ஒரே தீபாவளியில் ரஜினிகாந்தின் மூன்று படங்கள்..கிரேசி மோகன் வசனத்தில் ஆக்ஷன் படம்! தமிழில் இன்று வெளியான படங்கள்
Oct 30, 2024, 08:07 AM IST
ஒரே தீபாவளியில் ரஜினிகாந்தின் மூன்று படங்கள், மூன்றுமே ஹிட், கிரேசி மோகன் வசனம் எழுதிய ஆக்ஷன் படம், தமன்னாவுக்கு திருப்புமுனை தந்த தமிழ் படம் உள்பட தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் அக்டோபர் 30ஆம் தேதியான இதே நாளில் தீபாவளி ரிலீஸாக சில மறக்க முடியாத, கல்ட் கிளாசிக், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கிய படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.
தப்பு தாளங்கள்
மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரிதா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து 1978இல் வெளியான படம் தப்பு தாளங்கள். சரிதாவின் அறிமுக படமான இதை தப்பிட தாள என்ற பெயரில் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தமிழில் உருவாக்கினார் பாலசந்தர். க்ரைம் ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தில் ரஜினி, சரிதாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதலில் கன்னடத்தில் வெளியான பின்னர் தமிழில் மூன்று வாரங்கள் கழித்து ரிலீஸ் செய்யப்பட்டது. விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற தப்பு தாளங்கள் பாக்ஸ் ஆபிஸில் சராசரி வசூலை மட்டுமே பெற்றது. கன்னடத்தில் இந்த படம் ஹிட்டானது. ரஜினியின் சிறப்பான நடிப்பை கல்ட் கிளாசிக் படமாக இருக்கும் தப்பு தாளங்கள் வெளியாகி 46 ஆண்டுகள் ஆகிறது
தாய் மீது சத்தியம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, மோகன் பாபு, பிரபாகர், சுருளி ராஜன், ஏ.வி.எம். ராஜன், நாகேஷ், கன்னட நடிகர் அம்ரீஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படம் 1978 தீபாவளி வெளியீடாக வந்தது. ஆர். தியாகராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தை சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்தார். அவரது மறைவுக்கு பின் வெளியான இந்த படம் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. ஒரிஜினலாக இந்த கதையை 1960களிலேயே எம்ஜிஆரை வைத்து தயாரிக்க திட்டமிட்டிருந்த தேவர், சில காரணங்ககளால் கைவிட்டார். பின்னர் ரஜினியை வைத்து உருவாக்கி வெற்றியும் கண்டார். தாய், தந்தையை கொலை செய்த கிரிமினல்களை தனது நாய் உதவியுடன் ஹீரோ பழிவாங்கும் அரத பழைய கதையை கெளபாய் லுக், வெஸ்டர்ன் பாணியில் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் படத்தை உருவாகியிருப்பார்கள்.
பைலட் பிரேம்நாத்
மெழுகு பொம்மை என்ற மேடை நாடகத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த இந்த படத்தை ஏ.சி. திருலோகசந்தர் இயக்கியிருப்பார். 1978இல் வெளியான இந்த படத்தில் சிவாஜி கணேசன், இலங்கை நடிகை மாலினி ஃபொன்சேகா, ஸ்ரீதேவி விஜயகுமார், ஜெய் கணேஷ், ஜெயசித்ரா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், மனோரமா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். தமிழ்நாட்டு மற்றும் இலங்கையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படமான டைகர் பிரேம்நாத் முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்டது. தீபாவளி ரிலீஸாக வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.
அவள் அப்படித்தான்
இந்திய சினிமாவின் சிறந்த படங்களில் லிஸ்டில் கண்டிப்பாக இடம்பிடிக்கும் படமாக மறைந்த இயக்குநர் ருத்ரய்யா இயக்கத்தில் வெளியான அவள் அப்படித்தான் படத்துக்கு இடமுண்டு. 1978 தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தில் ஸ்ரீபிரியா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். படத்தின் கதையை இவர்கள் மூவரை சுற்றியேதான் அமைந்திருக்கும். ஸ்ரீபிரியா, மஞ்சு என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மஞ்சு என்ற கதாபாத்திரத்தின் உளவியல் பின்னணியை சொல்லும் விதமாக அமைந்திருந்த இந்த படம் பல இடங்களில் ஆங்கில வசனம், கூர்மையான திரைக்கதை, நுட்பமான காட்சியமைப்பு என ஸ்டைலிஷ் பிலம் மேக்கிங்காக சான்றாக இருந்தது. விமர்சக ரீதியாக பெரும் பாராட்டை பெற்ற இந்த படம் ரசிகர்களை கவர்ந்து கல்ட் கிளாசிக் படமானது. படத்துக்கு விருதுகளும் குவிந்ததோடு, ஸ்ரீபிரியாவுக்கு சிறப்பு ஜூரி விருதும் கிடைத்தது. 1978 தீபாவளிக்கு ரஜினி நடிப்பில் மூன்றாவது படமாக அவள் அப்படித்தான் வெளியானது.
