மர்ம தேசத்தில் கங்குவா.. படக்குழு சொன்ன சீக்ரெட்.. படையெடுக்கப்போகும் ரசிகர்கள்!
Oct 25, 2024, 02:52 PM IST
கங்குவா திரைப்படத்தின் காட்சிகளை பிரம்மாண்டமாக திரையில் காட்ட பட்ட சிரமங்களை அத்திரைப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா விளக்கியுள்ளார்.
சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு சூர்யா கதாநாயகனாக நடித்து திரைக்கு வரும் திரைப்படம் கங்குவா. வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தான், சூர்யாவின் கெரியரிலேயே அதிக பொருட் செலவில் எடுத்த படம்.
இந்தப் படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், கங்குவா திரைப்படம் உருவான விதம் குறித்தும், படத்தின் காட்சிகள் குறித்தும், அவை நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் படக்குழவினர் பெருமையாக கூறிவரும் நிலையில், அந்தப் படம் உருவாக்கப்பட்ட விதம் குறித்து அத்திரைப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா நக்கீரன் ஸ்டூடியோவிற்கு அளித்த பேட்டியில் சிலாகித்து கூறியுள்ளார்.
அடர்ந்த காடு
அந்தப் பேட்டியில், கங்குவா படத்தின் கதையை எழுதும்போதே அடர்ந்த காடு, சூரியன் கூட உள்ளே வரமுடியாத அளவு அடர்ந்த காடு என்றுதான் ஆரம்பித்தேன். அப்படி படம் எடுக்க சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது என்ற யோசனையும் ஒருபக்கம் இருந்தது. கங்குவா படத்திற்காக சிறந்த லொக்கேஷன் தேடி நிறைய காடுகளில் அலைந்து திரிந்தோம்.
அப்போது, கங்குவா தயாரிப்பு வடிவமைப்பாளர் மிலன், கொடைக்கானலில் படத்திற்கான லொக்கேஷனை தேடிப் பார்க்கலாம் எனக் கூறினார். அதன்பின் கொடைக்கானலின் காடு மலைகளை அலசி ஆராய்ந்தோம். அப்போது, தாண்டிக்குடி என்ற இடத்தில், நான் நினைத்து போல மிகவும் ரம்மியமான இடம் கிடைத்தது.
கொடைக்கானலில் கிடைத்த அழகிய கவிதை
அதைத் தொடர்ந்து, நாங்கள் அனைவரும் படத்தில் வரும் பெருமாச்சி எனும் தீவுக்காக கொடைகானலிலுள்ள ஒரு மலை முகட்டுக்கு சென்றாோம். அங்கு நடந்து செல்லவே மிகவும் சிரமமாக இருந்தது. இருப்பினும், அந்த இடமே மொத்தமாக பனி மூட்டத்தால் சூழ்ந்து ஒரு அழகான கவிதை போல இருந்தது.
இந்த இடம் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்ததால், இங்கேயே படத்திற்கான செட்டை அமைக்கலாம் என மிலன் கூறினார். நடக்கவே மிகவும் கஷ்டப்பட்ட இடத்தில் செட் அமைப்பது எப்படி என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அங்கு தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டு, வண்டிகள் செல்ல வழிவகை செய்தோம் என்றார்.
அதிகாலையிலேயே தொடங்கும் பணி
மேலும், படப்பிடிப்பை சரியான நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் நாங்கள் அதிகாலை 2.30 மணிக்கே செட்டிற்கு செல்ல வேண்டும். அப்போது தான் 100 கிலோ மீட்டர் பயணம் செய்து, மேக்கப் எல்லாம் போட சரியாக இருக்கும்.
மர்மம்
இந்த வேலைகள் அனைத்தையும் முடித்தால், காலை 6.30 மணிக்கு சூரிய உதயம் சமயத்தில் படப்பிடிப்பை தொடங்குவோம். மூடுபனி சூழ அந்த இடமே ரம்மியமாக இருக்கும். அப்போது எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் மக்களுக்கு ஒரு மர்மத்தை அளிப்பது போலவே இருக்கும். இந்த சூழ்நிலையில் இங்கு காதல் காட்சிகளே படமாக்கப்படும். காரணம், காதல் மர்மமான ஒன்று. அதற்கு தகுந்தார் போல காட்சிகள் இருப்பது படத்திற்கு கூடுதல் மர்மத்தை அளிக்கும். இது பார்க்கும் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும் எனக் கூறியுள்ளார்.
புதிய அனுபவம்
முன்னதாக கங்குவா படத்தைக் குறித்து பேசிய நடிகர் சூர்யா, ஹாலிவுட் படங்களான 'பிரேவ்ஹார்ட்', 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்', 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'அபோகாலிப்டோ' போன்ற படங்களை நாம் அனைவரும் ரசித்தோம். இந்த படங்களின் கதை, மேக்கிங்கில் மயங்கி பலமுறை பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட படங்களை எப்போது செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக கங்குவா படத்தை உருவாக்கியுள்ளோம்.
100 வருடம் பின்னோக்கிய கதை
சில 100 வருடங்கள் பின்னோக்கிச் சென்று அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து சிக்கலான சூழ்நிலையை மக்கள் அனுபவித்தால் என்ன நடக்கும் என்ற இயக்குநர் சிவாவின் யோசனையில் இந்த படம் உருவானது" என்றார்.
சிவா க்ரீன் மேட் ஷாட்களில் அசத்தும் இயக்குநராக சிறுத்தை சிவா இருக்கிறார். விஷுவலாக அவர் கதை சொல்வதில் மிகவும் திறமையானவராக இருக்கிறார். திரையரங்கில் ரசிகர்கள் வெளிப்படுத்தும் தருணங்களை வெகுவாக விரும்புகிறார். எனவே அனைத்தையும் ஒன்றாக இணைத்து 'கங்குவா' படத்தை உருவாக்கியுள்ளார்" என்று கூறினார்.
டாபிக்ஸ்