சமரசம் பேசும் ஜெயம் ரவி- ஆர்த்தி! 1 மணி நேரத்திற்கு மேலாக நடக்கும் பேச்சுவார்த்தை.. விவாகரத்து வழக்கில் என்ன நடக்கிறது?
Dec 21, 2024, 01:35 PM IST
நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து கோரிய வழக்கில் மனைவி ஆர்த்தியுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் 2009ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமணப் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சமரச பேச்சுவார்த்தை
இந்த மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தப் பேச்சு வார்த்தை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் தங்கள் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து இந்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
விவாகரத்தை அறிவித்த ஜெயம் ரவி
முன்னதாக ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் இருவரும் சில நாட்கள் தனித்தனியே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் கசிந்த நிலையில், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அனைவரின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியிருந்தார்.
ஆலோசிக்காமல் முடிவு
இந்நிலையில், ஜெயம் ரவியின் இந்த முடிவுக்கு பாடகி கெனிஷா தான் காரணம் என்று ஒரு தரப்பும், தன்னிடம் ஆலோசிக்காமலேயே ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார் என ஆர்த்தியும் தெரிவித்து வந்தனர்.
பின் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பேசிய ஜெயம் ரவி, விவாகரத்து குறித்து ஆர்த்திக்கு 2 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் என்றும்; கெனிஷா தனது நண்பர் என்றும், நாங்கள் இருவரும் இணைந்து ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க உள்ளோம் எனவும் ஜெயம் ரவி விளக்கமளித்தார்.
ஆர்த்தியின் அம்மாவால் வந்த பிரிவு?
இந்நிலையில், ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை பிரிந்ததற்கு ஆர்த்தியின் அம்மா சுஜாதா தான் காரணம் என்றும்; இருவரின் குடும்ப விஷயத்தில் தேவையற்ற சில கருத்துகளை முன்வைப்பதே இவர்கள் பிரியக் காரணம் என்றும்; இதனால், அம்மாவைப் பிரிந்து ஆர்த்தி வந்தால் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் குடும்பம் நடத்தத் தயார் எனவும் ஜெயம் ரவிக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கூலாக டீல் செய்த ஜெயம் ரவி
இதற்கிடையில், தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் விமர்சனங்களை முன் வைப்பவர்களுக்கு ஆர்த்தி தனது அறிக்கையின் மூலம் காட்டமான பதிலையும் அளித்து வந்தார். ஆனால், ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் நடிப்பது குறித்தும், இயக்குநர் அவதாரம் எடுப்பது குறித்தும் அப்டேட்டுகளை வழங்கி வந்தார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிரதர் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் தனக்கு எந்தவொரு சூழல் நிகழ்ந்தாலும் தனது ரசிகர்கள் தான் பக்கபலமாக இருக்கின்றனர் என்று பேசினார்.
எனக்கு பணம் பெருசு இல்ல
மேலும், அவர் அளித்த புரொமோஷன் வீடியோக்களில் காசு இன்று வரும் போகும் என்றும் பேசியிருப்பார். இதன்மூலம், திருமண பந்தத்தில் இருந்து ஜெயம் ரவி வெளிவர பணம் ஒரு பொருட்டு இல்லை எனவும், அவரது குடும்பத்தில் இருந்து வந்து தேவையற்ற அழுத்தமே காரணம் எனவும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் எழுதி வந்தனர்.
இன்னும் சில யூட்யூபர்கள், ஆர்த்தியின் அம்மா சுஜாதா ஜெயம் ரவியை வைத்து தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டம் என சொந்த மருமகனிடமே பொய்யாக நஷ்டக்கணக்கு காட்டியதும், ஜெயம் ரவி தன்னிச்சையாகப் பயன்படுத்த எந்தவொரு வங்கி கணக்கைக் கொடுக்காததும் தான் ஜெயம் ரவியின் இந்த பிரிவு நோட்டீஸுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து மனு முன்னதாக சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆஜரானார். ஆர்த்தி காணொலி காட்சி மூலம் ஆஜரானார்.
அப்போது ஜெயம் ரவியிடம் 10 நிமிடங்கள் ஆர்த்தி பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் சமரசப் பேச்சு வார்த்தையை தள்ளி வைக்க வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை வைத்தார். அதனைத்தொடர்ந்து வழக்கை தள்ளி வைத்து சமரச தீர்வு மையம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்