KALLAPETTI SINGARAM NAME REASON: தனித்துவ குரல்,முகபாவனை! பாக்யராஜ் ஆஸ்தான நடிகர் - கல்லாப்பட்டி சிங்காரம் பெயர் காரணம்
Aug 24, 2024, 02:20 PM IST
Tamil Comedy Actor Kallapetti Singaram Name Reason: தனித்துவ குரல், முகபாவனை என காமெடி கதாபாத்திரங்களில் அமர்க்களமான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் கல்லாப்பட்டி சிங்காரம். பாக்யராஜ் ஆஸ்தான நடிகர் ஆக வலம் வந்த இவரது பெயர் காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராகவும்,Kallapetti Singaram Name Reason பாக்யராஜ் படங்களின் ஆஸ்தான கதாபாத்திரங்களில் ஒன்றாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் கல்லாப்பட்டி சிங்காரம்.
மெலிதான தோற்றம், தனித்துவமான குரலமைப்பு, நடிப்பு மற்றும் பாடி லாங்குவேஜ் ஆகியவற்றுக்கு பெயர் போன கல்லாப்பட்டி சிங்காரம் சினிமா பயணம் 1960களில் இருந்து 1990கள் வரை என மூன்று தசாப்தங்கள் வரை இருந்துள்ளது. தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் தோன்ற தனது அற்புத காமெகளால் சிரிக்க வைத்த நடிகராக இருந்துள்ளார்.
மேடை நாடக கலைஞர்
கரூர் அருகே சிறு கிராமத்தை சேர்ந்த சிறுவயதில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார் கல்லாப்பட்டி சிங்காரம். தங்களது ஊர் திருவிழாக்களில் நடக்கும் நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் மற்றவர்களுக்கு நடித்து காண்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் பாதியில் முழுக்கு போட்டு தனது ஊரில் இயங்கி வந்த நாடக குழுவின் இணைந்து சிறு சிறு வேடங்களில் நடித்த வந்தவர், பின்னர் தனியாக நாடககுழு தொடங்கியுள்ளார். பல்வேறு ஜனரஞ்சமிக்க நாடகங்களை நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
கல்லாப்பட்டி பெயர் ஒட்டிக்கொண்ட தருணம்
சிங்காரமாக இருந்து வந்த இவர் தனது நாடககுழுவிலும், இதர நாடககுழுவிலும் என தொடர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அப்போது ஹோட்டல் ஓனராக கல்லாப்பட்டில் அவர் வெளிப்படுத்திய கலக்கலான நடிப்பை அனைவரையும் கவர்ந்த நிலையில், கல்லாப்பட்டி சிங்காரம் என மாறினார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே கல்லாப்பட்டி என்ற அடைமொழி அவரது பெயரில் ஒட்டிக்கொண்டது.
முதல் சினிமா வாய்ப்பு
சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த கல்லாப்பட்டி சிங்காரம் மேடை நாடகங்களில் நடித்தவாறே பயணித்து வந்துள்ளார். 1966இல் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் பழ வியாபாரியாக சிறு வேடத்தில் நாகேஷுடன் காமெடியில் அதகளம் செய்திருப்பார்.
தொடர்ந்து எம்ஜிஆரின் காவல்காரன், சிவாஜியின் சொர்க்கம், முத்தராமன் நடித்த மறுபிறவி, கமல்ஹாசன் நடித்த குமார விஜயம் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
பாக்யராஜ் படத்தில் கம்பேக்
சிங்காரத்துடன், சங்கிலி முருகன், கவுண்டமணி, பாக்யராஜ் உள்பட பலரும் சினிமா வாய்ப்பை தேடும் படத்தில் இருந்துள்ளனர். பெரிதான கதாபாத்திர வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சினிமா கைவிட்டு நாடகங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். ஆனால் இவரது நடிப்பு திறமையால் வெகுவாக கவர்ந்த பாக்யராஜ், தனது சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் மீண்டும் கம்பேக் கொடுக்க செய்தார்.
அதன் பின்னர் தொடர்ந்து மெளன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாள்கள், டார்லிங் டார்லிங் டார்லிங் என அடுத்தடுத்து தனது படங்களில் கல்லாப்பட்டி சிங்காரத்துக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
முகபாவனைகளில் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வந்த கல்லாப்பட்டி சிங்காரம். அதோடும் டைமிங் வசனங்களுடன் கூடிய எதார்த்த காமெடியாலும் அமர்களப்படுத்திய நடிகராக திகழ்ந்தார்.
கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், சிவக்குமார், கார்த்திக், பிரபு, அர்ஜுன், ராமராஜன் என பல்வேறு ஹீரோக்களின் படங்களின் காமெடியில் கலக்கியும், கலாய்த்தும் தள்ளியிருப்பார்.
80ஸ் காலகட்டத்தில் முக்கிய காமெடியனாக முத்திரை பதித்தவரும், அடைமொழி பெயர் கொண்ட நடிகராகவும் திகழ்ந்த கல்லாப்பட்டி சிங்காரம், கிழக்கு வாசல் என்ற படத்தில் நடித்தபோது மறைந்தார். அவரது இறப்புக்கு பின்னர் கிழக்கு வாசல் உள்பட மூன்று படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்