தொடர்ந்து வசூல் வேட்டை நிகழ்த்தும் அமரன்..ரூ. 50 கோடிக்கே தடுமாறும் கங்குவா! இன்றைய பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
Dec 02, 2024, 07:55 AM IST
தொடர்ந்து வசூல் வேட்டை நிகழ்த்தும் அமரன்ரூ. 50 கோடிக்கே தடுமாறும் கங்குவா, மழையால் பாதிக்கப்பட்ட ஆர்.ஜே. பாலாஜியின் சொர்ககவாசல் வசூல்
தீபாவளிக்கு ரிலீசான அமரன் திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் இருந்த தூக்கப்பட்டாலும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. அதேசமயம் சூர்யாவின் கங்குவா தமிழ்நாட்டில் கூட இன்னும் ரூ. 50 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை கலெக்ட் செய்ய தடுமாறி வருகிறது.
இதற்கிடையே நல்ல விமர்சனங்களை பெற்று, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றபோதிலும் மழை காரணமாக ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில், போரில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அமரன் படம் தீபாவாளி ரிலீசாக அக்டோர் 31ஆம் தேதி வெளியானது. தீபாவளி ரேஸில் வெற்றியை பெற்ற இந்த படம் வெளியாகி 32 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில், பாக்ஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com இணையத்தள தகவலின்படி, "அமரன் படம் 32வது நாளில் ரூ. 1.16 கோடி வசூலை செய்துள்ளது.
அத்துடன் தற்போது வரை படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 165.76, உலக அளவில் ரூ. 326 கோடி வசூலும் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டாலும், தற்போது அமரன் படம் ஓடிக்கொண்டிக்கும் திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அமரன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழிகளிலும் கணிசமாக வசூலை ஈட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தடுமாறும் கங்குவா
கடந்த மாதம் 14ஆம் தேதி மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் முதல் நாளில் இருந்தே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பேரிடி விழுந்தது. இதையடுத்து படம் வெளியாகி 18 நாள்கள் ஆகியிருக்கும் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ.105.03 கோடி வசூலை ஈட்டியுள்ளது என பாக்ஸ் ஆபிஸ் குறித்த தகவல்களை தெரிவிக்கும் Sacnilk.com இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
18வது நாளில் கங்குவா வெறும் ரூ. 14 லட்சம் மட்டுமே வசூலித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ. 38.62 கோடி வரை தற்போது வரை வசூலித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.50 கோடி என்ற வசூலை பெறவே தடுமாறி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் பேண்டஸி ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கங்குவா படத்தில் பாலிவுட் நடிகை இஷா பதானி ஹீரோயினாகவும், பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்துள்ளார்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட சொர்க்கவாசல்
அதேபோல் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் டீஸர், ட்ரெயல்ர் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் படமான சொர்க்கவாசல் நவம்பர் 30ஆம் தேதி வெளியானது. படத்துக்கு திரைக்கதை, மேக்கிங் சிறப்பாக இருப்பதாகவும் நல்ல வரவேற்பும் கிடைத்தது. விமர்சகரீதியாக படத்துக்கு பாராட்டுகள் கிடைத்தபோதிலும் ஃபெங்கல் புயல் காரணமாக வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ரூ. 25 கோடி பட்ஜெட்டில் சொர்க்கவாசல் படம் உருவாகியிருப்பதாக கூறப்படும் நிலையில் முதல் நாளில் ரூ. 84 லட்சம் வரை வசூலை ஈட்டியது. அதன் பின்னர் பிக்கப் ஆகி முதல் மூன்று நாள்களில் ரூ. 2.14 கோடி வசூலித்திருப்பதாக கூறப்பட்டாலும், மழை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் படத்தின் வசூல் இதை விட அதிகமாக இருந்திருக்கும் என பரவலாக பேசப்படுகிறது.
இருப்பினும் மழை தொடரும் பட்சத்திலும், வரும் வாரத்தில் பான் இந்தியா ரிலீஸாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் புஷ்பா 2 ரிலீஸ் ஆக இருப்பதாலும் சொர்க்கவாசல் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.