Thalaivaa: அதிமுக கொடுத்த அச்சுறுத்தல்.. பல தடைகளைத் தாண்டி வெளியாகி ஆதரவற்றவர்களின் லீடர் பற்றி பேசிய 'தலைவா’ படம்
Aug 09, 2024, 09:43 AM IST
Thalaivaa: அதிமுக கொடுத்த அச்சுறுத்தல் மற்றும் பல தடைகளைத் தாண்டி வெளியாகி ஆதரவற்றவர்களின் லீடர் பற்றி பேசிய 'தலைவா’ படம் பற்றி அறிவோம்.
Thalaivaa: 2013ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 9ஆம் தேதி நடிகர் விஜய், அமலா பால், சத்யராஜ், சந்தானம் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம், தலைவா. இந்தப் படத்தை ஏ.எல். விஜய் எழுதி இயக்கியிருந்தார். படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷாவும், எடிட்டிங்கினை ஆண்டனியும், இசையை ஜி.வி.பிரகாஷ் குமாரும் செய்திருந்தனர். ஆகஸ்ட் 9ஆம் தேதி ஒரு சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, பின், இப்படத்தில் ’அண்ணா’ என்று சொல்லப்பட்ட சத்யராஜின் கேரக்டருக்காக, அதிமுகவின் அரசியல் அழுத்தங்களால் திரும்பப் பெறப்பட்டது. பின், கொஞ்சம் தாமதமாக வெளியானது. இருந்தாலும் குறித்த தேதியில் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ரிலீஸாகி தலைவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெற்றது.
தலைவா திரைப்படத்தின் கதை என்ன?:
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசிக்கும் ‘தமிழ்ப்பசங்க’ என்னும் நடனக்குழுவை நடத்தும் நபராக வருகிறார், விஷ்வா. அவரது நண்பர் லோகு மற்றும் நடனக்குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து வாட்டர் கேன் விநியோகம் செய்யும் வணிகத்தை செய்து வருகின்றார்.
விஷ்வாவின் தந்தை ராமதுரை. இவர் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மும்பையில் ஆயுதம் ஏந்தக்கூடிய குழுவைத் தலைமை தாங்கக் கூடியவர். ஆனால், அதை தன் மகன் விஷ்வாவிடம் மறைத்து வருகிறார்.
இதற்கிடையே விஷ்வா, தனது வாடிக்கையாளர்களில் ஒருவரான உணவக உரிமையாளர் மீராவை ஒரு தலையாக காதலிக்கிறார். அப்போது அறிவிக்கப்படும் நடனப்போட்டியில் விஷ்வாவும் மீராவும் நடனம் ஆடி வெல்கின்றனர். அப்போது விஷ்வாவிடம் மீரா தன் காதலை முன்மொழிய, அதனை அவர் ஏற்றுக்கொள்கின்றார். மேலும் இருவரின் காதல் குறித்து தன் தந்தை ராமதுரையிடம் பேச மும்பைக்குப் புறப்படுகிறார், விஷ்வா. உடன் வருகிறார், மீரா.
அதன்பின், விஷ்வாவின் தந்தை ராமதுரை தலைமறைவு வாழ்க்கை வாழ்வதையும், அங்கு பத்ரா மற்றும் அவரது மகன் பீமன் குழுவினரால் பல பொய் வழக்குகளுக்கு ராமதுரை ஆளாகியிருப்பதையும் அறிகிறார். மேலும் மீரா, காவல்துறை அதிகாரி என்பதையும் விஷ்வா கண்டறிகிறார். பின் ராமதுரை கைது செய்யப்படுகிறார். காவல் துறையின் வாகனத்துக்குள் ராமதுரை சென்றதும் பீமன் குழுவினரால், அங்கிருந்த வெடிகுண்டு வெடித்து, ராமதுரை கொல்லப்படுகிறார்.
தன் தந்தை பல ஆதரவற்ற பட்டியலின மக்களின் பாதுகாப்புக்கு உதவியவர் என்பதை அறிந்துகொள்கிறார். அப்போது பீமாவின் தூண்டுதலால் மும்பையில் கலவரம் வெடிக்கிறது. பலர் கொல்லப்படுகின்றனர். அப்போது விஷ்வா மற்றும் அவரது குழுவினர், மும்பையில் கலவரம் செய்ய பீமா செய்த தூண்டுதல் குறித்த டேப்பை மீட்டு, அதை வெளியில் அம்பலப்படுத்துகின்றனர். இதனால் பீமா கைது செய்யப்படுகிறார்.
இதற்கிடையே பீமா சிறையில் இருந்து மகாசிவராத்திரியின்போது, இரவில் தப்பி, விஷ்வாவின் ஆதரவாளர்கள் பலரைக் கொன்றார்.
விஷ்வாவின் விசுவாசியாக அறியப்பட்ட ரங்கா பீமன் குழுவினரிடம் மாட்டிக்கொண்டு இருப்பதாக, தகவல் வருகிறது. அங்கு அவரை மீட்கச்செல்கிறார், விஷ்வா. அப்போது அங்கு இருந்து விஷ்வாவை சிக்க வைத்துவிட்டு, ரங்கா தப்புகிறார். மேலும், விஷ்வா கத்திக்குத்துக்கு ஆளாகிறார்.
இதற்கிடையே ரங்காவின் துரோகம் குறித்து அறிந்த அவரது சொந்த மகன், அவரை பெட்ரோலிய பங்கில் காரைச் செலுத்தி உயிரை மாய்க்கச் செய்கிறார்.
இறுதியில் உச்சகட்ட சண்டைக்குப் பின், பீமனின் கழுத்தை அறுக்கிறார், விஷ்வா. அப்போது போலீஸாக வரும் மீரா, விஷ்வாவின் இந்நிலையை உணர்ந்து, விஷ்வாவைக் காப்பாற்றுவதற்காக, தான் சுட்டுக்கொன்றதுபோல் செய்கிறார். இதனால், விஷ்வா சிறை செல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படுகிறது. பின் விஷ்வா மீது இருக்கும் காதல் காரணமாக, தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு, விஷ்வாவுடன் சேர்கின்றார். பின் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். இறுதியில் விஷ்வா, தன் தந்தை ராமதுரையைப் போல், மும்பையில் வசிக்கும் தமிழர்களுக்கு ஆதரவாகவும், புலம்பெயர் மற்றும் ஆதரவற்ற தொழிலாளர்களின் பாதுகாவலராகவும் உருவெடுக்கிறார். படம் முடிகிறது.
தலைவா திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் விஷ்வா ராமதுரையாக நடிகர் விஜய்யும், ராமதுரையாக நடிகர் சத்யராஜூம் நடித்துள்ளனர். மேலும், ஏசிபி மீரா நாராயணனாக அமலா பாலும், லோகுவாக சந்தானமும், பீமாவாக அபிமன்யு சிங்கும், நடித்துள்ளனர். லோகுவின் தந்தையாக நாசரும், விஷ்வாவை காதலிக்கும் கெளரி மோகனாக ராகினி நந்தவானியும் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இசை:
இப்படத்துக்கு இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் செய்திருந்தார். இப்படத்தில் யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது, தமிழ்ப்பசங்க, வாங்கண்ணா வணக்கங்கண்ணா ஆகியப் பாடல்கள் ஹிட்டடித்தன.
தலைவா திரைப்படம் வெளியாகி 11ஆண்டுகள் ஆனபின்பும், மாஸ் என்டெர்டெயின்மென்ட் படத்தை ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்!