16 வருஷம் என் தாய்க்கு குழந்தை இல்லை.. ரஜினி பிறக்கும்போது என் தாய்க்கு நடந்த அதிசயம்.. சத்திய நாராயண ராவ் பேச்சு
Dec 12, 2024, 07:38 AM IST
16 வருஷம் என் தாய்க்கு குழந்தை இல்லை.. ரஜினி பிறக்கும்போது என் தாய்க்கு நடந்த அதிசயம் என நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்திய நாராயண ராவ் பேசியுள்ளார்.
16 வருஷம் தன் தாய்க்கு குழந்தை இல்லை என்றும்; ரஜினி பிறக்கும்போது தன் தாய்க்கு நடந்த அதிசயம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்திய நாராயண ராவ் பேசியுள்ளார். அந்த காணொலி வைரல் ஆகிவருகிறது.
படையப்பா திரைப்படத்தின் வெள்ளி விழாவில்( 25 வாரங்கள் ஓடிய படத்திற்கு கொண்டாடப்படுவது), நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் பேசுகையில், ‘’45 வருஷம் பின்னே போறேன் நான். எங்கள் தாய், தகப்பனாருக்கு 16 வருஷங்கள் புத்திர பாக்கியங்கள் இல்லை. எங்கள் தாயார் எல்லா தெய்வங்களையும் வணங்கி சேவைகள் செய்தாங்க. முக்கியமாக, முருகப்பெருமான் மீது ரொம்ப பக்தியாக இருந்தாங்க. எங்கவீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் முருகப்பெருமானின் கோயிலுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது தரிசனத்துக்குப் போகாமல் அவங்க சாப்பிடமாட்டாங்க. அந்த மாதிரி தாயார் அவங்க.
என் தாய்க்கு மூன்று குழந்தைகள் பிறந்த பின், நான்காவதாக ரஜினி கர்ப்பத்தில் இருக்கும்போதே, அவரது முகக் கலை வந்தது. பக்கத்தில் இருக்கும் தாயார் என்னமோ, உனக்கு மட்டும் தனி முகக்கலை இருக்குதுன்னு கேட்பாங்க. அதை பக்கத்தில் இருக்கும் நான் கேட்டுக்கொண்டு இருந்தேன் அவ்வளவு தான். எனக்கு அப்போது பத்து வயசு.
எங்களுக்கு யாருடைய உதவியும் இல்லை - சத்திய நாராயண ராவ்
9 மாதம் 10 நாட்கள் கழிந்தது. சகோதரர் சிவாஜி ராவ் கெய்க்வாட் அவர்கள், பூர்ண கர்ப்பத்தில் இருக்கும்போது எனது தாயாரை நானே மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டுபோனேன். யாரும் எங்களுக்கு சப்போர்ட் இல்லை. யாருடைய சகாயம்கூட கிடையாது. என் தாயைக் கூட்டிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தேன்.
பன்னிரெண்டாம் தேதி, பன்னிரெண்டாவது மாதத்தில் 1950-ல் 11.45 மணிக்கு, சுகமான பிரசவத்தில் இவர் பிறந்தார். விசேஷமானது. அம்மா சொல்வாங்க, எனக்கு மங்கள வாத்தியங்கள் எல்லாம் கேட்குது என்று. பசுமாடுகள், யானைகள், குதிரைகள், தேவர்கள் சத்தம் எல்லாம் கேட்குதுன்னு சொல்வாங்க. அப்போது அது பூஜை செய்த பலன் என்று சொல்வோம்.