விடுகதை
பிரகாஷ் ராஜ், நீனா, மணிவண்ணன், ஜனகராஜ், விஜயன் உள்பட பலர் நடித்து அகத்தியன் இயக்கத்தில் 1997 தீபாவளி ரிலீஸாக வந்த படம் விடுகதை. 40 பிளஸ் வயது ஆண், 20 பிளஸ் பெண்ணுக்கு இடையிலான காதல் உறவு, வயது வித்தியாசத்தால் ஏற்படும் உளவியல் சிக்கலை அழுத்தமான காட்சிகளால் சொன்ன படமாக உள்ளது. தேவா இசையமைப்பில் இதயம் இதயம் என்ற பாடல் சிறந்த மெலடி பாடலாக உள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வித்தியாசமான கதை படம் ரசிகர்களை கவர்ந்த விடுகதை வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது.
தேடினேன் வந்தது
ரவி வர்மா இயக்கத்தில் பிரபு, கவுண்டமணி, மந்த்ரா, வெண்ணிற ஆடை மூர்த்தி, அனுராதா, பிரதாப் போத்தன் உள்பட பலர் நடித்த காமெடி படமாக தேடினேன் வந்தது படம் 1997இல் வெளியானது. முழுக்க காமெடி படமான உருவாகியிருந்த இந்த படத்துக்கு கிரேசி மோகன் வசனம் எழுதியிருப்பார். பிரபு - கவுண்டமணி காம்போ காமெடியில் வயிறை புண்ணாக்கியிருப்பார்கள். சிறந்த பொழுதுபோக்கு படமாக இருந்த தேடினேன் வந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ரட்சகன்
தெலுங்கு ஹீரோ நாகர்ஜூனா, மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென், ரகுவரன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வடிவேலு, கிரிஷ் கர்நாட் உள்பட பலர் நடித்து 1997இல் வெளியான படம் ரட்சகன். ரெமாண்டிக் ஆக்ஷன் பாணியில் ரட்சகன் படத்தை பிரவீன் காந்தி இயக்கியிருந்தார். அந்த காலகட்டத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான இந்திய படமாக இருந்த ரட்சகன், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவினாலும், பின்னாளில் கல்ட் சினிமா என பெயர் பெற்றது. படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் பட்டைய கிளப்பின.
பொற்காலம்
சேரன் இயக்கத்தில் முரளி, மீனா, சங்கவி, மணிவண்ணன், வடிவேலு, ராஜேஷ்வரி உள்பட பலர் நடித்திருக்கும் படம் பொற்காலம். பேமிலி ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படம் வாய் பேச முடியாத பெண்ணாக வரும் தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க ஹீரோ முரளி எடுக்கு முயற்சியே படத்தின் கதை. க்ளைமாக்ஸி எதிர்பாராத திருப்புமுனையுடன் இருக்கும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தேவா இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. குறிப்பாக தஞ்சாவூர் மண் பாடல் உலக அளவில் பேமஸ் ஆனது. கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படங்களின் லிஸ்டில் பொற்காலம் உள்ளது.
ஆஹா
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பேமிலி டிராமா பாணியில் உருவாகி 1997இல் வெளியான ஆஹா படத்தில் ராஜிவ் கிருஷ்ணா, சுலேகா, ரகுவரன், பானுப்பிரியா, விஜயகுமார், ஸ்ரீவித்யா உள்பட பலர் நடித்த இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தின் முதல் காட்சியே தீபாவளி கொண்டாட்டத்தை வைத்து எடுத்திருப்பார்கள். கிரேசி மோகன வசனத்தில் காமெடியும், குடும்ப செண்டிமெண்ட்டும் ரசிக்கும் விதமாக இருந்தன. தேவா இசையில் முதன் முதலில் பார்த்தேன் என்ற பாடல் அற்புதமான மெலடியாக இருந்தது.
கண்டேன் காதலை
பாலிவுட்டில் ஷாகித் கபூர், கரீனா கபூர் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஜப் வீ மெட் படத்தின் ரீமேக்தான் கண்டேன் காதலை. பரத், தமன்னா, சந்தானம் உள்பட பலர் நடித்த இந்த படம் ரெமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 2009இல் வெளியான இந்த படத்தை ஆர். கண்ணன் இயக்கியிருப்பார். தமன்னாவுக்கு தமிழில் சிவப்பு கம்பளம் விரித்த படங்களில் ஒன்றாக அமைந்தது. படத்தில் அவரது நடிப்பும் வெகுவாக பேசப்பட்டது. 2009இல் மட்டும் தமன்னா நடிப்பில் 4 தமிழ் படங்கள் வெளியான நிலையில் 3 சூப்பர் ஹிட்டாகின. அதில் ஒன்றுதான் இந்த படம். தமன்னாவின் க்யூட் நடிப்புக்காகவே கொண்டாடப்பட்ட இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது.