Andhagan Review: மீண்டாரா பிரசாந்த்? ஆண்டாரா அந்தகன்? விரிவாக விளாசும் விமர்சனம் இதோ!
Aug 09, 2024, 04:11 PM IST
Andhagan Review: படத்தின் மிகப்பெரிய பலம் கதாபாத்திர தேர்வு. படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியான நடிகர்கள் அமைந்து விட்டதால், அவர்கள் நம்மை கதையோடு ஒன்ற வைக்கிறார்கள். கதையின் மிகப்பெரிய பலவீனம் இசை...ஒரு மியூசிக் த்ரில்லர் படத்தின் இசைக்கு உரித்தான ஒரு சுவடு கூட படத்தில் தெரியவில்லை.
Andhagan Review: இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல நட்த்திரங்கள் நடித்து, இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் அந்தகன். ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக்கான இந்த படத்திற்கு, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார்.
கதையின் கரு என்ன?
பியானோ காதலரான க்ருஷ் ( பிரசாந்த்) மக்களின் அங்கீகாரத்தை பெறவும், பணம் சம்பாதிக்கவும், தான் ஒரு பார்வையற்ற இசைக்கலைஞர் சிம்பதியை உருவாக்கி, ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறான். ஒரு நாள் அவரின் திறமையை பார்த்த நடிகர் கார்த்திக், அவரை தன்னுடைய திருமண நாளன்று, தன் மனைவியான சிமியை சர்ப்ரைஸ் செய்ய வீட்டிற்கு வரச் சொல்கிறார். அதன் படி கிரிஷ்ஷூம் அங்கு செல்கிறான்.
கள்ள உறவில் கார்த்திக்கின் மனைவி
ஆனால், அங்கு கள்ள உறவில் இருக்கும் சிமி, கார்த்திக்கை கொன்று விட்டு, இன்னொருவருடன் உல்லாசமாக இருக்கிறாள். இதனை க்ருஷ் பார்த்து விடுகிறான். க்ருஷ் பார்வை இல்லாதவன் தானே என்று அலட்சியமாக விட்டு விடும் சிமிக்கு ஒரு கட்டத்தில் அவனுக்கு பார்வை இருப்பது தெரிய வருகிறது. இதனையடுத்து என்ன நடந்தது என்பது மீதிக்கதை.
வழக்கம் போல, தன்னுடைய வில்லத்தனத்தில் காமெடி செய்து இருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் பிரசாந்த். ஸ்கிரீன் பிரசன்சில் அதே ஷார்மிங். பல இடங்களில் நடிப்பிலும் ஸ்கோர் செய்யும் பிரசாந்தின் நடிப்பில், அவ்வப்போது செயற்கைத்தனம் வெளிப்படுவது ஏமாற்றம். அவருக்கும், ஜூலிக்கும்( பிரியா ஆனந்த்) இடையேயான காதலில் ஆழம் இல்லை.
சிமியாக, சிம்ரன். நெகட்டிவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர் முழுக்க, முழுக்க இரக்கமே இல்லாத வில்லியாகத்தோன்றி மிரட்டி இருக்கிறார். ஊர்வசியும், யோகி பாபுவும் கிடைத்த கொஞ்ச இடத்தில் காமெடி செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். சமுத்திரக்கனிக்கு முதன் முறையாக மொத்தமாக வேறு மாதிரியான கதாபாத்திரம். ரசிக்க வைத்திருக்கிறார். வனிதாவும், கே எஸ் ரவிக்குமாரும், வழக்கம் போல, தன்னுடைய வில்லத்தனத்தில் காமெடி செய்து இருக்கிறார்கள்.
ரீமேக் மேக்கிங் எப்படி இருக்கிறது?
இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக்தான் அந்தகன். அந்த படத்தின் கதை இயல்பாகவே ஸ்ட்ராங்கானது என்பதால், திரைக்கதையில் மட்டும் நல்ல கவனம் செலுத்தி படத்தை எடுத்தாலே படத்தை ஓரளவு கரை சேர்த்து விடலாம். அதனை தன்னால் முடிந்த மட்டும் செய்ய முயற்சி செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் தியாகராஜன்.
படத்தின் மிகப்பெரிய பலம் கதாபாத்திர தேர்வு. படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு, மிகச் சரியான நடிகர்களை தேர்வு நடிக்க வைத்திருந்தது கதையோடு நம்மை இயல்பாக ஒன்ற செய்திருந்தது. கதையின் மிகப்பெரிய பலவீனம் இசை...ஒரு மியூசிக் த்ரில்லர் படத்தின் இசைக்கு உரித்தான ஒரு சுவடு கூட படத்தில் தெரியவில்லை. படத்தின் மோசமான பின்னணி இசையும், பல இடங்களில் இசை இல்லாததும், படத்தின் சுமாரான திரைக்கதையை இன்னும் சுமாரக்கி விட்டது. கேமராவும் சுமார்தான். திரைக்கதையில் சுவாரசியம் கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்ட தியாகராஜன், அந்த இடத்தில் கோட்டை விட்டது படத்தின் பெரிய ஓட்டையாக மாறிவிட்டது. திரைக்கதையிலும், இசையிலும் இன்னும் சுவாரசியத்தை கூட்டி, திரில்லரை கடத்தி இருந்தால், டாப் ஸ்டார் மீண்டு இருப்பார்.
மேலும் சுவையான சினிமா செய்திகள் மற்றும் விமர்சனத்திற்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பக்கத்தை தொடரவும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்