தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வெகு அருகில் வந்துவிட்டது.. தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கை.. மாநாடு நிகழப் போகும் தருணம்.. சிலிர்த்த விஜய்

வெகு அருகில் வந்துவிட்டது.. தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கை.. மாநாடு நிகழப் போகும் தருணம்.. சிலிர்த்த விஜய்

Marimuthu M HT Tamil

Oct 25, 2024, 11:21 AM IST

google News
வெகு அருகில் வந்துவிட்டது.. தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கை.. மாநாடு நிகழப் போகும் தருணம் என தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து விஜய் சிலிர்த்துள்ளார்.
வெகு அருகில் வந்துவிட்டது.. தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கை.. மாநாடு நிகழப் போகும் தருணம் என தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து விஜய் சிலிர்த்துள்ளார்.

வெகு அருகில் வந்துவிட்டது.. தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கை.. மாநாடு நிகழப் போகும் தருணம் என தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து விஜய் சிலிர்த்துள்ளார்.

மூன்றாவதாக தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கு நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.

அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள். மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.

தொடங்கிய மூன்றே நாட்களில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

விசிக மற்றும் நாம் தமிழருக்கு வாழ்த்துக் கூறிய விஜய்:

இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய்யும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார்.

மூன்று தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விஜய்:

மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தென் மாவட்டங்களுக்கு சென்று, அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.

அதன் அடுத்தகட்டமாக, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான பாடலையும் வெளியிட்டார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் உறுதி செய்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆயத்தப்பணிகள் விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மூன்றாவதாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய நடிகர் விஜய்

இதுதொடர்பாக புதிதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பதாவது,

‘’என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது.

மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப்போகின்றன.

அதை வார்த்தைகளில் எப்படிச்சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.

அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம்.

நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்'' என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி