தேநீர் பிரியரா நீங்கள்; அப்போ இந்த மசாலாப் பொடியை அரைச்சு வெச்சுக்கங்க! ஆரோக்கியமான டீ ரெடி!
Nov 09, 2024, 11:59 AM IST
தேநீர் பிரியரா நீங்கள்? அப்போ இந்த மசாலாப் பொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். தினமும் டீயில் கலந்து பருகினால் உங்கள் டீயின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தேநீர் இல்லாவிட்டால் ஒரு சிலரின் நாட்களே ஓடாது. சிலர் நாள் முழுவதும் டீ பருகிக்கொண்டே இருப்பார்கள். ஒரு சிலருக்கு டீ பிடிக்காது. நீங்கள் தேநீர் பிரியர் என்றால், இந்த ஒரு மசாலாவை தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பால் டீ அல்லது ப்ளாக் டீ என எந்த ஒரு தேநீர் தயாரிக்கும்போதும் இந்தப் பொடியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்கள் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியைத் தரும். தேநீர் சுவையும், மணமும் நிறைந்த ஒரு பானம் ஆகும். இந்த தேயிலையை பயன்படுத்தி பாரம்பரியமான தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது தெற்காசியாவில் தோன்றியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. சீனா, மியான்மருக்கு இடையில் தேயிலை உருவாகியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. கேமலியா டாலியன்சிஸ் என்பது தேயிலையின் அறிவியல் பெயர். தண்ணீருக்குப் பின்னர் உலகம் முழுவதும் பருகப்படும் பானமாக தேநீர் உள்ளது.
தேநீரில் பல வகை உள்ளது. கொஞ்சம் கசப்பு சுவையில் இருக்கும். துவர்ப்பு இதன் பிரதான சுவை ஆகும். தேநீர் உடலில் சுறுசுறுப்பை தூண்டும் ஒரு பானம் ஆகும். அதற்கு இதில் உள்ள காஃபைன் உட்பொருள் உதவுகிறது. கிபி மூன்றாம் நூற்றாண்டுகளிலே தேநீர் பருகப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. உற்சாக பானமான சீனாவின் டேங் ராஜ்ஜியத்தில் இது இருந்துள்ளது. பின்னர் அது பல ஆசிய நாடுகளுக்கும் பரவியது. போர்ச்சுகீசிய வணிகர்கள் மற்றும் பாதிரியார்கள் இதை ஐரோப்பாவில் 16ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார்கள். 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் மத்தியில் பிரபலமானது. ஆங்கிலேயே இந்தியாவில் தேயிலை பரவலாகப் பயிரிடக்கப்பட்டது. மூலிகை டீ கேமலியா சினென்சிஸில் தயாரிக்கப்பட்டது. இப்போது எண்ணற்ற மூலிகை தேநீர் பரவலாக உள்ளது. கிட்டத்தட்ட நாம் மருந்துக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களில் இருந்தும் தேநீர் தயாரித்து பருகுவது பரவலாக உள்ளது.
தேவையான பொருட்கள்
சுக்கு – 100 கிராம்
ஏலக்காய் – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
பட்டை – 25 கிராம்
கிராம்பு – 25 கிராம்
சோம்பு – 25 கிராம்
ஜாதிக்காய்ப் பொடி – அரை ஸ்பூன்
துளசி இலைகள் – 10 – 12 (காய வைத்தது)
உலர்ந்த ரோஜாப் பூ இதழ்கள் – சிறிதளவு
(விருப்பப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் தூசி இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை நன்றாக காய வைத்துக்கொள்ளவேண்டும். சிறிய துண்டுகளாகவும் நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயை சூடாக்கி, அடுப்பை குறைந்த தீயில் வைத்துக்கொள்ளவேண்டும். இதில் ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுக்கவேண்டும்.
துளசி மற்றும் ரோஜா இதழ்களை வறுக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். இதை கருகிவிடாமல் ஒரு நிமிடம் மட்டுமே வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். வறுத்த அனைத்துப் பொருட்களையும் ஒரு தட்டில் பரப்பி நன்றாக ஆறவிடவேண்டும்.
காய்ந்த மிக்ஸி ஜாரில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். சுக்கை மட்டும் முதலில் சேர்த்து பொடித்துவிட்டு, அடுத்து மற்ற பொருட்களை சேர்த்து பொடித்துக்கொள்ளலாம்.
அதேபோல் வறுக்கும்போதும் சுக்கை மட்டும் முதலில் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். மற்ற பொருட்களை பின்னர் இரண்டு அல்லது மூன்று பொருட்களைக் கூட ஒன்று சேர்த்து வறுத்துக்கொள்ளலாம். ஜாதிக்காய்ப்பொடியை வறுக்கக்கூடாது.
ஏற்கனவே வறுத்த பொருட்களை அரைத்து அதனுடன் ஜாதிக்காய்ப்பொடியை சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். நீங்கள் எப்போது தேநீர் தயாரித்தாலும், அதில் இந்தக்கவலையை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
டாபிக்ஸ்