"பசங்க லவ் மூட்ல இருக்கிறாங்க.. அவன நடிக்க மட்டும் சொல்லுங்கடா" சித்தார்த்தை கலாய்த்த கார்த்தி
Nov 24, 2024, 10:08 AM IST
தமிழ் சினிமா ரசிகர்களிடையே இப்போதும் காதல் படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் காதல் படம் எடுப்பது இல்லை என நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.
செவன் மைல் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார்.
ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
மிஸ் யூ படத்தின் ட்ரெயில் வெளியீடு
‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவ- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இந்தநிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் கார்த்தி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட, நடிகர் சித்தார்த் அதை பெற்றுக்கொண்டார்.
அவன நடிக்க மட்டும் சொல்லுங்கடா..
இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இங்கே வந்து அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே எனக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்த ஞாபகம் வந்துவிட்டது. ஏனென்றால் சித்தார்த் முதல் நாள் படப்பிடிப்பில் சேர்ந்த போது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அவன் போய் அங்கிருக்கும் எல்லோருக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தான். பேக்ரவுண்ட் செக் பண்ணி கொண்டு இருந்தான்.
மணி சார் தாங்க முடியாமல், “டேய் பேசாம அவனை நடிக்க மட்டும் சொல்லுங்கடா” என்று சொன்னார். இங்கே வந்தும் பார்க்கிறேன்.. அதே வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயும் லைட்டை திருப்புங்க.. கதவை மூடுங்க என பேசி வருகிறார் “டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா” என சித்தார்த்தை கிண்டல் செய்தார்.
மிஸ் யூ நாம அதிகமா பேசும் வார்த்தை
இந்த படத்தின் டைட்டில் ‘மிஸ் யூ’. நம் பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தைகள் தான் ‘லவ் யூ’.. ‘மிஸ் யூ’.. அதுல ரொம்ப கேட்சிங்கான வார்த்தையான ‘மிஸ் யூ’வை படத்தின் டைட்டிலாக வைத்து விட்டீர்கள். பசங்க சோசியல் மீடியாவில் போடும் போஸ்ட்டுகள் எல்லாமே லவ் போஸ்ட்டுகளாக இருக்கின்றன.. ஆனால் நாம் ஆக்சன் படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். மறுபடியும் ஒரு ஆக்சன் படமாக எடுத்து, ஒரு லவ் ஃபெயிலியர் பாடல் வைத்து, சரக்கு அடிக்கும் காட்சியை வைத்து நான் படித்த காலத்தில் பார்த்த சினிமா போல இது இருக்கிறது.
சித்தார்த் மட்டும் இன்னும் லவ் பண்ணிட்டு இருக்காரு
எனக்கு விஜய் சார் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் ரொம்பவே பிடிக்கும். அதில் பாடல்கள், காதல், அதை சுற்றி இருக்கும் விஷயங்கள் என இப்போது பார்த்தாலும் அது உற்சாகமூட்டுவதாக இருக்கும். இப்போதும் அது போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை. பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறார் என்பது அவருக்கு ஒரு பெரிய வசதியாக இருக்கிறது.
நாயகி சின்சியரா இருக்காங்க
இந்த படத்தின் நாயகி ஆஷிகா ரங்கநாத் தற்போது சர்தார்-2வில் என்னுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். சிறிய ஊரில் இருந்து வந்தவர் என்றாலும் அவ்வளவு திறமையுடன் மொழி தெரியாவிட்டாலும் சின்சியராக இருக்கிறார். அது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இந்த படத்தில் ரொம்ப அழகாக இருக்கிறார்.
எதுவுமே கத்துக்காம வந்துட்டேன்
நானும் கருணாவும் இப்போதுதான் வா வாத்தியாரே படத்தில் நடித்து முடித்து வந்தோம். அவ்வளவு அழகாக காமெடி வசனங்களை டெலிவரி பண்ணுகிறார். நான் எதுவுமே கத்துக்காமல் சினிமாவுக்கு வந்து, இங்கே தான் கத்துக்கிட்டேன். ஆனால் இன்று எல்லோரும் ஷார்ட் பிலிமில் அசத்துகிறார்கள். வரும்போதே தயாராகி வருகிறார்கள். ஜிப்ரான் நாம் இருவரும் தீரன் அதிகாரம் ஒன்று சேர்ந்து பணியாற்றினோம். விரைவில் இன்னொரு படத்தில் இணைவோம்.
சித்தார்த் செய்ததை மறக்க முடியாது
இயக்குநருக்கு இது மூன்றாவது படம். பெரிய வெற்றி பெற வேண்டும்.. சித்தார்த் நண்பன் மிலிந்த்துக்காக படம் பண்ணியதாக இருக்கட்டும் ‘சித்தா’ படத்திற்கு அவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டு பண்ணியதாகட்டும்அ தை புரமோட் செய்த விதமாகட்டும் அதற்கு கிடைத்த பாராட்டுக்களை பார்க்கும்போது ரொம்பவே பெருமையாக இருக்கிறது.
சென்னை வெள்ளத்தை மறக்க முடியாது. அதில் நீ செய்த விஷயங்கள் எல்லோருக்கும் ஒரு தூண்டுகோலாக இருந்தது. நல்ல விஷயங்களை திரும்ப திரும்ப பேசிக்கொண்டே இருப்பது அவசியமாக இருக்கிறது” என்று கூறினார்.
டாபிக்ஸ்