Top Rated Movies Amazon prime: ரஜினியின் தளபதி, கமலின் மூன்று கிளாசிக் படங்கள்!அமேசான் ஓடிடி டாப் ரேட்டிங் தமிழ் படங்கள்
Aug 22, 2024, 10:51 AM IST
ரஜினியின் தளபதி, கமலின் மூன்று கிளாசிக் படங்கள் உள்பட அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் டாப் ரேட்டிங் பெற்ற தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம். சர்ப்ரைசாக இந்த லிஸ்டில் விஜய், அஜித் படங்கள் ஏதும் இல்லை.
திரையரங்குகளில் சினிமாக்களை பார்க்க தவறவிட்டவர்களுக்கு சிறந்த வரப்பிரசாதமாக ஓடிடி தளங்கள் இருக்கின்றன. வாரந்தோறும் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருவதை போல், ஓடிடியிலும் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வரிசை கட்டி வெளியிடப்படுகின்றன.
அத்துடன் தமிழ் என்று இல்லாமல் பிற மொழி படங்களும் இதில் வெளியிடப்படுவது பார்வையாளர்களுக்கு பன்முக தேர்வை தருவதோடு, ரசனையைும் மெருகேற்றுகிறது.
தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் ஓடிடி தளங்களாக அமேசான் ப்ரைம், நெட்பிளக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்றவை இருக்கின்றன. இதில் பார்வையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பேமிலி, காதல், காமெடி, ஆக்சன் படங்கள் வரிசை கட்டி இடம்பிடித்துள்ளன.
அதன்படி அமேசான் ப்ரைம் தளத்தில் டாப் ரேட்டிங் பெற்றிருக்கும் தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்
தேவர் மகன்
ரஜினிக்கு பாட்ஷா என்றால் கமலுக்கு தேவர் மகன் என்று சொல்லும் விதமாக மாஸ் திரைப்படம் தேவர் மகன். 1992இல் வெளியான இந்த படம், இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பிய மற்றொரு கமல் படமாகும். படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சிறந்த கிராமத்து பின்னணி கதையாக இருந்த தேவர் மகன் படத்துக்கு 8.7 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
பரியேறும் பெருமாள்
இயக்குநர் மாரிசெல்வராஜ் அறிமுகம படமான பரியேறும் பெருமாள் படத்தில் கதிர், கயல் ஆனந்தி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். கிராமத்து பின்னணியில் ஒடுக்கப்பட்ட நாயகன், உயர் வகுப்பு சேர்ந்த நாயகி இடையிலான உறவு பற்றி பேசி இந்த படம் பான் இந்தியா அளவில் ரீச் ஆனது.
இந்த படமும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ரிலீசான நிலையில், இந்தியா முழுவதும் பல மொழி ரசிகர்களால் பார்க்கப்பட்டு பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்துக்கு 8.7 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது
அன்பேசிவம்
சுந்தர் சி இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவன் நடித்து 2003இல் வெளியான படம் அன்பே சிவம். ரிலீசின் போது கவனிக்கப்படாமல் பின்னர் ரசிகர்களை கவர்ந்த இந்த படம் அதிகமாக ஸ்டிரீமிங் செய்யப்படும் படமாக அமேசான் ப்ரைமில் இருந்து வருகிறது. இந்த படத்துக்கு 8.6 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது
தளபதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தளபதி படம் 1991இல் வெளியானது. ரஜினி ரசிகர்களையும் கடந்த அனைத்து தரப்பினரையும் கவர்ந்த படமாக தளபதி இருந்தது. மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி இந்த படத்தின் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பார்.
மாஸ் மற்றும் கிளாஸ் என ரஜினியின் நடிப்பு திறமைக்கு சான்றாக அமைந்த இந்த படம் கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்ற படமாக உள்ளது. இந்த படத்துக்கு 8.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது
96
விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் 96. பள்ளி கால நண்பர்களின் சந்திப்பு, காதல் என பீல் குட் படமாக இருக்கும் 96 தமிழையும் கடந்த இந்தியா முழுவதும் ரசிகர்களை கவர்ந்தது. அத்துடன் கன்னடா, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்துக்கு 8.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
அசுரன்
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் மற்றொரு படைப்பாக அசுரன் உள்ளது. 1980 காலகட்டத்தில் நடக்கும் கதையாக, பிரபல எழுத்தாள் பொன்மனி எழுதிய வெக்கை என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியிருக்கும். பஞ்சமி நிலம் தொடர்பான அரசியலை குடும்ப செண்டிமென்ட் உடன் பேசிய இந்த படம் ஹிட்டானதுடன் தெலுங்கிலும் வெங்கடேஷ் - பிரியாமணி நடிப்பில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த படம் பாலிவுட் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட படமாக மாறியது. தனுஷின் நடிப்பை இந்திய முழுவதும் ரசிகர்கள் பாராட்டி தள்ளினர். இந்த படத்துக்கு 8.4 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
ராட்சசன்
விஷ்ணு விஷால், அமலாபால், அம்மு அபிராமி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க க்ரைம் த்ரில்லர் படமாக ராட்சசன் படம் 2018இல் வெளியானது. ராம்குமார் இயக்கியிருந்த இந்த படம், சைக்கோ கொலை காரனை தேடும் சப் இன்ஸ்பெக்டர் பற்றிய கதையாக உள்ளது. இந்த படத்துக்கு 8.3 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
கன்னத்தில் முத்தமிட்டால்
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த படம் கன்னத்தில் முத்தமிட்டால். 2004இல் வெளியான இந்த படம் ஈழ தமிழர்கள், ஈழப்போர் பின்னணியை கொண்ட கதையாக உள்ளது. தேசிய விருது வென்றிருக்கும் இந்த படத்துக்கு 8.3 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது
விக்ரம் வேதா
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியாகி வசூலை குவித்தது விக்ரம் வேதா. போலீஸ் மற்றும் கேங்ஸ்டர்களுக்கு இடையிலான மோதலை விக்ரமாதித்தன் - வேதாளம் கதை பாணியில் சொல்லியிருக்கும் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தின் இந்தி ரீமேக் இதே பெயரில் சயீப் அலிகான் - ஹிர்திக் ரோஷன் நடிப்பில் 2022இல் வெளியானது. ஆனால் தமிழுக்கு கிடைத்த வரவேற்பு இந்தியில் கிடைக்கவில்லை. அத்துடன் இந்தி வெளியிட்டுக்கு முன் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படங்களின் லிஸ்டில் ஒன்றாக விக்ரம் வேதா உள்ளது. இந்த படத்துக்கு 8.2 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
.