ரஜினி - கமல் மோதல்..ஜப்பானில் வசூலை அள்ளிய தமிழ் படம், விஜயகாந்துக்கு திருப்புமுனை! இன்றைய நாளில் வந்த தமிழ் படங்கள்
Oct 23, 2024, 07:48 AM IST
தீபாவளி ரிலீசாக ரஜினி - கமல் மோதல், ஜப்பானில் வசூலை அள்ளிய தமிழ் படம் விஜயகாந்துக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம் என இன்றைய நாளில் வந்த தமிழ் படங்கள் லிஸ்டை பார்க்கலாம்
தமிழ் சினிமாவில் அக்டோபர் 23ஆம் தேதி முக்கிய நாளாகவே அமைந்துள்ளது. ரஜினி - கமலின் மோதல், விஜயகாந்தின் சூப்பர் ஹிட், மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் முதல் படம் போன்றவை இந்த நாளில் வெளியாகியுள்ளன.
தாழம்பூ
எம்ஜிஆர் - கேஆர் விஜயா நடிப்பில் ஜனரஞ்சகமான கதையம்சத்துடன் வெளியாக ரசிகர்களை கவர்ந்த படம் தாழம்பூ. என்.எஸ். ராமதாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் எம்.ஆர். ராதா, எம்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், நாகேஷ், மனோரமா உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
கொலை பழி சுமத்தப்பட்டு சிறை செல்லும் எஸ்.ஏ. அசோகனை காப்பாற்ற நிஜ குற்றவாளிகளை எம்ஜிஆர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. கே.வி. மகாதேவன் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 1965இல் வெளியான இந்த மாஸ் என்டர்டெயினர் படம் வெளியாகி இன்றுடன் 59 ஆண்டுகள் ஆகிறது
நீர்குமிழி
மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்குநராக அறிமுகமான படம் நீர்குமிழி. கதையின் நாயகனாக நாகேஷ் நடிக்க, செளகார் ஜானகி, வி. கோபாலகிருஷ்ணன், மேஜர் சுந்தரராஜன், ஜெயந்தி, எஸ்.என். லட்சுமி பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
இதேபெயரில் பல முறை மேடையில் அரங்கேற்றிய நாடகத்தை படமாக்கினார் பாலசந்தர். இசையமைப்பாளர் வி. குமாருக்கு இதுதான் அறிமுக படமாகும். தீபாவளி ரிலீசாக எம்ஜிஆரின் தாழம்பூ படத்துக்கு போட்டியாக வந்த நீர்குமிழி ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தந்தது. படத்தில் நாகேஷின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அத்துடன் படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற நிலையில் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பின்னர் ரீமேக் செய்யப்பட்டது.
வைதேகி காத்திருந்தாள்
தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் ரொமான்டிக் படமாக வைதேகி காத்திருந்தாள் இருக்கிறது. 1984இல் வெளியான இந்த படத்தை ஆர். சுந்தரராஜன் இயக்கியுள்ளார். விஜயகாந்த், ரேவதி, கோகிலா, கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
கவுண்டமணி - செந்தில் காமெடி பட்டிதொட்டியெங்கும் வரவேற்பை பெற்றது. பெட்ரோமேக்ஸ் காமெடி, கவுண்டமணியின் ஆல் இன் ஆல் அழகுராஜா சைக்கிள் கடை காமெடிக்கள் இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளன. பெட்ரோமேக்ஸ் லைட்டே வேணுமா என கவுண்டமணி சொல்வது வாழ்கையில் பலரும் அன்றாடம் பயன்படுத்தும் சொல்லாடல் ஆனது.
கமலின் காக்கிசட்டை படத்தின் பாடலுக்கு கம்போஸ் செய்து முடித்துவிட்டு இருந்த ப்ரீ டைமில் கம்போஸ் செய்த யூஸ் செய்யாமல் இருந்த ட்யூனை கேட்ட பின் வைதேகி காத்திருந்தாள் கதை உருவானது, இந்த படம் உருவாவதற்கான சுவாரஸ்ய பின்னணியாக அமைந்தது. இளையராஜா இசையில் அழகு மலர் ஆட, காத்திருந்து, மேகம் கருக்கையிலே, இன்றைக்கு ஏன் இந்த, ராசாவே உன்னை, ராசத்தி உன்னை என அனைத்து பாடல்களும் சூப்பர்் ஹிட்டாகி இன்று வரையிலும் பலரால் விரும்பி கேட்கப்படும் பாடலாக இருக்கிறது. விஜயகாந்த் கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய இந்த படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது.
