Nandhan Director: அந்த உரிமை உங்களுக்கு இல்லை.. இன்றும் ஏங்குகிறேன்.. மனதில் இருப்பதை கூறிய டைரக்டர்
Oct 03, 2024, 10:18 PM IST
Nandhan Director: நந்தன் திரைப்படம் வெளியான பின் பலரும் திரைப்படத்தை பாராட்டி பேசி இருந்தாலும் நான் இவரின் கருத்துக்காக காத்திருந்தேன். இந்த படைப்பையே அவருக்காகத் தான் உருவாக்கி இருந்தேன் என இயக்குநர் இரா.சரவணன் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் பலரும் படித்து முன்னேறி சமூக பாகுபாடுகளை கடந்து வருகின்றனர். ஆனால், ஒருபுறம் எத்தனை நாகரிக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இன்னமும் சிந்தனையிலும் ரத்தத்திலும் சாதிய பாகுபாடுகள் ஊறிப்போய் உள்ளனர். அவர்கள் அனைத்து மனிதர்களையும் சமமாக பார்க்க பழகுவதே இல்லை. அத்துடன் வரும் தலைமுறையினரையும் பழக விடுவதில்லை. இந்தக் கருத்தை மையமாக வைத்து வெளியான திரைப்படம் நந்தன்.
என்ன சொல்கிறது நந்தன்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து வெளியான திரைப்படம் நந்தன். இந்த படத்தில் அம்பேத்ராஜாக வரும் சசிகுமார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக நடித்துள்ளார். இவர் தன்னை பணி செய்ய விடாமல் தடுக்கும் ஆதிக்க வர்க்கத்திற்கு பதிலடி அளித்தாரா? அவரது மக்களின் உரிமைகளை மீட்டாரா என்பதே மையக்கரு.
இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின் இயக்குநரான இரா.சரவணன், நடிகர் சசிகுமாரை அடித்து துன்புறுத்தியுள்ளார். அவர் பார்த்த சாதிக் கொடுமைகளையும், வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் உண்மையாக திரையில் காட்ட எண்ணி, இவ்வாறு செய்ததாகவும இதனால், முதுகு கிழிந்து, காய்ச்சலில் நடுங்கியுள்ளாராம் சசிகுமார். ஆனால், அவர் அப்போதும் சூட்டிங்கில் நடித்து கொடுத்துள்ளாராம்.
ஊராட்சி தலைவர்கள் நெகிழ்ச்சி
இப்படி, படம் நெடுகிலும் வந்த அனைத்து காட்சிகளும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை பார்த்த பல பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களும் தங்கள் வாழ்க்கையை பிரதிபலிக்குமாறு இத்திரைப்படம் உள்ளதாகவும், சசிகுமார் வாங்கிய ஒவ்வொரு அடிகளும் எங்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என கண்ணீர் மல்க கூறினர். பின்னர், இதற்காக இயக்குநர் சசிகுமாரின் பிறந்த நாளன்று இயக்குநர் இரா. சரவணன் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இயக்குநர் சரவணன்
இந்நிலையில், நந்தன் திரைப்படம் குறித்து, இயக்குநர் இரா.சரவணன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஒரு படைப்பை பொதுவெளிக்கு கொண்டு செல்லும் போது, அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். விமர்சனம், பாரட்டு என சகலத்தையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும். இந்த டானிக் உங்கள் கையில் இருந்தால் மட்டுமே பொது வாழ்க்கைக்குள் வர வேண்டும். மதிப்பீடுகள் அற்ற வாழ்க்கை என்பது மிகவும் பத்திரமானது. ஆனால், நாம் அதற்கானவர்கள் அல்ல. அதனால், அனைத்து விஷயங்களையும் எதிர்கொண்டேன். அப்போது தான் படைப்பாளனாக மாற முடியும்.
மனது துடிக்கும்
ஆயிரம் பேர் நம்மை பாராட்டினால் கூட ஒரு சிலரின் பாராட்டுக்கு மனது ஏங்கும். இந்தத் தேர்வையே அவருக்காகத் தான் எழுதி இருப்போம். அது யாருக்கும் தெரியாது. அதை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு சென்றிருந்தாலும் ஒரு சிலர் அந்த படப்பை கண்டு என்ன சொல்லப் போகிறார்கள் என மனது கிடந்து துடிக்கும். அந்த மாதிரி நான் இயக்குநர் ராஜூ முருகனின் கருத்துக்காக ஏங்கினேன் என மிகவும் ஏக்கமாக கூறியிருந்தார்.
அந்த உரிமை இல்லை
முன்னதாக பேசிய அவர், என் படத்தை தியேட்டரில் சென்றும் பார்க்கும் ஒருவருக்கு என் படத்தை விமர்சிக்கும் எல்லா உரிமையும் உண்டு. இந்தப் படத்தை எப்படி எல்லாம் எடுத்திருக்கலாம் என எனக்கு அறிவுரை சொல்லவும் உரிமை உண்டு. படம் பிடிக்கவில்லை என்றால் என் சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் தகுதியும் உண்டு. ஆனால், நான் என்ன படம் எடுக்க வேண்டும் என்பதை சொல்லும் உரிமை மட்டும் இல்லை எனக் கூறியிருந்தார்.
மாற்றத்தை நீங்கள் தான் தர வேண்டும்
முன்னதாக வேறொரு பேட்டியில் பேசி இருந்த அவர், நந்தன் படத்தை துணை முதலமைச்சர் உதயநிதியிடம் காட்டினேன். அப்போது, இவ்வளவு அடியையும் வாங்கிய அந்த ஹீரோ எப்படி மாறுகிறார் என்பது தானே கிளைமேக்ஸ், அதை விட்டுவிட்டு ஏன் படத்தை சப்புன்னு முடித்துள்ளீர்கள் எனக் கேட்டார். அதற்கு இந்த கிளைமேக்ஸை மாற்ற வேண்டியது நான் அல்ல. ஆட்சியில் உள்ள நீங்கள் தான். ஆட்சியில் இருப்பவர்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நான் காட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் ஈஸியான ஒன்று. இதில் அவசியமானது ஆட்சியில் மாற்றம் செய்வது தான் முக்கியம் என பதிலளித்தாக கூறியிருந்தார்.