க்யூட் சிரிப்பு..குறும்புத்தனமான நடிப்பு..ரசிகர்களால் குல்பி என செல்லமாக அழைக்கப்பட்ட நடிகை லைலா
Oct 24, 2024, 07:00 AM IST
க்யூட் சிரிப்பு, குறும்புத்தனமான நடிப்பு, விஜய்யுடன் ஜோடியாக நடிக்காத 90ஸ் ஹீரோயின், ரசிகர்களால் குல்பி என செல்லமாக அழைக்கப்பட்ட நடிகையாக திகழும் லைலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 1990களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2006 வரை சினிமாக்களில் ஹீரோயினாக தோன்றி தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லைலா. லைலா என்ற உடனே நினைவுக்கு வருவது அவரது க்யூட் சிரிப்பும், குறும்புத்தனமும் தான்.
ஹாசினியாக வெகுளித்தனமும், அடாவடித்தனமும் செய்த ஜெனிலியாவுக்கு முன்னரே மிகவும் இயல்பாகவும், எதார்த்தமாகவும் சேட்டைகள் செய்து அனைவரையும் ரசிக்க வைத்தவர் லைலா. தமிழில் அறிமுகமாவதற்கு முன்னரே பாலிவுட், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் நடித்துள்ளார்.
லைலா சினிமா பயணம்
கோவா மாநிலத்தை சேர்ந்தவரான லைலா இந்தியில் ஜித்தேந்திரா நடித்த துஷ்மன் துனியா கா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்கள். இதன் பின்னர் இத ஒரு சிநேகதா என்ற மலையாள படத்தில் விக்ரமுடன் நடித்த இவர், பின்னர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
தெலுங்கில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்த பின்னர் கேப்டன் விஜயகாந்தின் கள்ளழகர் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தொடர்ந்து தமிழில் கார்த்திக் ஜோடியாக ரோஜாவனம், பிரசாந்த் ஜோடியாக பார்த்தேன் ரசித்தேன், அஜித் ஜோடியாக தீனா, விக்ரம் ஜோடியாக தில் என நடித்தார்.
தமிழ் சினிமாவில் லைலா
விஜயகாந்தின் கள்ளழகர் படத்துக்கு முன்னரே தமிழில் நடிக்கும் வாய்ப்பு லைலாவுக்கு கிடைத்தது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய தர்மச்சக்கரம், பவித்ரன் இயக்கிய காதல் பள்ளி போன்ற படங்களில் லைலாவை நடிக்க கேட்டபோது மறுத்துள்ளார்.
அத்துடன் விஐபி படத்தில் சிம்ரன் கேரக்டரில் முதலில் நடிக்க லைலாவுக்கு தான் வாய்ப்பு வந்தது. படத்தில் ஏற்கனவே கமிட்டான ஹீரோயின் விலகிய நிலையில் லைலாவை அவரது பெயரில் மாற்றம் செய்து நடிக்குமாறு தயாரிப்பாளர் தரப்பில் கூற, இந்த வாய்ப்பையும் நிராகரித்தார்.
அதேபோல் படத்தில் இன்னொரு ஹீரோயினாக ரம்பா இருந்ததால் சோலோ ஹீரோயினாக அறிமுகமாக வேண்டும் என கருதி வாய்ப்பை தவிர்த்துள்ளார்.
1996இல் இருந்து தமிழில் வந்த பல வாய்ப்புகளை தவிர்த்த இவர் 1999இல் நினைத்தபடி சோலோ ஹீரோயினாக கள்ளழகர் படத்தில் ஆண்டாள் என்ற கிராமத்து பின்னணி பெண் கேரக்டரில் தோன்றியிருப்பார்.
சூர்யாவின் சிறந்த ரீல் ஜோடி
பாலா இயக்கிய நந்தா படத்தில் சூர்யாவின் ஜோடியாக இலங்கை பெண்ணாக க்யூட் நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருப்பார். அதேபோல் பாலாவின் மற்றொரு படமான பிதாமகன் படத்தில் மறுபடியும் சூர்யாவுக்கு ஜோடியாக அடாவடித்தனமும், அப்பாவித்தனமும் கலந்த கேரக்டரில் கலக்கியருப்பார். இந்த இரண்டு படங்களிலும் சிறந்த நடிகை பிலிம் பேர் விருதை வென்றார்.
அதேபோல் உள்ளம் கேட்குமே படத்தில் கல்லூரி மாணவியாக வெகுளி பெண்ணாகவும், பின்னர் மெச்சூர் அடைந்தவராகவும் நடிப்பில் முத்திரை பதித்திருப்பார்
லைலா நடித்த தமிழ் படங்களில் அதிக முறை அவரை இணைந்து நடித்த ஹீரோவாக சூர்யா உள்ளார். அவருடன் மேற்கூறிய படங்கள் தவிர உன்னை நினைத்து, மெளனம் பேசியதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுக்கு அடுத்தபடியாக அஜித்துடன் தீனா, பரமசிவன், திருப்பதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். முன்னணி ஹீரோயினாக இருந்த போதிலும், அப்போது விஜய்யுடன் நடிக்காத நடிகையாக இருந்தார் லைலா.
2006இல் தொழிலதிபரான மெஹ்தின் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான லைலா, சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.
16 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக்
2022இல் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் மூலம் கம்பேக் கொடுத்தார் லைலா. அதே ஆண்டில் வதந்தி என்ற அமேசான் ப்ரைம் வெப்சீரிஸிலும் திருப்புமுனை தரும் கேரக்டரில் நடித்திருந்தார்.
விஜய்யுடன் இணைந்து நடிக்காத குறையை சமீபத்தில் வெளியான தி கோட் படத்தின் மூலம் நீக்கினார். அந்த படத்தில் சிறிய காட்சியில் தோன்றினாலும், விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகைகள் லிஸ்டில் இணைந்தார்.
தற்போது தொடர்ந்து புதிய படங்களில் கமிட்டாகி வரும் லைலா, இரண்டாவது இன்னிங்ஸில் இந்த தலைமுறை ரசிகர்களையும் தனது குறும்புத்தனம் மிக்க சிரிப்பால் கட்டிப்போட்டு வருகிறார். குல்பி, கன்னக்குழி அழகி என ரிசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட லைலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
டாபிக்ஸ்