குளியலறை கேள்விகளை நிறுத்துங்கள்.. இனி எந்தப் பேட்டியும் கொடுக்க மாட்டேன்.. மும்பை பறந்த சுசித்ரா
Oct 16, 2024, 03:22 PM IST
பிரபல பாடகியான சுசித்ரா சினிமாத்துறையில் நடக்கும் பல விஷயங்களை பேசி பரபரப்பாக்கிய நிலையில், இனி எந்த யூடியூப் சேனலுக்கும் பேட்டி தரமாட்டேன் என தீர்க்கமாக கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபலமான பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. சுமார் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், ரோடியோ துறையிலிருந்து தனது கெரியரை ஆரம்பித்தார். இதையடுத்து, நடிகர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் பாடகராக அறிமுகமானார். மனதை மயக்கும் இவரது குரலுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர்.
சர்ச்சை கருத்து
இந்நிலையில், தனது கணவர் கார்த்திக் உடன் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், சுசித்ரா கார்த்திக் குறித்தும் அவரது நண்பரான நடிகர் தனுஷ் குறித்தும் பல அவதூறான கருத்துகளை பொது வெளியில் கூறிவந்தார். இதைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் நடத்தும் பார்ட்டிகள், அங்கு விநியோகிக்கப்படும் போதைப் பொருட்கள், நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை என தொடர்ந்து பல கருத்துகளை வெளியில் கூறிவந்தார்.
இதையடுத்து, பாடலாசிரியர் வைரமுத்து குறித்தும் பல சர்ச்சை கருத்துகளை கூறி வந்தார். பின் கணவரை விவாகர்தது செய்த நிலையில், இன்னும் தீவிரமாக தன் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் குறித்து பேசி வந்தார். இவரது பேட்டி வெளியானாலே சர்ச்சைகளும் வெளிவரும் என மக்கள் காத்திருக்கும் நிலையில், இனி பேட்டிகள் எதுவும் தரப்போவதில்லை என தீர்க்கமாக முடிவெடுத்துள்ளார்.
மும்பையில் புதிய வேலை
இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தனது நலம் விரும்பிகளுக்காக ஒரு தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதில், நான் எனது கனவு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மும்பை செல்கிறேன். தற்போது குழந்தைகள் பதிப்பகம் ஒன்றில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வேலையின் மூலம் இந்த முழுவதுமுள்ள லட்சக் கணக்கான குழந்தைகளுடன் இணையும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு மிகவும் கௌரவமான ஒன்றாக கருதுகிறேன். குழந்தைகளுக்காக 15 நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும் இந்தப் பதிப்பு தமிழிலும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
இனி எந்தப் பேட்டியும் இல்லை
மேலும், இனி நான் பொது ஊடகங்களில் பங்கேற்று என்த பேட்டியும் அளிக்க மாட்டேன். என்னுடைய யூடியூப் வீடியோவில் எந்த தனிநபர் பற்றிய பதிவும் இனி இடம்பெறாது எனவும் தீர்க்கமாக கூறியுள்ளார்.
வாழ்த்துகள் கூறிய சுசித்ரா
அத்துடன், தன்மீது வெறுப்பை விதைப்பவர்களுக்கும் சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அதில், சிறந்த யூடியூப் பேச்சாளர்கள், பாடகர்கள், உங்களை மகிழ்விப்பதற்காகவே உள்ள பாவம் பைத்தியம் வகையறாக்கள் கிடைக்க உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். என்னுடைய அனைத்து நேர்காணலிலும் நான் உண்மையை மட்டுமே பேசினேன். ஆனால், காலத்தின் பிடியில் இருந்த நான் பல சோதனைக்கு உள்ளானேன். அனைத்திற்கும் நன்றி.
அறிவுரை சொன்ன சுசித்ரா
நான் பாடிய 1500க்கும் மேற்பட்ட பாடல்களும் காலத்தில் நிலைத்து நிற்கும். நான் பொது வெளியில் பேசுவதிலிருந்து தவிர்ப்பதை குறித்தும் எனது புதிய வேலை குறித்தும் ஏன், எங்கே, எப்போது, போன்ற கருத்துகளைக் கேட்பதை தவிர்க்க வேண்டும் நினைக்கிறேன். அதே சமயம் கமெண்ட்டில் எனது நிறுவனத்தின் பெயர், பதவியின் பெயர், சம்பளம், வாடகை, செலவுகள், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவுத் திட்டங்கள் குறித்தும் நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் குளியலறைகள் எப்படி இருக்கின்றன என்றும் அங்கு ரீல்ஸ் எடுத்து அனுப்பது குறித்தும் வரும் கேள்விகளை முற்றிலும் தவிர்க்குமாறும் கூறியுள்ளார்.
பழைய நினைவுகள்
மற்றொரு பதிவில் ஒரு புகைப்படத்தைக் குறிப்பிட்டு, இந்த புகைப்படம் எனக்கு எப்போதுமே உலகம் என்பது சென்னையோ, தமிழகமோ அல்லது தென்னிந்தியாவோ மட்டும் அல்ல என்பதை நினைவூட்டுகிறது எனக் கூறி லண்டனில் அவர் படித்துக் கொண்டிருந்த போது எடுத்த படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், லண்டனில் எனது பேராசிரியர் ஒருவர் என்னை இந்திய இளவரசி எனக் கூறியிருந்தார். நான் வசீகரமாகவும், பேசுவதற்கு இனிமையாகவும் இருப்பதாக அங்குள்ள எனது நண்பர்கள் பலர் கூறியிருந்தனர்.
அவமானங்கள்
ஆனால், நான் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில், எனது நடத்தைக்காக பல அவமானங்களை சந்தித்தேன். நான் அசிங்கமானவள், வயதானவள், மனநலம் குன்றியவள் என்று முத்திரை குத்தப்பட்டேன். மக்களின் இந்த கருத்து இன்றும் என்னை பின்தொடர்கிறது. இந்த கிரகத்தின் போலியான நிகழ்ச்சியில் நான் நிஜமாக இருந்தேன். ஒட்டுமொத்த தமிழ் தேசமும் போலியான கண்ணியத்தில் மகிழ்ந்து திருப்தியைத் தேடுகின்றனர், நான் அந்த விளையாட்டில் ஒருபோதும் இருக்க மாட்டேன்.
கிணற்றிலிருந்து வெளியே வந்த சுசித்ரா
நீங்கள் வாழும் கிணறு அல்ல உலகம், லண்டனிலிருந்து சென்னை என்ற கிணற்றுக்கு வந்ததற்கு வருந்துகிறேன். நான் அப்போது கூட மும்பை அல்லது டெல்லிக்கு சென்றிருக்க வேண்டும். அதனால்தான் இப்போது மும்பை மிகவும் சரியாக உணர்கிறேன் என தனது வாழ்க்கையின் அடுத்தக்கட்ட பயணம் குறித்து பேசியுள்ளார் சுசித்ரா.
பாடகி சுசித்ரா, அவரது கணவர் கார்த்திக், நடிகர் தனுஷ், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகை திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் குறித்தும் பேசி அவ்வப்போது விவாதங்களை கிளப்பி வந்தார். இதனால் அவர் மீது காவல்துறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்