஸ் வழங்கினார். இளம் வெண்டைக்காயில் சாம்பார், பொரியல், வறுவல் என எது செய்தாலும் ருசியாக இருக்கும். முற்றிய வெண்டைக்காயை பயன்படுத்தவே கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – கால் கிலோ

பெரிய வெங்காயம் – அரை கப் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - பூண்டு விழுது – அரை ஸ்பூன்

புளி – ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

வெல்லம் – ஒரு ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

வர மிளகாய் – 5

வர மல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – அரை

தக்காளி – 1

செய்முறை

வெண்டைக்காயை நன்றாக கழுவி சாம்பாருக்கு நறுக்கும் அளவில் வெட்டிக்கொள்ள வேண்டும்.

புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவேண்டும்.

தேங்காய்த்துருவலை தேவையான அளவு தண்ணீர் விட்டு முதல் தேங்காய்ப்பால் மற்றும் இரண்டாம் தேங்காய்ப்பாலை தனித்தனியாக எடுத்து ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும்.

மிக்ஸி ஜாரில் வர மிளகாய், மிளகு, சீரகம், வரமல்லி, தேங்காய்த்துருவல், மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். (இந்தக்கலவையை அடுப்பில் வைத்து வதக்கியும் அரைக்கலாம். அது வேறு சுவை தரும்) அதனுடன், நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

கனமான கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானவுடன், நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து மிதமான சூட்டில் வழ வழப்பு தன்மை போகும் வரை வதக்கவேண்டும். பின் ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதே கடாயில் எஞ்சிய தேங்காய் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். பின் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். பின் அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்து அனைத்தையும் கொதிக்கவிடவேண்டும்.

இப்போது புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மிதமான சூட்டில் 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவேண்டும்.

மசாலாவின் பச்சை வாசம் போனவுடன், வதக்கிய வெண்டைக்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். அவை எண்ணெய் பிரியும் வரை கொதித்ததும் அடுப்பின் சூட்டை குறைத்து தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து லேசான ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவேண்டும். புதிய சுவையில் வெண்டைக்காய் மசாலா தயார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி