பண்ணைபுரத்தின் மற்றுமொரு வைரம்! தமிழ் சினிமா உலகின் பன்முக கலைஞன்! கங்கை அமரன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
Dec 08, 2024, 06:44 AM IST
இளையராஜா போன்ற மாபெரும் கலைஞனின் தம்பி என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவக்கிய கங்கை அமரன் இன்று அவரது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சினிமாத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சாதிக்கும் போது அதில் மூத்தவராக இருப்பவருக்கே அது அதிகமாக சேரும். அதில் சிக்கிய ஒரு கலைஞர் தான் கங்கை அமரன், இவர் இசைஞானி இளையராஜாவின் இளைய சகோதரர் ஆவார். இந்த அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்த இவருக்கு தற்போது திரைப்பட இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற பல அடையாளங்கள் உள்ளன. இளையராஜா போன்ற மாபெரும் கலைஞனின் தம்பி என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவக்கிய கங்கை அமரன் இன்று அவரது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இளையராஜாவின் இளைய சகோதரர்
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் இளையராஜாவிற்கு அடுத்த குழந்தையாக 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாளில் பிறந்தார். கங்கை அமரன், இளையராஜா, "பாவலர்" வரதராஜன் ஆகியோர் இந்திய பொதுவுடைமைக் கட்சி யின் மேடைகளில், கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களையும், அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முறைகளை, பாடல்கள் மூலம் விமர்சித்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் வந்தனர். இளையராஜாவின் சகோதரர் என்றதாலேயே என்னவோ இவருக்கு இசையின் பெரும் திறன் இருந்தது.
செந்தூரப்பூவில் தொடங்கிய பயணம்
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி என்ற பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்த “16 வயதினிலே” படத்தில் செந்தூரப்பூவே என்ற பாடலை எழுதும் வாய்ப்பு கங்கை அமரனிற்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், முல்லும் மலரும் என தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு இவரது இசையமைப்பாளர் பயணம் தொடங்கியது. 1982 ஆம் ஆண்டு கோழி கூவுது என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
1989 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான கரகட்டாக்காரன் படம் பட்டித்தொட்டியெங்கும் பெரும் வெற்றியடைந்தது. தமிழ் சினிமா வரலாற்றில் பல ஆண்டுகளாக தியேட்டரில் ஓடிய படம் என்ற சாதனையை இப்படம் பெற்றது.
கண்டுக்கொள்ளப்படாத கலைஞன்
தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய திறமையாளர்களில் இவரும் ஒருவர். இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் இப்படி ஏதாவது ஒன்றில் சாதனை படைத்தாலே அவர்களை கொண்டாடி தீர்ப்போம். ஆனால், இவர் இந்த மூன்றிலுமே ஏராளமான ஹிட் கொடுத்து சாதனை படைத்தவர். கூடவே, தான் இயக்கிய படங்களுக்கு கதாசிரியர். பாடகர், பின்னணி குரல், நடிப்பு என்றும் பன்முகம் உண்டு.
கமல்ஹாசன் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படமாக திகழ்ந்த வாழ்வே மாயம் திரைப்படத்திற்கு இவர் தான் இசையமைத்துள்ளார் என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். அதேபோல பிள்ளைக்காக, ஜீவா, சின்னத்தம்பி பெரியதம்பி என பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். ஏனோ இவர் இசையமைத்த படங்களின் இசை இளையாராஜா என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இளையராஜாவின் அதே ஆத்மார்த்த திருப்தி இவரது இசையிலும் கிடைக்கும் காரணத்தினால் இருக்கலாம். இவர் இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி ஆகியோரின் தந்தையும் ஆவார். இவர் இன்று அவரது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
டாபிக்ஸ்