பிதாமகன் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை சங்கீதா பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “ நான் அப்போது தெலுங்கு படங்களில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஒன்பது படங்கள் கைவசம் இருந்தன. அதனால், எனக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக டச் இல்லாமல் இருந்தது. ஆகையால் இங்கே சூர்யா, விக்ரம் எல்லாம் பெரிய ஹீரோ ஆகிவிட்டார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாமல் இருந்தது.
By Kalyani Pandiyan S Aug 13, 2024
Hindustan Times Tamil
இந்த நிலையில் தான் எனக்கு பிதாமகன் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டார்கள். ஆனால் தேதிகள் பிரச்சினை காரணமாக, அப்போது அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. இதனையடுத்து பல நடிகைகளை அந்த கதாபாத்திரத்திற்கு கமிட் செய்து, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவைத்து, நடிக்க வைத்து, திருப்தி இல்லாமல் அனுப்பி கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையே எனக்கு வேறொரு படத்திற்காக ஃபிலிம் பேரில் சிறந்த விருதை வாங்கினேன். அப்போது என் குரு வம்சி சார் அடுத்ததாக என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார். அதற்கு நான் அடுத்தடுத்து படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் பாலா அழைத்தார். ஆனால் அவரது படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று சொன்னேன். இதையடுத்து சடார் என்று கோபப்பட்ட அவர், பாலாசார் படத்தை நீ எப்படி மிஸ் செய்வாய்? உடனடியாக அவருக்கு போன் செய்து மன்னிப்பு கேள் என்று சொன்னார்.
உடனே நான் அவரிடம் சார்.. தேதிகளில்லை; அதனால்தான் நான் அப்படி சொன்னேன் என்று சொன்னவுடன், பாலா படத்தில் நடிக்க உன்னை கேட்டால், நீ தேதிகளை உருவாக்க வேண்டும் என்று கடிந்து கொண்டார். இதையடுத்து நான் பாலா சாருக்கு போன் செய்தேன். அவரிடம் நான் பிலிம் பேர் விருது வாங்கி இருக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர் ஆங்.. அப்புறம் என்று அலட்சியமாக பேசினார்.
இதையடுத்து வம்சி சார் என்னை கூப்பிட்டு கண்டித்ததை அவரிடம் சொல்லி, அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுங்கள் சார். எனக்கு வேலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதுவும் உங்கள் கையால் வேலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். உடனே அவர் இப்போ என்ன செய்யற என்று கேட்டார். அப்போது நான் பாலகிருஷ்ணா சார் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.
அந்த படத்தின் செட்யூல் கேன்சல் ஆகி இருந்தது. இதையடுத்து நான் சென்னை வருகிறேன் என்பதை அவரிடம் சொன்னேன். உடனே அவர் கிளம்பி மதுரை வா என்றார். அதற்கு சார் அந்த கதாபாத்திரத்தில் வேறு ஹீரோயின் நடித்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அவரது வேலையை கெடுத்து, நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னவுடன், இந்த வியாக்கியானம் எல்லாம் நான் உன்னிடம் கேட்கவில்லை. கிளம்பி வா என்றால் வா என்றார்.
படத்தில் மேக்கப் கிடையாது என்று முன்னமே சொல்லி இருந்தார்கள். இதையடுத்து என்னை அழுக்காக்கி, அழுக்கு புடவையை கொடுத்து, அவர் முன்னால் கொண்டு வந்து நிப்பாட்டினார்கள். அதை பார்த்து அதிர்ச்சியான பாலா, என்ன இன்னமும் இந்த பொண்ணு இவ்வளவு ஃபிரஷ்ஷாக இருக்கிறாள். அவள் உடுத்தியிருக்கும் புடவையை மண்ணில் புரட்டி கொடுங்கள் என்றார். அதைக்கேட்டு அதிர்ச்சியான நான் அதன் பின்னர் சூர்யா, விக்ரமை பார்த்தேன். அவர்கள் என்னை விட கேவலமாக இருந்தார்கள். " என்று பேசினார்