HT OTT SPL: ‘ஆர்யா, ஆண்ட்ரியா இந்தப் படத்துக்கு எதுக்கு? ஆனா நவாசுதின் வில்லத்தனத்துக்காக கண்டிப்பா பாக்கலாம்’
Jun 19, 2024, 06:45 AM IST
Amazon prime action movies: கற்பனையான துறைமுக நகரமான சந்திரபிரஸ்தாவில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில் சைந்தவ் கோனேரு என்ற "சைகோ" தனது மகள் காயத்ரியுடன் வாழ்ந்து வருகிறார்.
சைந்தவ் என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு மொழி ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாகும், இது சைலேஷ் கொலானு எழுதி இயக்கியதுடன் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரத்துள்ளது. இதில் வெங்கி என அன்புடன் அழைக்கப்படும் தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் பேபி சாரா ஆகியோர் நடித்துள்ளனர். இது நடிகர் வெங்கடேஷுக்கு 75வது திரைப்படம் ஆகும். நீண்ட காலமாக நடித்து வரும் அவருக்கு இந்தப் படம் நல்ல ஆக்ஷன் படமாக வந்துள்ளது.
இது 13 ஜனவரி 2024 அன்று விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான எதிர்மறையான ரிவ்யூக்களை பெற்றது. கதை, நடிப்பு, ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகள் பாராட்டப்பட்டது. இருப்பினும், இயக்கம், எழுத்து, வேகம் மற்றும் பாடல்கள் விமர்சிக்கப்பட்டன. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டவில்லை. ஆனாலும் ஆக்ஷன் படங்களை ரசிப்பவர்களுக்கு படம் பிடித்திருந்தது.
நவாசுதீன் சித்திக்கின் வில்லத்தனம்
குறிப்பாக நவாசுதீன் சித்திக்கின் வில்லத்தனமாக ஆக்டிங்கை பெரிதும் ரசிகர்கள் ரசித்தனர்.
கற்பனையான துறைமுக நகரமான சந்திரபிரஸ்தாவில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில் சைந்தவ் கோனேரு என்ற "சைகோ" தனது மகள் காயத்ரியுடன் வாழ்ந்து வருகிறார். இருப்பினும், காயத்ரிக்கு ஸ்பைனல் தசைச் சிதைவு இருப்பது கண்டறியப்பட்டபோது சைகோவின் வாழ்க்கை ஒரு தீவிரமான திருப்பத்தை எடுக்கிறது, மேலும் அதற்கு ரூ.17 கோடி செலவாகும் சோல்ஜென்ஸ்மா ஊசி தேவைப்படுகிறது. காயத்ரியின் ஆபரேஷனுக்காக பணத்தைப் பெறுவதற்காக சைந்தவ் மீண்டும் குற்ற உலகத்திற்குச் செல்கிறார், விரைவில் தனது கடந்தகால போட்டியாளர்களுக்கு எதிராக ஒரு தீவிரமான போரைத் தொடங்குகிறார், இதில் இரக்கமற்ற கேங்க்ஸ்டர் விகாஸ் மாலிக் அடங்கும். மகளைக் காப்பாற்றுவதில் அவர் வெற்றி பெறுவாரா? முடிவில் என்ன நடக்கும்? ரூ.17 கோடியை எப்படி ரெடி செய்தார் என்பது பரபர திரைக்கதையில் விடை.
ஆக்ஷன் காட்சி பக்கா..!
ஆக்ஷன் காட்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறார் வெங்கி. கண்டி்பாக பி சென்டரில் படம் நன்றாக ஓடியிருக்கக்கூடும்.
பக்கத்து வீட்டில் கணவரை பிரிந்து வாழும் பெண் கதாபாத்திரத்தில் ஷரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். அவரிடம் முரண்டு பிடிக்கும் கணவருக்கு சைந்தவ் தரும் ட்ரீட்மென்ட் கைத்தட்டல்களை பெறுகிறது.
அதேபோல், குழந்தையுடன் காரில் ஆயுதம் ஏந்திய கும்பலிடம் தப்பிக்க ஷரத்தா ஸ்ரீநாத் போராடுவதும், செல்போனில் கூலாக பேசி அவருக்கு சைந்தவ் வழிகாட்டுதல்களை கொடுக்கும் காட்சி புதுசு. ரசிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது.
விகாஸ் மாலிக் கதாபாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் மிரட்டியிருக்கிறார். அவருக்கு பக்கபலமாக நம்ம ஆண்ட்ரியா படம் முழுவதும் வருகிறார். அவருடன் நம்ம ஆர்யாவும் இந்தப் படத்தில் கவுரவ தோற்றத்தில் வருகிறார்.
இவர்கள் இருவரும் இந்தப் படத்திற்கு எதுக்கு? என ரசிகர்கள் யோசித்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை. டிவிஸ்ட் என்ற பெயரில் விகாஸ் மாலிக் தான் அந்த நோயை குணப்படுத்தும் மருந்து நிறுவனத்தின் ஓனர் என்பது ஏற்க முடியவில்லை.
ஆங்காங்கே சில சர்ப்ரைஸ் காட்சிகள் வைத்திருப்பது ஓகே. ஆனால், சைந்தவின் ஃபிளாஷ் பேக் காட்சிகள் வலுவாக இருந்திருக்கலாம். அவர் பெரிய ஆளிடம் அடியாளாக வேலை செய்வது போலவே திரைக்கதையில் வருகிறது. அப்பறம் அவருக்காக ஏன் இத்தனை பேர் பயப்படுகிறார்கள் என்ற கேள்வி பார்ப்பவர்கள் மனதில் எழுகிறது.
இந்த லாஜிக்கையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு பார்த்தால் ஆக்ஷன் பிரியர்களுக்கு படம் பிடிக்கும். last but not the least இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாரயணன் மியூசிக்காம்! பின்னணி இசையை பின்னி எடுத்திருக்கிறார்.
ஆக்ஷன் படத்தை நேசிப்பவர்கள் என்றால் இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம். அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.
டாபிக்ஸ்