சித்திரம் பேசி தமிழுக்குள் வந்த அஞ்சாத நாயகன்.. மிஷ்கினின் ஆஸ்தான நாயகன்.. HBD நரேன்..
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, தற்போது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தளபதி 69 வரை ஒவ்வொரு படத்திற்கும் தன் முழு உழைப்பை அளித்து 2ம் இன்னிங்க்ஸை சிறப்பாக கொண்டு செல்கிறார் நடிகர் நரேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, தற்போது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தளபதி 69 வரை ஒவ்வொரு படத்திற்கும் தன் முழு உழைப்பை அளித்து 2ம் இன்னிங்க்ஸை சிறப்பாக கொண்டு செல்கிறார் நடிகர் நரேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
தமிழ் சினிமாவில் ஒரு ரவுடி திருந்தி மனிதனாக வாழ்வது என்பது புதிய கதை அல்ல. அது அரைத்த மாவையே அரைத்த கதைதான். ஆனால், அந்த அரைத்த மாவை வைத்து இயக்குநர் என்ன செய்கிறார். அதை எப்படி மக்களுக்கு விருந்தாக படைக்கிறார் என்பது தானே முக்கியம்.
அரைத்த மாவில் புது விருந்து
அப்படி அரைத்த மாவின் கதையை கையில் வைத்துக் கொண்டு, சித்திரம் பேசுதடி என தனது முதல் விருந்தை மக்களுக்கு படைத்தார் இயக்குநர் மிஷ்கின். இந்த விருந்துக்காக அவர் தயார் படுத்தியவர் தான் நடிகர் நரேன். இவர்கள் இருவரும், தமிழ் மக்களுக்கு மிகவும் புதிதானவர்கள். இதனால், இந்தப் படம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையில் வெளியானது.
பின், அரைத்த மாவில் சித்திரம் பேசுதடி எனும் பக்கா விருந்து படைத்தை அறிந்த மக்கள் இந்தப் படத்தை 100 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓட்டினர். ஏரியா தாதவிற்கு அடியாளாக உள்ள நரேன், நடிகை பாவனாவை பார்க்கும் போதே சண்டை போடுகிறார். பின், மெல்ல மெல்ல இவர்கள் இருவரும் நெருங்கமாகி காதலர்களாக மாறுகின்றனர். இது கதைக்களம்.
மிஷ்கினின் சம்பவம்
இதை அப்படியே கொடுத்தால், அரைத்த மாவு புளித்த மாவாகிவிசடும். அதற்கு இயக்குநர் எழுதிய கதை அமைப்பும், வித்தியாசமான மேக்கிங்கும், நரேனின் அபார நடிப்பும் மிகவும் உதவியது. அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் வெளியான வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட். நடிகை மாளவிகா இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி கொடுத்திருப்பார். அத்துடன் இந்தப் பாட்டில் இருந்துதான் ஆரம்பித்தது. தமிழின் மஞ்சள் சேலை குத்து பாடல்களும், வைப் பாடல்களும்.
இப்படி, தன் முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி, மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்தார் நரேன். ஆனால், இது நரேனுக்கு முதல் படம் அல்ல. இவர் தமிழ் மொழியில் நடிகராக அறிமுகமாகும் முன்னே மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்திருந்தார்.
அஞ்சாதே நாயகன்
இதைத்தொடர்ந்து, நடிகர் நரேன் மீண்டும் மிஷ்கின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், இங்கு கதையும் வேறு களமும் வேறு. இரண்டு நண்பர்கள். இரண்டு கனவுகள். எல்லாம் ஒரே நாளில் மாறினால் என்ன ஆகும் என்பதே கதை.
போலீஸ் வேலையே லட்சியம் என வாழும் அஜ்மலும் பொறுக்கித்தனமாக ஊர் சுற்றும் நரேனும் சிறு வயது முதல் நண்பர்கள். போலீஸ் செலக்ஷனுக்காக காத்திருக்கும் அஜ்மல் அதில் தோல்வியுற்ற நிலையில், அதற்காக கொஞ்சம் கூட மெனக்கெடாமல் போலீஸ் வேலையை பெறுகிறார் மிஷ்கின்.
இதனை துளி அளவும் ஏற்றுக் கொள்ள முடியாத அஜ்மல், எப்படி நரேனை பழி வாங்குகிறார். அதனால், அவருக்கு என்ன நேர்கிறது என்பதை மிக நுணுக்கமாக காட்டியிருப்பார் இயக்குநர் மிஷ்கின்.
இதில், குடித்துவிட்டு ரகளை செய்யும் நபராகவும், துடிப்பான போலீசாகவும் தன் நடிப்பை இரண்டு விதங்களில் காட்டி மிரட்டி இருப்பார் நரேன். இந்தப் படத்திற்கு பின் இவரது பெயர் அஞ்சாதே நரேன் என மாறியதும் உண்டு.
டப்பிங் கலைஞர்
ஆனால், இந்தப் படங்களைத் தொடர்ந்து தமிழில் அவர் பேர் சொல்லும்படியான படங்கள் அதிகளவில் அமையவில்லை. இதனால், அவர் மீண்டும், மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பின் இவர் திரைப்படங்களுக்கு டப்பிங் கொடுக்கும் பணியும் செய்து வந்தார்.
கைதியில் 2ம் இன்னிங்க்ஸ்
இந்நிலையில், தமிழில் நடிகர் நரேனின் இரண்டாம் இன்னிங்க்ஸிற்கு ஏற்பாடு செய்தவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் கதாநாயகனுக்கு அடுத்தப்படியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் நரேன். நேர்மையான மற்றும் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நடித்து மீண்டும் கலக்கி இருப்பார். அஞ்சாதே படத்திற்குப் பின் இவர் மீண்டும் அதே ஃபார்மில் இருப்பதைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
அதைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனின் ஆத்மா எனும் திரைப்படத்தில் தன் மாறுபட்ட நடிப்பை வழங்கி நடித்திருப்பார்.
மீண்டும் மிஷ்கினுடன் கூட்டணி
இந்நிலையில், நடிகர் நரேஷ் இயக்குநர் மிஷ்கினுடன் மீண்டும் இணைந்து தற்போது ட்ரெயின் எனும் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்தக் கூட்டணி 2 மாபெரும் வெற்றிப் படங்களை மக்களுக்கு அளித்த நிலையில், 3வது படமும் மும்மரமாக தயாராகி வருகிறது.
தளபதி 69
அப்போது தான் நடிகர் நரேன், அவரது ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ஒன்றை வழங்கியுள்ளார். அதுதான், மக்கள் ஆரவாரத்துடன் எதிர்பார்த்த தளபதி 69 படம். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளார். இதையடுத்து, நரேன், நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தில் ஏதோ சம்பவம் செய்ய காத்திருக்கிறார் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
போலீசாகவும், ரவுடியாகவும் தன் நடி்பபை இதுவரை வெளிப்படுத்தி வந்த நரேன், தமிழ் மக்களுக்கு தளபதி 69 படத்தில் என்னவாக நடிக்கப் போகிறார் என்ற ஆர்வம் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.
மலையாள நிகழ்ச்சி தொகுப்பாளரான மஞ்சு ஹரிதாஸை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தன்மயா என்ற மகள் உள்ள நிலையில், 15 வருடங்களுக்குப்பின் கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. இந்நிலையில், நடிகர் நரேன் இன்று குடும்பத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் வாழ்த்துகள்.
