Happy Birthday AK: கருணாநிதிக்கு நேருக்கு நேர்.. அஜித் செய்த சம்பவம் தெரியுமா? எழுந்து நின்று கை தட்டிய ரஜினி!
May 01, 2024, 11:56 AM IST
Happy Birthday AK: அந்த விழாவில் அஜித் பேசியதாவது, கலைஞர் அய்யாவிற்கு ஒரு வேண்டுகோள், இனிமேல் சென்சிட்டிவான விஷயங்களுக்கும், சமூக விஷயங்களுக்கும் இண்டஸ்ட்ரி தலையிட வேண்டாம் என்று நினைக்கிறேன். சிலர் எங்களை கட்டாயப்படுத்தி விழாவிற்கு வரவழைக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் வருகிறோம்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் இன்று அசைக்க முடியாத ஆளுமை. சினிமாவில் பின் புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தன் விடா முயற்சியால் தொடர்ந்து தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவரது சினிமா வாழ்வில் நிறைய ஏற்ற இறக்கங்களை கடந்து வந்தவர்.
பல நேரங்களில் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தது மீண்டும் மீண்டும் வெற்றிப் படங்களை தந்து தன்னை நிரூபித்து வந்துள்ளார். பைக்ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சினிமாவோடு சேர்த்து அதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறார். இன்று அவரது பிறந்தநாள். அஜித் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கடந்த சில காலமாக அஜித் நடிப்பதோடு நிறுத்தி கொண்டார். பத்திரிக்கையாளர் சந்திப்பு உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்தி விட்டார்.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் அது அவரது தனிப்பட்ட விருப்பம். அஜித் எப்போதும் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அதற்கு ஒரு உதாரணம் தான் முன்னாள் முதல்வர் கலைஞருக்காக திரைத்துறை சார்பில் நடத்தப்பட்ட பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் அஜித் பேசியது எனலாம் .
அந்த விழாவில் அஜித் பேசியதாவது, ' கலைஞர் அய்யாவிற்கு ஒரு வேண்டுகோள், இனிமேல் சென்சிட்டிவான விஷயங்களுக்கும், சமூக விஷயங்களுக்கும் இண்டஸ்ட்ரி தலையிட வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் இப்படியொரு விஷயம் நடக்கும் பொழுது இண்டஸ்ட்ரியில் பொறுப்பில் இருக்கும் சிலர் எங்களை கட்டாயப்படுத்தி விழாவிற்கு வரவழைக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் வருகிறோம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக இணைக்காதீர்கள்' என்று பேசியிருந்தார் அஜித்.
எழுந்து நின்று கை தட்டிய ரஜினி.
முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்பாகவே இதுபோன்று துணிச்சலாக பேசினார் அஜித். அப்போது முதல்வர் கருணாநிதி அருகில் அமர்ந்திருந்து நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த ரஜினி எழுந்து நின்று கைதட்டினார். இது படத்தில் மட்டும் அல்ல இயல்பாக அஜித் துணிச்சல் குணம் கொண்டவர் என்பதற்கான எடுத்துக்காட்டு என்று அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
ஆனாலும் அஜித் அப்படி பேசியதற்கு காரணம் என்ன என்பது குறித்து பலரும் பேசி இருக்கும் நிலையில், பின்னணி காரணம் ஒன்றை பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
“பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் அஜித் பேசியது குறித்து பலரும் பேசி இருக்கிறார்கள். ஆனால் அன்றைக்கு அஜித் அப்படி நடந்து கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர் வீட்டில் இருந்து வரும்பொழுது என்ன பேச வேண்டும் என்பதை எழுதி பையில் வைத்துக்கொண்டுதான் வந்தார்.
அவர் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்தபோது, அவருக்கு கலைஞர் உட்கார்ந்த இடத்திலிருந்து நான்காவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஷாலினிக்கு இருக்கையே இல்லை. இதைப் பார்த்து அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
வெளியே சென்று விடலாமா என்று யோசித்தால், அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிவிடும். இந்த நிலையில் தான் கலைஞருடைய மனைவியான தயாளு அம்மாள், ஷாலினியை தன் பக்கத்தில் அமர்ந்து கொள் என்று சொல்லி, அவர் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார்.
அஜித்தை பொருத்தவரை எங்கு சென்றாலும் அவர் ஷாலினியோடு இருக்க வேண்டும் என்று விரும்புவார். இந்த நிலையில் ஷாலினி ஒரு பக்கமும், அஜித் ஒரு பக்கமும் அமர்ந்தது. அவருக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தி விட்டது.
கூடவே, அவரை கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியதும் அவர் மனதிற்குள் இருந்தது. இவை இரண்டும் சேர்ந்து, அவருக்கு மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த கொந்தளிப்பு தான் அன்று அவர் அப்படி பேசியதற்கான காரணம்” என்று பேசினார்.
டாபிக்ஸ்