தியேட்டரில் 20ம் நாளை நெருங்கும் கங்குவா.. சொன்னது என்ன செய்தது என்ன? கங்குவாவின் வசூல் என்ன?
Dec 03, 2024, 08:51 AM IST
கங்குவா திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி 19 நாட்களை நிறைவு செய்த நிலையில் அதன் வசூல் விவரங்களைப் பார்க்கலாம்.
நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளிவந்த கங்குவா, கலவையான பேச்சுக்களுடன் ஓடி வருகிறது.
கனெக்ட் ஆகாத கங்குவா
ஆனால், இப்படம் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி பிறமாநில மக்களுக்கும் சரியாக கனெக்ட் ஆகவில்லை. நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்ததால், இரண்டாவது நாளே கங்குவா திரைப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது.
ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஒன்று, கங்குவா. ஏழுக்கும் மேற்பட்ட நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகியுள்ளது. கங்குவா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய போர்க் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் போர் புரிவதுபோல் நடித்துள்ளனர்.
கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜி தீவுகள், கொடைக்கானல், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு வெளிநாடு பகுதிகளில் நடைபெற்றது.
சொதப்பியது எது?
கங்குவா படத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதையை நிகழ்காலத்துடன் இணைக்க முயன்றார், இயக்குநர் சிவா. கங்குவா திரைப்படத்தில் முக்கியமில்லாத கதாபாத்திரங்களின் அறிமுகமும், படத்தின் முதல் 20 நிமிடக் காட்சிகளும் சலிப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசையும் மோசமாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. கதை தேவை இல்லை என்றாலும்; ஐந்து வம்சங்களைப் பற்றி சொல்ல வந்த இயக்குநர் சிவாவின் முயற்சி பார்வையாளர்களைக் குழப்பியது. அதனால் பார்வையாளர்களை இந்தக் கதையில் முழுமையாக ஒன்றவில்லை.
பட்ஜெட்டில் பாதி கூட வசூலிக்காத கங்குவா
350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா திரைப்படம் வெளியான 19 நாட்கலில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 38.72 கோடி ரூபாயும் உலகளவில் ரூ.105.2 கோடி ரூபாயும் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது கங்குவா படத்தின் பட்ஜெட்டில் பாதியைக் கூட வசூலிக்க முடியவில்லை.
படத்தின் தாக்கம் எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் எழுந்தது என்றால், தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் திரையரங்குகளில் பப்ளிக் ரிவியூ எடுக்க வருபவர்களைத் தடை விதிக்கும் அளவுக்கு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கங்குவா ஓடிடி ரிலீஸ்
பொதுவாகவே, ஒரு படம் தியேட்டரில் வெளியாகி 30 நாட்கள் கழித்து ஓடிடியில் அப்படம் வெளியாகும்.
கங்குவா திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் 80 கோடி ரூபாய் கொடுத்து, வாங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே, கங்குவா திரைப்படமும் ஒரு மாதத்திற்குள் ஸ்ட்ரீமிங் ஆகும் எனக் கூறப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 13ஆம் தேதி முதல் கங்குவா அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கங்குவா திரைப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்