16 வருஷங்கள் செய்த பக்தி, பூஜை, செய்த பலன்கள் உனக்கு தெரியுதுன்னு சொல்வோம். அவர் பெரிய பக்தியில் இருந்தவங்க. ரஜினி வளர்ந்தார். 5 வயதில் எனது அம்மாவே, அவங்களை கல்விக்காக ஆரம்பப்பள்ளியில் ரஜினியை சேர்த்தாங்க. பக்தி என்பது ரஜினிக்கு ரத்தத்திலேயே வந்துவிட்டது. அந்தப் பள்ளி அருகிலேயே ஒரு மடம் இருந்தது. ஒசாய் மட் என்று, அதில் இருக்கும் குருக்கள் லவங்கபாக சுவாமிகளுக்கு ரஜினி மீது ரொம்ப பாசமாக இருப்பாங்க. நான்குநாட்கள் வரவில்லை என்றால், அவரது சிஷ்யர்களிடம் சொல்லி, வரவழைத்துப் பார்ப்பார்.
அங்கு போனால், அவர் சொல்ற வேலை எல்லாம் செய்து, அவரிடம் ஆசீர்வாதம் மற்றும் பழங்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவார், ரஜினி. அப்படியே வளர்ந்து 9வயது ஆகுது, ரஜினிக்கு, பெங்களூருவில் இருக்கும் தபோவனத்தில் அவரை சேர்த்துவிட்டோம். பள்ளி படிச்சிக்கிட்டு, அங்குபோய் மூன்று மணி நேரம் சேவை செய்யணும். பஜனையில் கலந்துகொள்ளணும். வேத மந்திரங்கள் கத்துக்கணும். இதுதான் ரஜினிக்கான அன்றைய பணி.
கே.பாலச்சந்தர் தகப்பானார் ஸ்தானத்தில் இருந்து காப்பாற்றினார் - சத்யநாராயண ராவ்
அந்த குருவின் சேவை மிக முக்கியம். அப்போது ரஜினி நடித்த நாடகத்தில் ராமகிருஷ்ணா மடத்தில் இருந்த சாதுக்கள் கலந்துகொண்டு, அவரைப் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டினர். அடுத்து நன்கு படித்தார்கள். படித்தபின், நாடகமேடையில் ரஜினி நடித்துக்கொண்டிருந்தார். அதன்பின், மதராஸ் இன்ஸ்டியூட்டில் சேர்வதற்காக அறிவிப்பு பேப்பரில் வந்தது. அப்போது எங்கக் கிட்ட வந்து அனுமதி கேட்டார். நாங்கள் இங்கேயே இருக்கவேண்டாம், தாராளமாக போங்கள் என்று சொன்னோம். அவரது நண்பர்களும் உதவினார்கள்.
அடுத்து குரு ஸ்தானத்தில் இருக்கும் பாலச்சந்தர் சார் அவர்கள் அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சின்ன ரோல் கொடுத்தாங்க. குரு ரூபத்தில் இருக்கும் பாலச்சந்தர் சாரின் கை சாதாரணமானது அல்ல. இன்பத்தில் துன்பத்தில் ரஜினியைக்காப்பாத்திருக்கார். தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து காப்பாத்தியிருக்கார்.
என் தாய்க்கு பால் சுரக்காதபோது, மாட்டின் பால் குடித்து வளர்ந்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினி. அதே மாட்டுக்கு நன்றி தெரிவிக்க அண்ணாமலையில் ஒரு பாட்டில்கூட நடிச்சிருக்கார்.
அடுத்து அருணாச்சலம் படத்தில் நடித்தார். இவர் சாதாரணமானவர் அல்ல. தமிழ் மக்களின் இதயத்தில் அமர்ந்திருக்கும் சிவன். தன்னுடைய படங்களின்மூலம் தர்மத்தையும் நியாயத்தையும் போதித்திருக்கிறார். என் தாய் செய்த தவத்தின் காரணமாக, இவர் சினிமாவில் வந்து 25 ஆண்டுகளுக்குப் பின் முருகப்பெருமான் சம்பந்தமான படையப்பா படம் வந்திருக்கு என்றால், அவரது தவம் எவ்வளவு பெரிது. அருமைத்தம்பி ரஜினிகாந்த் அவர்கள் பெரிய பெரிய வேலைகள் செய்து ஏழைமக்களுக்கு உதவியாக இருக்கணும்’’ என்று பேசி முடித்திருப்பார், சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் அவர்கள்.
டாபிக்ஸ்