எனக்குள் ஒருவன்
கமல்ஹாசனின் 125வது படமான எனக்குள் ஒருவன் படத்தை எஸ்.பி. முத்துராமன் இயக்கியுள்ளார். வைதேகி காத்திருந்தாள் படத்துடன் வெளியாகியிருந்த இந்த படத்தில் ஸ்ரீபிரியா, ஷோபனா, சத்யராஜ், வி.கே. ராமசாமி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். அமெரிக்க படமான ரீஇன்கர்நேஷன் ஆஃப் பீட்டர் பிரவுட் என்ற படத்தை அடிப்படையாக வைத்து கார்ஸ் என்ற படம் உருவானது.
இந்த படத்தின் அடிப்படை கதையுடன் மறு கற்பனையாக உருவான எனக்குள் ஒருவன் கலவையான விமர்சனங்களை பெற்றது. இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டான. மியூசிக்கல் த்ரில்லர் பாணியில் அமைந்திருந்த இந்த படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகியுள்ளது.
ரகசிய போலீஸ்
ஆர். எஸ். இளவரசன் இயக்கத்தில் சரத்குமார், நக்மா, ராதிகா, ஆனந்தராஜ், கவுண்டமணி, செந்தில், தேவன் உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்தது. படத்தின் கவுண்டமணி வில்லனாக நடித்திருப்பார். விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டிருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 1995இல் வெளியான இந்த படம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகிறது.
முத்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான முத்து 1995 தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்த இந்த படம் மலையாளத்தில் ஹிட்டான தென்மாவின் கொம்பத்து அடிப்படை கதையை வைத்து உருவாகியிருந்தது. சரத்பாபு, மீனா, செந்தில், வடிவேலு, ராதாரவி, பொன்னம்பலம் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது. அத்துடன் ஜப்பானில் அப்போது அதிக வசூலை ஈட்டிய இந்திய படம் என பெருமை பெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த முதல் ரஜினிகாந்த் படமான முத்து படத்தின் அனைத்து பாடல்களும் பின்னணி இசையும் ஹிட்டாகின. சில்வர் ஜூப்ளி ஹிட், தமிழ்நாடு அரசின் விருதை வென்ற முத்து படம் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகிறது
மக்கள் ஆட்சி
1995 தீபாவளி வெளியீடாக வெளியான படங்களில் அரசியல் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த மக்கள் ஆட்சி படமும் ஒன்றாகும். மறைந்த இயக்குநர் ஈ.வி. ராமதாஸ் திரைக்கதை எழுத, ஆர். கே. செல்வமணி இயக்கிய இந்த படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி, ரோஜா, ரஞ்சிதா, ஐஸ்வர்யா, லிவிங்ஸ்டன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியலை நிலவரத்தை பிரதிபலிக்கும் விதமாக இருந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.
குருதிப்புனல்
1995 தீபாவளி விருந்தாகவும், ரஜினி - கமல் மோதல்களில் ஒன்றாக முத்து படத்துடன் மோதிய படம் குருதிப்புனல். பாலிவுட் படமான த்ரோகால் படத்தின் ரீமேக்காக உருவான இந்த படத்தை ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கியிருப்பார். கமலுடன், அர்ஜுன், கெளதமி, கீதா, நிழல்கள் ரவி, கே.விஸ்வநாத், அஜய் ரத்னம், சுபலேக சுதாகர் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் தமிழ் சினிமாவின் சிறந்த கல்ட் கிளாசிக் படமாக இருந்து வருகிறது.
டால்பி ஸ்டீரியோ சர்ரவுண்டு தொழில்நுட்பத்தில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றது. சிறந்த நடிகருக்கான பிலம்பேர் விருதை கமல் இந்த படத்துக்காக வென்றிருந்தார். இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட குருதிப்புனல் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகியுள்ளது.
டாபிக்ஸ்