பிறந்ததில் இருந்தே ஒரே பேச்சு.. அமைதியில் இருக்கும் அழகு.. உணர்ந்தால் யோசிச்சுப் பேசுவீங்க.. செல்வராகவன் பேச்சு
Nov 05, 2024, 02:13 PM IST
பிறந்ததில் இருந்தே ஒரே பேச்சு.. அமைதியில் இருக்கும் அழகு.. உணர்ந்தால் யோசிச்சுப் பேசுவீங்க.. செல்வராகவன் பேச்சு
SelvaRagavan: தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்கள் இப்போதும் பெரும்பாலான மக்களால் கொண்டாப்படுகின்றன.
இவரது இயக்கத்தில் கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் ஆகிய இரு படங்கள் வெளியாகி ஓரளவு லாபத்தைப் பெற்றுத்தந்தன. இதற்கிடையில் நடிப்பிலும் கவனம்செலுத்திய செல்வராகவன் சாணி காயிதம், பீஸ்ட், பகாசூரன், ஃபர்ஹானா உள்ளிட்டத் திரைப்படங்களில் நடித்தார்.
சமீபத்தில், புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கத்தில், பெயரிடப்படாத ஒரு பான் இந்திய திரைப்படத்தில் செல்வராகவன் மும்முரமாக நடித்து வருகிறார்.
பான் இந்தியப் படத்தில் நடித்து வரும் செல்வராகவன்:
இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, புஷ்பா மற்றும் ஜெயிலர் படப்புகழ் சுனில், தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி, ராதாரவி, யோகி பாபு, வினோதினி உட்படப் பலர் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, திண்டுக்கல் அருகில் ஏறத்தாழ ஆயிரம் துணைநடிகர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.
அதேபோல், இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் செல்வ ராகவன், ட்விட்டரில் அவ்வப்போது தத்துவ ட்வீட்களை பறக்கவிடுவார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
அதைத்தொடர்ந்து பள்ளியில் ஆன்மிக உரை நிகழ்த்தி கைதான மஹா விஷ்ணு என்பவரை மறைமுகமாகத் தாக்கியும் ஆன்மிக குரு என்றால் யார் என்பது குறித்தும், தியானம் எப்படி செய்யவேண்டும் என்பது குறித்தும், அனைத்து மதங்களும் போதிப்பது என்ன என்பது குறித்தும் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் வீடியோவில் பேசியிருந்தார்.
பின் தமிழில் பேச வலியுறுத்திய இயக்குநர் செல்வராகவன் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதியின் அழகு - செல்வராகவன் வெளியிட்ட வீடியோ:
இந்நிலையில், ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்ட இயக்குநர் செல்வராகவன், ‘’ என்னிக்காவது கடவுள் ஏன் நம்மளைப் படைச்சாருன்னு யோசிச்சிருக்கோமா?. அது தெரியாமலேயே நாம் செத்துப் போயிடுறோம். கடவுள் நம்மை ஏன் படைச்சான். அதைப் பற்றி யோசிக்க நேரம் கிடைத்தால் தானே. பிறந்ததில் இருந்தே பேச்சு, பேச்சு, பேச்சு. அடுத்து பள்ளிக்கூடம் போகும்போது பேச்சு, பேச்சு, பேச்சு. நண்பர்களோட பேச்சு. படிப்புப் பேச்சு. காலேஜ் போனவுடன் பேச்சு. அப்புறம் கேர்ள் ஃப்ரெண்ட் கிடைத்தால் பேசிட்டே இருக்கோம் மணிக்கணக்காக. அப்புறம் கல்யாணம் ஆச்சு என்றால் பொண்டாட்டி கூட பேச்சு பேச்சு பேச்சு.
என்னிக்காவது ஒரு திடீர் அமைதி கிடைத்தால், பேச யாருமே கிடைக்கலைன்னா, நாம் என்ன செய்றோம். முதலில் பயந்து நடுங்கி எப்போதோ பழகின ஃப்ரெண்ட்டுக்கு போன் செய்து, தெரிஞ்ச பொண்ணுக்கு ஒரு போன் பண்ணி, இல்லையென்றால், ஆபிஸில் இருக்கிறப் பெண்ணுக்கு சும்மாவாவது போன் பண்ணி பல மணி நேரம் பேசி பேசியே அந்த அமைதியைக் கண்டுபிடிக்கிறதே இல்லை.
கடவுள் பலவிதங்களில் நம்மளுக்கு படைத்ததன் பொருளைப் புரியவைச்சிடணும்னு தனிமையைக் கொடுத்தால் கூட, அந்த தனிமையைப் பயன்படுத்திக்கிறது இல்லை. பேசி பேசியே முடிச்சிடுறோம் நாம்.
கொஞ்சநேரம், முதலில் ஒரு மணிநேரம் பேசாமல் இருந்து பாருங்க. அடுத்து பார்த்துக்கலாம் மணிக்கணக்காக இருப்பதை!. அமைதியாக இருந்து பாருங்க. உங்களைச் சுத்தி உம்முன்னு சவுண்ட் கேட்கும். இதைத்தான் பலவிதமாக தனியாக இருந்து கேட்டுப்பாருங்க. தனியாக சாப்பிட்டுப் பாருங்க. தனியாக டிராவல் செய்து பாருங்க. இதை பலவிதமாக கேட்கிறோம். இது தான் அந்த அமைதியோட உண்மையான அர்த்தம். அமைதியின் அழகு.
அந்த சவுண்ட். நாம் ஓம் ஓம்ன்னு சொல்றோம் இல்லையா, அந்த டேஸ்ட். ஒருமுறை அது புரிஞ்சிடுச்சின்னு வைங்க, உங்களுக்குள் ஒரு அமைதி இருந்துகிட்டே இருக்கும்.
அந்த அமைதியைத் தேடி தேடி, முழுவதும் இறங்கி, படைப்போட அழகு நமக்கு என்னன்னு புரியும். அதற்கப்புறம் சாதாரணமாக நீங்கள் யாரு கூடயும் போய் பேச மாட்டீங்க. பேசுறதுக்கு முன் யோசிச்சுப் பேசுவீங்க. ரொம்ப முக்கியம் என்றால் மட்டும் தான் பேசுவீங்க. திரும்பி தனிமையாக இருக்கும்போது, அமைதியின் அழகு கூடிக்கொண்டே போகும்.
இதைத்தான் சாதுக்கள் சொல்ல முயற்சி செய்யிறாங்க. எல்லா புராணங்களிலும் இருக்குது. கடைசியில் உங்கள் சாவுக்கு முன், ரொம்ப அழகாக இருக்கும். அந்த சாவைப் பற்றி எந்த வருத்தமும் படமாட்டீங்க. அப்படியே போய் ரொம்ப அழகாக சாவு நிகழும்’’ என இயக்குநர் செல்வராகவன் பேசி முடித்திருக்கிறார்.
டாபிக்ஸ்