Black Urad Dhal Milk : வளரும் பெண் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் கருப்பு உளுந்தம் பால் கொடுங்க! ரிசல்ட்ட பாருங்க!
Sep 21, 2024, 02:06 PM IST
Black Urad Dhal Milk : வளரும் பெண் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் கருப்பு உளுந்தம் பால் கொடுங்க. அவர்களின் உடல் ஆரோக்கியம் பெறும்.
இந்தியாவில் உளுந்து ஒரு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியமாகக் கருதப்படுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் இதை கட்டாயம் எடுத்துக்கொள்ள வைக்கிறது. இதை உணவில் சாப்பிடலாம். ஆயுர்வேத மருந்துகளிலும் கலக்கப்படுகிறது. இதில் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. 100 கிராம் உளுந்தில் 1.6 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. 59 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 25 கிராம் புரதச்சத்து, 0.93 கிராம் பொட்டாசியம், 0.38 கிராம் சோடியம் மற்றும் 341 கலோரிகள் உள்ளது. இதில் கூடுதலாக கால்சியம், இரும்பு, வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உளுந்தை நாம் அன்றாடம் இட்லி, தோசைக்கு பயன்படுத்துகிறோம். ஆனால் உளுந்தில் இருந்து பிற சுவையான உணவுகளும் செய்ய முடியும். உளுந்தில் வெள்ளை உளுந்தைவிட கருப்பு உளுந்துதான் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக அது பெண்களுக்கு மிகவும் தேவையான ஒன்று ஆகும். கருப்பு உளுந்தில் செய்யப்படும் பாலைப் பருகி பலன்பெறுங்கள். நவீன சமையல் முறையில் எதையும் செய்வது எளிதாகிவிட்டது. அதுபோன்ற எளிய முறையில் உளுந்தம் பால் தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – கால் கப்
ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்
சுக்குப் பொடி – கால் ஸ்பூன்
கருப்பட்டி – கால் கப்
தேங்காய்ப் பால் – ஒரு கப்
செய்முறை
கருப்பு உளுந்தை நன்றாக அலசி அரை மணி நேரம் மட்டும் ஊறவைத்து, குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு அல்லது உளுந்து வேகும் வரை விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.
உளுந்து ஆறியவுடன், அதை மட்டும் மிக்ஸிஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து மற்றும் உளுந்து வேகவைத்த தண்ணீர் சேர்த்து கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
அதில் தேங்காய்ப்பால், கருப்பட்டியை பாகக்கி சேர்த்து அனைத்தும் சேர்ந்து கொதித்தவுடன், சுக்கு, ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கவேண்டும்.
கருப்பட்டிக்கு பாகு பதம் தேவையில்லை. நன்றாக தண்ணீரில் கரைந்து வந்தாலே போதும். இந்த கருப்பட்டி சேர்த்த கருப்பு உளுந்து பால் உங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக வளரிளம் பெண் குழந்தைகளுக்கு அது கருப்பை ஆரோக்கியம், மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்வது என உதவுகிறது.
கருப்பு உளுந்தின் நன்மைகள்
சர்க்கரை நோயாளிகள் கருப்பு உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும்.
கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது.
கருப்பு உளுந்து சருமத்துக்கு நல்லது.
கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும்.
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.
செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்றுப்போக்கை எதிர்த்து போராட உதவுகிறது.
உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது.
உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.
எலும்புகளை வலுவாக்குகிறது.
மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது.
உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது.
உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.
இதுபோன்ற பல்வேறு வித்யாசமான மற்றும் ஆரோக்கியமான ரெசிபிக்களை தினமும் ஹெச்.டி தமிழ் உங்களுக்கு தொகுத்து வழங்கிவருகிறது. எனவே இதுபோன்ற தகவல்களை எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள். ஆரோக்கிய வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!
டாபிக்ஸ்