புது உறவில் இணையப்போகும் தனுஷ்.. மீட்டிங் எல்லாம் ஓவராம்.. எல்லாம் ஃப்ரஷ்ஷா இருக்கப் போகுது!
Nov 04, 2024, 02:40 PM IST
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து மீண்டும் இருவரும் தம்பதிகளாக வாழ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது தொடர்ந்து படங்களை இயக்குவதிலும், நடிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் கவனம் தற்போது குடும்பத்தின் பக்கமும் சென்றுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன.
ரஜினி வீட்டில் மீட்டிங்
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஐஸ்வர்யைவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த தனுஷ், தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ தயாரானதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், இதுதொடர்பாக இருவரும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் சந்தித்து பேசினர் எனவும், அந்த சந்திப்பு சுமூகமாக முடிந்ததை அடுத்து இருவரும் ஒன்றாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
விவாகரத்தை ரத்து செய்ய உள்ளனரா?
சில நாட்களாகவே, சமூக வலைதளங்களில் இருவரும் பரஸ்பரமாக செல்லும் நிலையில், ரஜினி நடித்த வேட்டையன் படத்தை குடும்பத்துடன் அனைவரும் ஒரே தியேட்டரில் பார்த்து ரசித்தனர். மேலும், விவாகரத்து வழக்கில் ஐஸ்வர்யாவும், தனுஷும் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வருகின்றனர். இவர்களின் இந்தச் செயல்கள் மீண்டும் குடும்ப வாழ்க்கையில் இணைவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.
தனுஷ்- ஐஸ்வர்யா திருமணம்
நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஷ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா என்ற இரு மகன்களும் உள்ளனர். இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இருவரும் மனம் ஒத்து பிரியப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்தாலும் தனது மகன்களின் பள்ளி நிகழ்வுகளுக்கு இருவரும் ஆஜர் ஆகி அவர்களை பிரிவு பாதிக்காத வண்ணம் வைத்து கொண்டனர். இந்நிலையில் பரஸ்பர முறையில் இருவரும் பிரிவதாக விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கோர்ட்டுக்கு சென்ற விவகாரம்
இவர்கள் இருவரும் பிரிவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் இவர்களின் பிரிவினை தவிர்க்க இவர்களது நண்பர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அது எந்த வித பலனையும் அளிக்க வில்லை எனவும் தெரிய வந்தது. இருவரின் உறுதியான முடிவாக விவாகரத்து இருந்தது. இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி பரஸ்பரம் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், 'கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற எங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இவர்கள் தாக்கல் செய்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகாத காரணத்தால், இந்த வழக்கை 3 முறை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பிஸியாக உள்ள தனுஷ்
தனுஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ராயன் திரைப்படம் நல்ல வசூல் பெற்றுள்ள நிலையில், அதனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது இட்லி கடை எனும் படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் நித்யா மேனன் இணைந்துள்ளார். மேலும் தற்போது வெளியாக இருக்கும் குபேரா படமும் படப்பிடிப்பு முடிந்தாகி விட்டது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு, இயக்கம், நடிப்பு என எல்லாவற்றிலும் பிசியாக இருந்து வருகிறார் தனுஷ். இவரது வேலை காரணமாக ஆஜாராக முடிய வில்லையோ என சந்தேகம் எழுந்துள்ளது.
ரசிகர்களின் எண்ணம்
ஆனால், ஒருபுறம் தனுஷின் ரசிகர்கள் தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணையப் போவது உறுதியாகி உள்ளது எனக் கூறி வருகின்றனர். மேலும், தனுஷ் அவரது மகன்களின் நலனைக் கருத்தில் கொண்டும், ஐஸ்வர்யா அவரது தந்தை ரஜினிகாந்த்தின் நலனைக் கருத்தில் கொண்டும் மீண்டும் ஒன்றாக திருமண வாழ்க்கைக்குள் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாபிக்ஸ்